Published:Updated:

`கொரோனா நோயாளிகள் இனி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை ரொக்கமாக செலுத்தலாம்!' - அரசு அனுமதி

COVID-19 (Representation Image)
COVID-19 (Representation Image) ( AP Photo / Jae C. Hong )

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் 2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை ரொக்கமாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் கட்டணத்தை கண்டபடி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இம்மருத்துவமனைகள் கட்டணத்தை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதன்படி, 2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணமாக இருந்தால் நோயாளிகள் அதை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும், ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது.

income tax notice
income tax notice

ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் கட்டணத்தை ரொக்கமாகக் கொடுக்க வேண்டும் என்று நோயாளிகளை நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால், அதற்கு வருமான வரிச்சட்டம் அனுமதிக்கவில்லை. இன்னொரு பக்கம், கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரங்களில்கூட பெரும்பாலானோருக்கு நெட் பேங்கிங் வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியும் என்ற கேள்வி எழுந்தது. எனவே, சிகிச்சைக் கட்டணத்தை ரொக்கமாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நோயாளியின் உறவினர்கள், மருத்துவமனை தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இம்மாதம் 31-ம் தேதி வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை ரொக்கமாகக் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மருத்துவமனைகள் பெறும்போது நோயாளி, நோயாளிக்கு பணம் கொடுப்பவரின் ஆதார் கார்டு அல்லது பான் கார்டு விபரத்தைப் பெற வேண்டும் என்றும், பணம் கொடுப்பவர் நோயாளிக்கு என்ன உறவு என்பதையும் கேட்டுப் பெற வேண்டும் என்றும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனவே கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், டிஸ்பென்சரிகள், நர்ஸிங் ஹோம்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவை இனி ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ரொக்கமாக வாங்கலாம். வரும் மே 31-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். மக்களின் இன்னல்களை குறைக்கும் வகையில் இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samples to test for COVID-19
Samples to test for COVID-19
AP Photo / Dar Yasin

முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ``கொரோனா நோயாளிகள் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தும் வகையில் விதிகளைத் தளர்த்துவது குறித்து வருமான வரித்துறை பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ஒருவர் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ரொக்கமாகக் கொடுக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு