Published:Updated:

அதிகார யுத்தம்... அலறும் ஊழியர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் வினை விதைக்கிறதா பா.ஜ.க?

கொரோனா காலகட்டத்திலும் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அதிகார யுத்தம் உச்சத்தில் இருக்கிறது. “துணைவேந்தர் குமார் மற்றும் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருமே இருவேறு பா.ஜ.க முக்கியத் தலைவர்களின் பின்புலத்துடன் எதிரும் புதிருமாக சீறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று புலம்புகிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

இது குறித்து உள்விவரங்கள் அறிந்த பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “எங்கள் துணைவேந்தர் குமாருக்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் ஆதரவு இருக்கிறது. அந்த மத்திய அமைச்சரின் சகோதரரும், குமாரின் சகோதரரும் வகுப்பு தோழர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல, பதிவாளர் கிருஷ்ணமூர்த்திக்கு பா.ஜ.க-வின் டெல்லி புள்ளி ஒருவரின் ஆதரவு இருக்கிறது. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை துணைவேந்தர் பதவி பெரிதாகத் தெரிந்தாலும், நிர்வாகரீதியான முடிவுகளை பதிவாளர்தான் எடுக்க முடியும். அங்குதான் பிரச்னை தொடங்கியது. நிர்வாகரீதியாக குமாரின் எண்ணங்களுக்கு நேர்மாறாக கிருஷ்ணமூர்த்தி முடிவெடுக்கிறார்.

அதிகார யுத்தம்...  அலறும் ஊழியர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த கொரோனா காலகட்டத்திலும் 90 துணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட 325 பேரை வெவ்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். துணைவேந்தர் குமார், விருப்பப்பட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் இடமாற்றம் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி விருப்பம் தெரிவிக்காத சிலரையும் இடமாற்றம் செய்துவிட்டார். இதில், இருவருக்கும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்னொரு பக்கம், பல்கலைக்கழகத்தில் சாதிச் சண்டைகளும் பற்றி எரிகின்றன. கிருஷ்ணமூர்த்தி, கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் சமூகத்தைச் சேர்ந்தவர். குமார் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இதை முன்வைத்தும் பல்கலைக்கழகத்தில் இரு வேறு கோஷ்டிகள் லாபி செய்கின்றன. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் பலரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட பணி இடமாற்றத்தை எதிர்த்து சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தவிர, பணியிடங்கள் நிரப்பப்படும்போது, இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும். அதுவும் இங்கு பின்பற்றப்படுவதில்லை.

இதற்கு முன்பு கு.ராமசாமி இங்கு துணைவேந்தராக இருந்தபோது, இப்போதைய பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி காளான் உயிரி தொழில்நுட்பப் பிரிவில் இருந்தார். அப்போதே அவர்களுக்குள் நன்கு பழக்கம் இருந்தது. குமார் துணைவேந்தரானவுடன், முன்னாள் துணைவேந்தரான ராமசாமிக்கு வேண்டப்பட்ட சிலரை பணி இடமாற்றம் செய்தார். இதில் பிரச்னை பெரிதானது. தவிர, இன்னமும் ராமசாமிதான் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்.

குமார்,கிருஷ்ணமூர்த்தி, கு.ராமசாமி
குமார்,கிருஷ்ணமூர்த்தி, கு.ராமசாமி

சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் விடப்பட்ட சர்குலரில், ‘பல்கலைக்கழக பிரச்னைகளை எம்.பி., எம்.எல்,ஏ., அமைச்சர் போன்றோரிடம் கொண்டு செல்வது, முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற வேண்டும். இல்லை யென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் செய்யும் குளறுபடிகளை நீதிமன்றத்திலும், மேலிடத்திலும்தானே முறையிட முடியும், அதை செய்யக் கூடாது என்றால் எப்படி? அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது வரவேற்கத்தக்கது. அது, அந்த உத்தரவு போட்டவர்களுக்கும் பொருந்தும் தானே?” என்று தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

இது குறித்து முன்னாள் துணைவேந்தர் கு.ராமசாமியைத் தொடர்புகொண்டு கேட்டோம். “வேளாண் பல்கலைக்கழகத்தைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இப்போது எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எதுவாக இருந்தாலும் நிரூபிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “எனக்கும் துணைவேந்தர் சாருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இருவரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம். விதிகளுக்கு மாறாக நாங்கள் எந்த விஷயத்தையும் செய்யவில்லை. பணியாளர்கள் இடமாற்றத்திலும் பாரபட்சம் பார்க்கவில்லை. இந்தப் பொறுப்புக்குக்கூட மெரிட்டில்தான் நான் வந்துள்ளேன். யாரிடமும் எதற்காகவும் நான் சென்று நின்றதில்லை. முன்னாள் துணைவேந்தர் ராமசாமி எனக்கு நண்பர்தான். ஆனால், பல்கலைக்கழகம் தொடர்பாக நாங்கள் எதுவும் பேச மாட்டோம்” என்றவரிடம் “உங்களுக்கு பா.ஜ.க முக்கியப் பிரமுகர் ஒருவரின் பின்னணி இருக்கிறது என்று கூறுகிறார்களே?” என்று கேட்டோம். “எனக்கு எந்தக் கட்சிப் பின்னணியும் கிடையாது” என்று மறுத்தார்.

துணைவேந்தர் குமாரிடம் பேசினோம். “எங்கள் இருவருக்குள் பிரச்னை என்பது தவறான தகவல். கிருஷ்ணமூர்த்தியை நான்தான் பதிவாளராக நியமித்தேன். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுப்பதற்காக விஷமிகள் சிலர் இப்படியான தகவல்களைக் கசியவிட்டிருப்பார்கள். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை” என்றார்.

முன்னத்தி ஏராகச் செயல்பட வேண்டிய கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் பின்னோக்கிச் சென்றால் மாணவர்களின் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்!