Published:Updated:

`16 வயதில் மாயம்; 28 வருட வனவாசம்!’ - மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்த ராஜஸ்தான் இளைஞரின் கதை

``28 வருடங்களுக்குப் பின்பு நான் திரும்பி வந்ததை எனது உறவினர்களால் நம்பமுடியவில்லை'' என கண்ணீருடன் விவரித்தார் பிரேம்.

பிரேம் குடும்பம்
பிரேம் குடும்பம்

ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரேம் பார்கவ் 28 வருடங்களுக்குப் பிறகு தன் உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹமிர்பூரா கிராமம்தான் பிரேமின் சொந்த ஊர். 6 வயதாக இருக்கும்போது பிரேமின் தந்தை உயிரிழந்துவிட்டார். அவருக்கு 14 வயதாக இருக்கும்போது தாயும் இறந்துவிட்டார். இதையடுத்து, மாமாவின் அரவணைப்பில்தான் பிரேம் இருந்துள்ளார். அப்போது லாரி கிளீனராக வேலை செய்து வந்துள்ளார். அப்படி ஒரு முறை பணியில் இருந்தபோது பிரேமின் தலையில் யாரோ பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்துள்ளார். கண் விழித்துப் பார்த்தபோது காட்டுக்குள் இருந்துள்ளார். 28 வருடம் நரக வேதனையை அனுபவித்த பிரேம் கடந்த சில நாள்களுக்கு முன் தன் சொந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளார். தன் குடும்பத்துடன் இணைந்துவிட்டார்.

காடுகள்
காடுகள்

அந்த நாள்கள் குறித்துப் பேசிய பிரேம் பார்கவ், ``மயக்கமடைந்த பின் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது ஒரு காட்டுக்குள் இருந்தேன். அங்கிருந்த மக்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. பழங்குடியின மக்கள் வசிக்கும் காட்டுப்பகுதி என்பது மட்டும்தான் தெரிந்தது. குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்தார். அவர்தான் அந்தப்பகுதி அசாம் என்றும் இருவரும் கடத்தி வரப்பட்ட விவரத்தை எனக்குத் தெரிவித்தார். எங்களைப்போல் நிறைய பேர் அங்கு கடத்திவரப்பட்டிருந்தனர். அங்கிருந்த டீ எஸ்டேட்டில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டோம்.

அந்த வாழ்க்கை மிகவும் நரகமானதாக இருந்தது. கடத்தல்காரர்கள் அடிக்கடி தங்கள் இடங்களை மாற்றிவந்தனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும்போது கண்களைக் கட்டி அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் காடுகளில் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர். உடுத்துவதற்குக்கூட சரியான ஆடைகள் இல்லை. காட்டுத்தீ ஏற்பட்டதையடுத்து எங்கள் குழுவில் இருந்த அனைவரும் அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து காடுகளின் நடுவே ஓடத்தொடங்கினோம். அதில் மூவர் அவர்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களைக் கொலை செய்துவிட்டனர். நான் மாதக்கணக்கில் அந்தக் காடுகளில் உலாவிக்கொண்டிருந்தேன். ஒருவழியாக நான் சாலையை வந்தடைந்தேன்.

பிரேம் குடும்பம்
பிரேம் குடும்பம்

ஒரு லாரி டிரைவர் எனக்கு உதவினார். அவர் என்னை ஜான்சியில் இறக்கிவிட்டார். அங்கு சில மாதங்கள் பணிபுரிந்தேன். அங்கிருந்து சில காசுகளை சம்பாதித்து ஜோத்பூருக்குத் திரும்பினேன். பின்னர் அங்கிருந்து எனது கிராமத்துக்கு வந்தேன். இங்கு நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஒரு வழியாக எனது மாமா வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். 28 வருடங்களுக்கு பின்பு நான் வந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை” எனக் கண்ணீருடன் பேசினார். இதுகுறித்து பேசிய பிரேமின் மாமா ராம், ``இதுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி, கடவுள் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பினார். எனது மாப்பிள்ளை 28 வருடம் வனவாசம் முடிந்து வீடு திரும்பியுள்ளார்” எனக் கூறினார்.