Published:Updated:

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா

கும்மிருட்டு... குடிக்கத் தண்ணீர் இல்லை... குடோன்போல மாறிய ஜெயலலிதா அறை...

தமிழக அரசியலில் மறக்க முடியாத பால்கனி அது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் மீண்டெழுந்த தருணங்களிலெல்லாம் அங்கு நின்று வெற்றிப் புன்னகையுடன் கையசைக்கும் காட்சி, அ.தி.மு.க தொண்டர்களின் மனதில் என்றென்றும் நிழலாடும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் அதிகார மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சாவியைப் பெற்றுக்கொண்டு டிசம்பர் 11-ம் தேதி வேதா நிலையத்துக்குள் தீபா, தீபக் சென்று, அந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்றனர். போயஸ் கார்டன் வீட்டை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நினைவு இல்லமாக அவசரகோலத்தில் மாற்றியபோது கடைசியாகப் பலரும் அங்கு வந்து சென்றனர். அதன் பிறகு பல மாதங்களாகப் பூட்டியே கிடந்தது. இப்போது அது பழைய வேதா இல்லமாக இல்லை. ‘இனி அந்த வீடு என்னவாகும்?’ என்பதே பலரது கேள்வி.

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

வழக்கமாக, போயஸ் கார்டன் பின்னி சாலைக்குள் எந்த வாகனம் நுழைந்தாலும், காவலர்களின் கேள்விகளைக் கடந்த பிறகே அடுத்து நகர முடியும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிலைமை அதுவாகத்தான் இருந்தது. ஆனால், டிசம்பர் 11-ம் தேதி அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. முதன்முறையாக தீபாவும் தீபக்கும் போயஸ் இல்லத்துக்கு வருவதால், சம்பிரதாயத்துக்காக போலீஸார் சிலர் மட்டுமே நின்றிருந்தார்கள். வீட்டின் வாசலில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த ‘ஜெயலலிதா நினைவு இல்லம்’ பேனர் அப்படியே இருந்தது. அதிகாரத்தின் உச்சாணியில் இருந்தவர்கள்கூட நெருங்குவதற்குத் தயக்கம் காட்டிய அந்தக் கரிய நிற இரும்பு கேட், பழைய கம்பீரத்தை இழந்து தூசு படிந்து காட்சியளித்தது.

கேட்டைத் தாண்டியவுடன், வலப்பக்கத்தில் சிறு தோட்டம் இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால், அங்கு புதர்கள் மண்டியிருந்தன. தோட்டத்திலிருந்த ஒரு மோட்டாரும், சிசிடிவி கேமராக்களும் பழுதடைந்திருந்தன. தீபா, தீபக் வருவதற்கு முன்பாக வேதா நிலையத்துக்கு வந்த அவர்களின் உறவினர்கள் சிலர், அக்கம் பக்கத்தில் பணியாற்றிய பணியாட்களின் துணையுடன், வீட்டின் போர்டிகோவில் குவிந்திருந்த குப்பையைச் சுத்தம் செய்தார்கள். அப்படியிருந்தும் முழுமையாகச் சுத்தம் செய்ய முடியவில்லை.

வீட்டின் பக்கவாட்டை ஒட்டி, கிச்சன் வரை செல்வதற்குத் தனி வழி இருக்கிறது. அந்தப் பாதையிலும் குப்பைகள் குவிந்திருந்தன.

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

வீட்டில் காய்ந்த உள்ளாடைகள்!

வீட்டை ஒட்டி பணியாட்கள் தங்குவதற்கும், ஜெயலலிதாவின் முகாம் அலுவலகத்துக்கும் தனியாக ஒரு கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தின் பின்புறமுள்ள இரண்டு தென்னை மரங்களும் பட்டுப்போயிருந்தன. அன்றைக்கு வீட்டுக்கு வந்திருந்த சிலர், சிறுநீர் கழிப்பதற்காக அங்கு ஒதுங்கியது அன்றைய தின அதிர்ச்சியளிக்கும் காட்சிகளில் ஒன்று. வீட்டின் வலப்புறத்தில் இரண்டு பெரிய ஜெனரேட்டர்களுடன்கூடிய ‘பவர் ரூம்’ இருக்கிறது. வீட்டைச் சுத்தம் செய்ய வந்திருந்த பணியாட்கள் சிலர் தங்கள் உள்ளாடைகளைத் துவைத்து அங்கு காயவைத்திருந்தார்கள்.

வீட்டுக்கு வந்த தீபாவும், அவர் கணவர் மாதவனும் வாசலில் மாட்டிவைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்கள். பிறகு தீபா, தீபக் இருவரும் ஒன்றாக வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றார்கள். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. நீண்ட தேடலுக்குப் பிறகுதான், மெயின் சுவிட்சைக் கண்டுபிடித்து ‘பவர் ஆன்’ செய்ய வேண்டியிருந்தது. அதன் பிறகும் ஒருசில அறைகளுக்கு மட்டும் பவர் சப்ளை வந்தது. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தீபா, தீபக், அவர்களின் உறவினர்கள், தீபாவின் கணவர் மாதவன், வழக்கறிஞர்கள் மட்டுமே சென்றார்கள். வீட்டின் முதல்தள வராண்டாவில் நின்றபடி, தீபாவும் மாதவனும் கீழே கூடியிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கையசைத்தார்கள்.

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

‘‘அத்தை இந்த ரூம்லயா இருந்தாங்க?’’

“வேதா நிலையம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறது?” என்று தீபாவின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘வீட்டின் முதல் தளத்திலுள்ள ஒரு ஏ.சி-யின் வயர் எப்போதோ தீப்பிடித்திருக்கிறது. நல்லவேளையாக தீ மற்ற இடங்களுக்குப் பரவவில்லை. வயர் கருகியவுடன் ‘ஃப்யூஸ்’ போயிருக்கிறது. இதனால்தான், மெயின் சுவிட்ச்சை ஆன் செய்தும்கூட ஒருசில அறைகளுக்கு கரன்ட் வரவில்லை. பூஜை அறையும் நூலகமும் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானவை. அவை தூசு படிந்து, சிலந்திகள் வலை பின்னிய நிலையில் இருந்தன. ஜெயலலிதா இருந்தபோது, முக்கியமான சில பண்டிகைக்கால பூஜைகளில் கலந்துகொள்ள நாங்கள் வந்திருக்கிறோம். அப்போது பூஜை அறையிலிருந்த பொருள்கள், பூஜை சாமான்கள் பலவும் இப்போது காணவில்லை. நூலகத்திலிருந்த புத்தகங்கள் செல்லரித்திருக்கின்றன.

ஜெயலலிதா வசித்த அறை விசாலமானது. இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்ட அந்த அறையில் மரச் சாமான்களைப் போட்டு குடோன்போல வைத்திருக்கிறார்கள். அந்த அறையைப் பார்த்தவுடன் தீபா கோபமாகிவிட்டார். ‘அத்தை இந்த ரூம்லயா தங்கியிருந்தாங்க? இந்த வீட்டுல எதுவுமே அவங்க டேஸ்ட்டுல இல்லை. வீட்டையே ‘டல் கலர்’ அடிச்சுவெச்சுருக்காங்க. என் அத்தை கூட இருந்தவங்க விருப்பப்படிதான் இந்த வீட்டுல எல்லாமே இருந்திருக்குது’ என்று வருத்தப்பட்டார்.

சில அறைகளில் விளக்குகள் எரியாததால், கும்மிருட்டில் மொபைல்போன் டார்ச் அடித்துப் பார்வையிட்டோம். கிச்சன், பாத்ரூம்களிலிருந்த பைப்புகள் துருப்பிடித்திருந்தன. இவ்வளவு பெரிய வீட்டில் எங்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை. அருகில் கடைகளும் இல்லாததால், ஆப்-பில் ஆர்டர் செய்துதான் டிபன், தண்ணீர் பாட்டில் வாங்கினோம். இந்த வீட்டைச் சுத்தம் செய்வதற்கே பல வாரங்கள் ஆகிவிடும். முறைப்படி கணபதி ஹோமம் செய்த பிறகே தீபா, தீபக் இருவரும் குடிபுக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஜெயலலிதா வசித்த அறையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யாமல், நினைவகமாக வைத்துக்கொள்ள தீபா விரும்புகிறார். அதற்கு தீபக் உடன்பட்டால் சச்சரவு எழாது” என்றனர்.

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

வீட்டின் முக்கியத்துவம் காக்கப்படுமா?

வேதா நிலையத்துக்கு வழங்கப்பட்ட சொற்ப எண்ணிக்கையிலான காவலர்களின் பாதுகாப்பும் விரைவிலேயே விலக்கிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இனி வீட்டின் பாதுகாப்புக்கு தீபா, தீபக் இருவரும்தான் பொறுப்பு. நம்மிடம் பேசிய தீபாவின் சித்தி ராஜி, “தீபாவின் அம்மாதான் எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரி. நாங்கள் மொத்தம் எட்டுப் பெண் பிள்ளைகள். இன்றும் நாங்கள் நல்ல தொடர்பில்தான் இருக்கிறோம். தீபாவைச் சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவள் நான். ஜெயலலிதாவின் குணம் அத்தனையும் தீபாவிடமும் உண்டு. ஜெயலலிதாவின் இந்தச் சொத்து, வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. வீட்டை அவர்கள் நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

இதற்கிடையே ‘வீட்டை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் ஒத்துழைக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க தலைவர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கோரிக்கையை தீபா, தீபக் இருவருமே ஏற்கும் மனநிலையில் இல்லை. ‘அத்தையின் பேனா ஒன்றே போதும்... சொத்து எதுவும் வேண்டாம்’ என்று ஒருகாலத்தில் கூறிய தீபாவைத் தேடி வந்திருக்கிறது சொத்து. வீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருவரும் வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதே, ஜெயலலிதாமீது அன்புகொண்டவர்களின் விருப்பம்.

பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

ஏன் இந்த அவசரம்?

‘போயஸ் கார்டன் சொத்து தீபா, தீபக்குக்குச் சொந்தம்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டவுடனேயே, வீட்டின் சாவிக்கொத்தை தீபா, தீபக் வசம் ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு. நீதிமன்ற உத்தரவை இவ்வளவு வேகமாக அரசு செயல்படுத்தியதன் பின்னணியில் அரசியலும் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்துவருகிறார். இதற்கிடையே, ‘ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் மீண்டும் ஒருமுறை அதிகார பிம்பமாக மாறிவிடக் கூடாது’ என்பதில் தீர்மானமாக இருக்கிறது தி.மு.க அரசு. அதனால்தான் சென்னை கலெக்டரிடம் தீபாவும் தீபக்கும் மனு கொடுத்ததும், அவர்கள் கையில் சாவியைக் கொடுத்துவிட்டனர். நாங்கள் நீதிமன்றம் போவதற்குள் தி.மு.க அரசு அவசரம்காட்டியிருக்கிறது” என்றார்.