கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்துத் தரப்பிலும் நிதி நெருக்கடி பரவி இருக்கிறது. இது தனிநபர், நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குத் தேவையான கூடுதல் நிதியைத் திரட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசும் அனைத்து வழிகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு நேரடி வரி மற்றும் மறைமுக வரி முக்கிய வருமானமாக இருக்கிறது. தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பெறப்படும் டிவிடெண்டும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. அதனால் கூடுதல் டிவிடெண்டைப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
5 சதவிகிதத்துக்குமேல் டிவிடெண்ட்...
பொதுத்துறை நிறுவனங்கள் கூடுதல் டிவிடெண்ட் வழங்க வேண்டும், காலாண்டு அடிப்படையில் டிவிடெண்ட் வழங்க வேண்டும் எனப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. 30% லாபம் அல்லது நிறுவனத்தின் நிகர மதிப்பில் (நெட்வொர்த்தில்) 5% வரை குறைந்தபட்ச டிவிடெண்ட் இருக்கலாம் என விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்தபட்ச டிவிடெண்ட் வழங்காமல் கூடுதல் டிவிடெண்ட் வழங்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவம்பர் 9-ம் தேதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள் (முகமதிப்பில் 100%) காலாண்டு அடிப்படையில் டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்றும், இதர பொதுத்துறை நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இது போல, கூடுதல் டிவிடெண்ட் வழங்குவது மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், சிறு முதலீட்டாளர்களுக்கும் வழங்குவது நல்லது எனக் கூறப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான டிவிடெண்ட் கிடைத்தால், பொதுத்துறை நிறுவன பங்குகளில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு உயரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
குறையும் அரசு வருமானம்...
நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4.6 லட்சம் கோடி ரூபாய் வரி மூலம் வசூலாகி இருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 32.6% குறைவாகும். அதனால் இதர நிதி திரட்டும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களின் டிவிடெண்ட் மூலமாக நடப்பு நிதி ஆண்டில் ரூ.66,000 கோடி வரை நிதி திரட்ட மத்திய அரசு திட்ட மிட்டிருக்கிறது. (இதுவரை ரூ.10,000 கோடி அளவுக்கு மட்டுமே டிவிடெண்ட் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது)
லாபத்தில் 57% டிவிடெண்ட்...
55 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் ரூ.47,000 கோடிக்கு டிவிடெண்ட் வழங்கியுள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களின் கடந்த நிதி ஆண்டு லாபம் ரூ.82,750 கோடி மட்டுமே. அதாவது, லாபத்தில் இருந்து சுமார் 57% அளவுக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது. நிஃப்டி 50 பட்டியலில் உள்ள நிறுவனங்கள் சுமார் 45% அளவுக்கு மட்டுமே டிவிடெண்ட் வழங்கி இருக்கக்கூடிய சூழலில், பொதுத்துறை நிறுவனங்கள் 57% அளவுக்கு டிவிடெண்ட் தந்திருப்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
அதிகரிக்கும் கடன்...
டிவிடெண்ட் அதிகமாகத் தரப்பட்டிருக்கும் அதே சூழலில் நிறுவனங்களின் லாபமும் சீராக சரிவடைந்து வருகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2019-ம் நிதி ஆண்டு முடிவில் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.7.25 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டு மார்ச் மாத முடிவில் ரூ.8.74 லட்சம் கோடியாக கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 15.3% என்னும் அளவுக்குக் கடன் அதிகரித்து வருகிறது.
டிவிடெண்ட் கேட்பது அரசின் உரிமை
பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசாங்கம் கூடுதல் நிதி கேட்பது குறித்து பங்குச் சந்தை ஆய்வாளர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

‘‘இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அதிக நிதி கேட்பதைத் தவறு எனக் கூற முடியாது. டிவிடெண்ட் கேட்பது அரசின் உரிமையும்கூட.ஆனால், பொதுத்துறை வங்கிகளுக்குக் கடன் இருக்கும்போது, அதிக டிவிடெண்ட் தரலாமா என்னும் கேள்வியும் எழும் வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு டிவிடெண்ட் தரலாம் என்பதைப் பொறுத்து இதற்கான பதில் இருக்கும்.
உதாரணமாக, ரூ.100 நிகர லாபம் என்றால், 20% வரி, 30% கடனுக்குச் செலுத்த, 30% டிவிடெண்ட் கொடுக்க என்கிற மாதிரி சரிவிகித அளவில் இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. சில பொதுத்துறை நிறுவனங்களில் (கொச்சின் ஷிப்யார்டு, எம்.ஓ.ஐ.எல் பால்மர் லாறி) வலுவான நிதிநிலையில் உள்ளன. அந்த நிறுவனங்களில் இதுபோல சரிவிகித அளவில் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது’’ என சொக்கலிங்கம் கூறினார்.
டிவிடெண்ட் வழங்குவதால் அரசுக்கு மட்டுமல்லாமல் சிறுமுதலீட்டாளர்களுக்கும் நல்லது என்றாலும், மொத்த லாபத்தையும் டிவிடெண்ட் மூலமாகப் பங்குதாரர்களுக்குக் கொடுத்துவிடுவது சரியான விஷயமாக இருக்காது. பிற்பாடு ஏதோ ஒரு சூழ்நிலையில் நிறுவனத்துக்குப் பணம் தேவை எனில், கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போது வட்டிக்கு அதிகம் செலவு செய்தால், லாபம் கணிசமாகக் குறையும். இதைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் செயல்படுவதே சரி என்கிறார்கள் நிபுணர்கள். இந்த விஷயத்தில் நிறுவனங்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.