லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!

 ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!

ஞா.கௌஷிக் கார்த்திகேயன்

‘ஜவ்வுமிட்டாய்க்காரர்கிட்ட நாங்கெல்லாம் வாட்ச் வாங்கிக் கட்டிக்குவோம்... மிட்டாய் வாட்ச்சு...’னு எங்க அப்பா, அம்மா கதை சொல்லக் கேட்டிருக்கேன். ஆனா, நான் ஜவ்வுமிட்டாய்க்காரரைப் பார்த்ததே இல்ல. அந்த மிட்டாய் வாட்ச் எப்படி இருக்கும்னு மனசுல ஒரு கற்பனை ஓடிட்டே இருக்கும். ஒருவழியா, ஒருநாள் எனக்கும் அந்தத் தரிசனம் கிடைச்சது.

2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!

லாக்டௌனுக்கு முன், புதுக்கோட்டை கீழ நாலாம் வீதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்குப் போனப்போ... அதோ... ஜவ்வுமிட்டாய்க்காரர் நின்னுட்டி ருந்தார். பிள்ளைங்களோட போன அப்பா, அம்மாக்கள் எல்லாம் குழந்தைங்க கேட்காமலேயே வண்டியை ஜவ்வு மிட்டாய்க்காரர்கிட்ட நிறுத்தினாங்க.

அந்த மில்லினியல் குட்டீஸ் ஒண்ணும் புரியாம, ‘இது யாருப்பா..?’னு கேட்க, ‘இவருதான் ஜவ்வுமிட்டாய்க்காரர்... இப்போ பாரு உனக்கு மிட்டாய் வாட்ச் கட்டிவிடுவாரு’னு சொல்ல, குழந்தைகள் ஆசையா கையை நீட்டினாங்க. அந்தக் கணத்துல தங்களோட பால்ய நினைவு களைக் கோத்து, அதை ஆசை ஆசையா பார்த்தாங்க பெற்றோர்கள்.

நான் கிட்டப்போய் அந்த ஜவ்வுமிட்டாய்க்காரரைப் பார்த்தேன். ஆறடி நீள மூங்கில். அதோட தலைப்பகுதியில அழகா ஒரு பெண் பொம்மை. கலர்கலரா அது போட்டிருந்த கவுன். அதோட கண்ணுல இருந்த சிரிப்பு. பொம்மையோட ரெண்டு கைகளும் விரிச்சபடி இருக்க, அதோட விரல்கள்ல ஜால்ரா மாட்டப்பட்டிருந்தது. பொம்மையோட ரெண்டு கைகளும் கம்பி, கயிற்றால இணைக்கப்பட்டு, மூங்கிலோட உட்புறமா மறைவான துளை வழியா நீண்டு, அதோட முனைப்பகுதி ஜவ்வுமிட்டாய்க்காரர் விரல்கள்ல இருக்கு. அவர் அந்தக் கயிற்றை அசைச்சா, பொம்மை கைதட்டுது. அப்போ ஜால்ரா சத்தம் எழும்ப, சுத்தி நிக்குற குழந்தைங்க குதூகலிக்கிறாங்க. அந்த நிமிஷம் அந்த வாண்டுகளுக்கு அவர்தான் ஹீரோ.

மூங்கில்ல ஒருபக்கம், ஜவ்வுமிட்டாயை பிளாஸ்டிக் கவர்ல போட்டு வெச்சிருந்தாரு மிட்டாய்க்காரரு. பிள்ளைங்க கேட்கக் கேட்க அதை எடுத்து இழுத்து, மடிச்சு, சுருட்டி மயில், டாலர் செயின், வாட்ச், மோதிரம்னு அவங்களுக்குப் பிடிச்ச உருவங்கள்ல அழகழகா மிட்டாய் செஞ்சு, அவரே அதை அவங்களுக்குக் கட்டிவிட்டாரு. அவர்கிட்ட நாம பேச்சுக்கொடுத்தோம்.

‘‘என் பேரு இப்ராம் ஷா. புதுக்கோட்டைதான் சொந்த ஊரு. என் சொந்தக்காரர் ஒருத்தர் ஜவ்வு மிட்டாய்க்காரரு. எனக்கு ஒன்பது வயசு இருக்கும்போது, அவர் போற தேரு, திருவிழாக் களுக்கு எல்லாம் என்னையும் கூட்டிட்டுப் போவாரு. அப்புடியே இந்தத் தொழிலை நானும் கத்துக்கிட்டேன். நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா வுக்குப் போகும்போதெல்லாம், பல நாளு அங்கேயே தங்கி வியாபாரம் பண்ணுவேன்.

2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!

என்ன பெருசா காசு கிடைக்கும் இதுல... வாயிக்கும் வயித்துக்கும் சரியா இருக்கும். ஆனா, ஜவ்வுமிட்டாயைக் கட்டிவிடும்போது குழந்தைங்க, ‘எனக்கு மொதல்ல, எனக்கு மொதல்ல...’னு கையை நீட்டும்போது அதுங்க கண் ணுல மின்னுற மின்னலும், வீட்டுக்குப் போறவரைக்கும் அதை அலுங்காம குலுங்காம அவங்க எடுத்துட்டுப் போற சந்தோஷமும்னு இதெல்லாம் பார்க்கும்போது, எனக்கு அந்தப் புள்ளைகளவிட சந்தோஷமா இருக்கும்.

முன்னெல்லாம் திரு விழானா பஞ்சுமிட்டாய், குச்சி ஐஸ், பயாஸ்கோப்புல படம்னு இதெல்லாம் ஜேஜேனு இருக்கும். இப்போ இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமலே போச்சு. நான் போற திருவிழாக் கள்ல அந்த வியாபாரிகள எல்லாம் பார்க்க முடியுறதில்ல. ஜவ்வுமிட்டாய்க்காரங்களும் குறைஞ்சுட்டே வர்றோம்.

2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!
2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு!

என்ன ஆனாலும் எனக்கு இந்தத் தொழிலை விட்டுப் போக மனசு வரல. எல்லா திருவிழா, கூட்டங்கள்லயும் ‘ஐ ஜவ்வுமிட்டாய்க்காரரு வந்தாச்சு...’னு ஓடி வர்ற அந்தக் குழந்தைங்க போதும் எனக்கு!