Published:Updated:

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

நாகநதி
பிரீமியம் ஸ்டோரி
நாகநதி

இதனால் இரண்டுவிதமான பலன்களைக் கண்டோம். ஒன்று, இந்தக் கிணறுகள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

இதனால் இரண்டுவிதமான பலன்களைக் கண்டோம். ஒன்று, இந்தக் கிணறுகள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது

Published:Updated:
நாகநதி
பிரீமியம் ஸ்டோரி
நாகநதி

100 நாள் வேலைத்திட்டத்தில், வேலையே செய்வதில்லை... சும்மா உட்கார்ந்திருந்து சம்பளம் வாங்குகிறார்கள் என்றெல்லாம் புகார்கள் உண்டு. இன்னொரு பக்கம், சீமான் உட்பட பலரும் ‘விவசாயத்தை அழித்ததே 100 நாள் வேலைத் திட்டம்தான்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் வேலைசெய்யும் 2,000 பெண்கள் இணைந்து வறண்டு கிடந்த ஒரு நதிக்கு உயிர்கொடுத்து மீட்டெடுத்திருக்கிறார்கள். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தப் பெண்களைப் பாராட்டிப் பேச, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது இந்த நற்செயல்.

ஜவ்வாது மலையில் உள்ள செண்பகத்தோப்பு அருவி, பீம அருவி, மிருகண்ட அணையிலிருந்து வரும் ஓடைகள் அமிர்தி வனத்தின் அடிவாரத்தில் இணைந்து நாக நதியாக உருவெடுக்கின்றன. நாகநதி, முன்பு எல்லாக் காலங்களிலும் நீரோடும் ஜீவநதியாக இருந்தது. ஒரு கட்டத்தில் நகரத்துக்கழிவுகள் கலந்து அதன் முகம் மாறியது. மழைக்காலத்தில் ஓரிரு நாள்கள் தண்ணீர் வருவதும் பிறகு காய்ந்துபோவதுமாகப் பொலிவிழந்துபோனது. அதனால் நிலத்தடி நீர் வற்றி, அருகில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் பலநூறு அடி கீழே சென்றது. இந்தச்சூழலில் 2014-ல் இந்த நதியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் இறங்கியது வாழும் கலை அமைப்பு.

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

“ ‘வாழும் கலை’ அமைப்பு ஏற்கெனவே பெங்களூரில் உள்ள குமுதவதி நதியைப் புனரமைத்திருக்கிறது. அந்த அனுபவத்தில்தான் நாகநதியையும் கையில் எடுத்தோம். புவியியல் நிபுணர்கள் டாக்டர் லிங்கராஜ்,

எஸ்.கே.சுப்பிரமணியன் இருவரும் நீரோடைகள், குளங்கள், மழைப்பொழிவு என அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்து செயல்திட்டத்தை வகுத்துத் தந்தார்கள். ‘நதியில் எதுவும் செய்யத்தேவையில்லை. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்தினால் மழை பெய்யாத காலங்களிலும் தண்ணீர் ஓடும்’ என்றார்கள். அவர்களின் வழிகாட்டுதல்படி சலமநத்தம் என்ற கிராமத்தில் நாகநதிக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் ஓடைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் செறிவூட்டும் கிணறுகளையும் கற்தடுப்புகளையும் உருவாக்கினோம். அதன்மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை மாடலாக வைத்து ஒரு திட்டத்தைத் தயாரித்து வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநரிடம் சமர்ப்பித்தோம். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம். மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஒப்புக்கொண்டு உடனடியாகச் செயலில் இறங்கியது” என்கிறார் ‘வாழும் கலை’ ஆசிரியரும் நாகநதி புனரமைப்புத் திட்ட இயக்குநருமான முனைவர் சந்திரசேகரன் குப்பன்.

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

ஓடைகளுக்கு நடுவில் 6 அடி அகலம், 15 அடி நீளம், 20 அடி ஆழத்துக்குக் கூம்பு வடிவில் பள்ளம் வெட்டி 3 அடி விட்டம் கொண்ட சிமென்ட் உறைகளை உள்ளே இறக்கினார்கள். உள்ளேயும் பக்கவாட்டிலும் ஜல்லிகள் கொட்டி அந்தக் கிணற்றை மேலுறை போட்டு மூடிவிட்டார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து ஓடை நெடுகக் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. கிணறுகளுக்கு முன்பாகக் கற்களை அடுக்கி, அவை அரித்துச் செல்லாமலிருக்க வலையைப் பின்னி, சிறுசிறு தடுப்புகளை உருவாக்கியுள்ளார்கள்.

“இதனால் இரண்டுவிதமான பலன்களைக் கண்டோம். ஒன்று, இந்தக் கிணறுகள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. பல ஆண்டுகளாக வறண்டிருந்த விவசாயக் கிணறுகளில் தண்ணீர் மேலே ததும்பி நிற்கிறது. விவசாயம் மேம்பட்டிருக்கிறது. தமிழகக் குடிநீர் வாரியம் மற்றும் மத்தியக் குடிநீர் ஆராய்ச்சி நிறுவனம் இந்தப்பகுதிகளில் ஆய்வு செய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதையும் தண்ணீரின் தரம் கூடியிருப்பதையும் உறுதி செய்துள்ளன. இன்னொரு பலன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஊற்றுகள் உருவாகியுள்ளன. மழைக்காலத்தில் மட்டும் நீர் ஓடிய நாகநதியில் இப்போது எல்லா நேரங்களிலும் தண்ணீர் ஓடுகிறது. கண்முன்னால் ஏற்பட்டுள்ள மாற்றம் இது...” என்கிறார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

பள்ளம் தோண்டுவது தொடங்கி உறை இறக்குவது வரை முழுக்க முழுக்க பெண்களே இந்தப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். பயிற்சி, ஆய்வு, கண்காணிப்புப்பணிகளை ‘வாழும் கலை’ அமைப்பு செய்ய, ஊரக வளர்ச்சித்துறை பணிகளை ஒருங்கிணைத்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 354 கிணறுகள் வெட்டி முடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 410 கிணறுகள் வெட்டத் திட்டமிட்டுள்ளார்கள். அங்கு இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

பாலம்பாக்கம் கிராமத்திற்குச் சென்றோம். பசுமையாக இருக்கிறது ஊர். ஊரைச்சுற்றிலும் இருக்கும் ஓடைகளில் உறை கிணறுகளும், தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

“நானறிஞ்சு கடந்த பத்து வருஷத்துல கிணத்துல இப்படித் ததும்பி நிக்குற தண்ணியைப் பாத்ததில்லை. எங்கூர்ல எல்லாக் கிணறுகளும் நிறைஞ்சிருக்கு. போன வருஷமும் சரி, இந்த வருஷமும் சரி, வேளாண்மை நல்லாவே வந்திருக்கு. இயற்கை வேளாண்மைதான் செய்றேன். கிச்சடி சம்பா அறுக்கப்போறேன்...” என்று மகிழ்ச்சியாகப் பேசுகிறார் விவசாயி மணி.

உறை கிணறுகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள் 100 நாள் வேலைத்திட்டப் பெண்கள். “ஆரம்பத்துல ரொம்ப சிரமமான வேலையாத்தான் தோணுச்சு. ‘உங்க ஊரோட வளர்ச்சிக்கு நீங்க உழைக்கிறீங்க... சந்தோஷமா செய்ங்க’ன்னு அதிகாரிகள் சொன்னாங்க. ஒரு கிணத்துக்குப் பத்துப் பெண்கள் பொறுப்பெடுத்துக்கிட்டுச் செஞ்சோம். எங்க ஊர்ல மொத்தம் 12 கிணறு வெட்டியிருக்கோம். கண் முன்னால பலன் தெரியுது. நாகநதியிலயும் நன்னீர் ஓடுது...” என்கிறார் 100 நாள் வேலைத்திட்டத்தின் பணித்தளப் பொறுப்பாளர் விஜயா.

நாகநதியில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம் பிற நதிகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

நம்பிக்கை சுரக்கும் நாகநதி!

“அகரம் ஆறு, கவுண்டன்ய மகாநதி, மலட்டாறு, பம்பாறு, மத்தூர் ஆறு உட்பட வேலூர் மாவட்டத்திலிருக்கும் பிற ஆறுகளின் நீர்ப்பிடிப்பு ஓடைகளிலும் இந்தச் செறிவூட்டும் கிணறு அமைக்கப்பட்டுவருகிறது. இதுவரை 3,512 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் இந்தக் கடினமான பணியைக் கையில் எடுத்து சாதித்திருக்கிறார்கள். இத்திட்டம் முழுமையடையும்போது வெயிலூர் என்றழைக்கப்படும் வேலூரின் முகம் நிச்சயம் மாறும்...” என்கிறார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

எதிர்காலத்தில் தண்ணீர் மிகப்பெரும் வணிகப் பொருளாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இருக்கிற நீராதாரங்களை மேம்படுத்தித் தக்க வைத்துக்கொள்வதொன்றே எதிர்காலத்தை ஈரமாகப் பாதுகாக்க நம்முன் இருக்கும் ஒரே வழி. வேலூர் விழித்துக்கொண்டுவிட்டது... மற்ற மாவட்டங்கள்..?