Published:Updated:

2K kids: அந்த மனசுதான் சார்..!

ஜெயா - மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயா - மோகன்

- லத்திபா பானு.கா

``நாய்கள் மாதிரி நன்றியும் பாசமும் இருக்குற ஜீவன் எதுவுமில்ல. 15 வருஷமா நாய்கள் கூடதான் எங்க வாழ்வுனு வாழ்ந்துட்டு வர்றோம். இப்போ வீட்டுல 14 நாய்கள் வளர்க்கு றோம். தவிர, தெரு நாய்களுக்கும் சாப்பாடு செஞ்சு போய் போடுறோம்’’ - அன்பு மேலிடச் சொல்கிறார்கள் கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த ஜீவகாருண்ய தம்பதி ஜெயா - மோகன்.

மோகனுக்கு 66 வயது, ஜெயாவுக்கு 54 வயது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மோகனுக்கு உடல்நிலை சரியில்லாது போனதால் ஜெயாவின் காய்கறி வியாபாரம்தான் குடும்பத் துக்கு ஆதாரம். தாங்கள் நாய்களின் ஆலமரமான கதையைச் சொன்னார் ஜெயா.

‘`15 வருஷத்துக்கு முன்னாடி எங்க பையன் ஒரு பொம்ம ரேனியன் நாய்க்குட்டியை எடுத்துட்டு வந்து வளர்த்தான். அதுதான் முதன்முதலா நாங்க வளர்த்த நாய். அந்த நாய் காட்டின பாசம், நாய்கள்னாலே பிரியப்பட வெச்சது. ஒருமுறை, தெருவில் அடிபட்டு மோசமான நிலைமையில கிடந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்து சிகிச்சை பார்த்து காப்பாத்தினோம். அது எங்க கூட வாழ ஆரம்பிச்ச ரெண்டாவது நாய். இப்படியா ஒவ்வொண்ணா சேர, இப்போ 14 நாய் வளர்க்குறோம். கூடவே, எங்க ஏரியா வுல இருக்குற எல்லா நாய்களுக்கும் தினமும் சமைச்சுக் கொண்டுபோய் சாப்பாடு போட்டுட்டு வர்றோம்’’ என்பவர்கள், அதற்கான செலவை சமாளிக்கும் சூழலில் தங்கள் பொருளாதாரம் இல்லை யென்றாலும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று எப்படியோ சமாளித்து செய்து வருகிறார்கள்.

2K kids: அந்த மனசுதான் சார்..!

நாய்களுக்கு ரேஷன் அரிசியும் ஆட்டுக்கறியும் செய்து போடுவோம். கேஸ் சிலிண்டர் விலை கூடிட்டே போறதால இண்டக்‌ஷன் ஸ்டவ்வையும் அப்பப்போ பயன்படுத்துவோம். கரன்ட் பில் 3,000 ரூபாய் வரும். தெரு நாய்களுக்கு உணவை தரையில வைக்காம பேப்பர் விரிச்சு வைக்கிறதுக்காகவே கிலோ கணக்குல பழைய செய்தித்தாள் வாங்குறோம். நாய்களுக்குத் தடுப்பூசி போட வேளச்சேரி கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போவோம். அப்பப்போ மருத்துவச் செலவும் வரும். எனக்கு சர்க்கரை நோய் பாதிப்பால ரெண்டு விரலை எடுத்தாச்சு. என் வீட்டுக்காரருக்கு கால் நரம்புல பிரச்னை இருக்கு. ஆனாலும், இந்த வாயில்லா ஜீவன்களுக்கு ஆக்கிப்போட நாங்க சோர்வடையுறதே இல்ல. மழை, புயல், கொரோனா காலம்னு எந்த நிலையிலும் நாங்க அவங்க பசியாத்தாம இருந்ததில்ல. கடன் வாங்கியாச்சும் செஞ்சிடு வோம்’’ என்று சொல்லும் ஜெயா, இதனால் தாங்கள் எதிர் கொள்ளும் சில இடர்ப்பாடுகள் பற்றிப் பகிர்ந்தார்.

‘`நாங்க இத்தனை நாய்களை வளர்க்குறதால அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கும் எங்களுக்கும் மனஸ்தாபம் ஏற்படுது. மூணு வருஷத்துக்கு முன்னால, எங்களோட வளர்ப்பு நாய்கள் தொந்தரவு செய்றதா சொல்லி எங்களைக் காவல்நிலையத்துல புகார் செஞ்சுட்டாங்க. எங்களைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லி அனுப்பினாங்க போலீஸ் காரங்க. இப்படி சில எதிர்ப்புகள் இருந்தாலும் எல்லாத்தையும் சமாளிச்சுதான் இந்த நாய் களைப் பராமரிச்சுக்கிட்டு வர்றோம்’’ என்கின்றனர் பெருமூச்சுடன்.

இந்தத் தம்பதிக்கு, இவர்கள் பராமரிக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவ நினைப் பவர்கள் 70922 47273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.