Published:Updated:

``எம்.ஜி.ஆருக்காக நடிகர் பாண்டு வரைந்த ஜெயலலிதா ஓவியம்'' - மெய்சிலிர்க்கிறார் `இதயக்கனி' விஜயன்

பாண்டு
பாண்டு

'' 'நம்நாடு', 'சிரித்து வாழவேண்டும்', 'குமரிக்கோட்டம்' போன்ற படங்களில் பாண்டுவுக்கும் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கினார் எம்.ஜி.ஆர். இதற்கு முன்னதாக 'மாணவன்' என்ற படத்திலும் ஏற்கெனவே நடித்திருக்கிறார் பாண்டு'' என்கிறார் எஸ்.விஜயன்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு நடிகர் பாண்டுவும் பலியாகியிருக்கிறார். நடிகர், ஓவியர், தொழிலதிபர் என பன்முகத் திறமைகொண்டவர் பாண்டு. நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான பாண்டு, இளம் வயதில் ஓவியக் கலையின் மீதிருந்த ஆர்வத்தால், சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பை முடித்தவர். தன் அண்ணனின் உதவியோடு தமிழ்த் திரைப்படத் துறையிலும் காலடி எடுத்துவைத்தார்.

தனித்துவமான தனது நடிப்புத் திறமையால், தமிழ்த் திரைப்படத்துறையின் ஆளுமைகளோடு ஆழமான நட்பை வளர்த்துக்கொண்டவர். குறிப்பாக நடிகர் எம்.ஜி.ஆரின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த பாண்டு, திரைக்கு அப்பாலும் அவரோடு சிநேகம் வளர்த்துக்கொண்டார்.

ஓவியர் பாண்டு
ஓவியர் பாண்டு

இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் `அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழக'த்தின் பொதுச்செயலாளருமான 'எம்.ஜி.ஆர் நம்பி' நம்மிடம் பேசும்போது,

``1972-ல் நான் கோவில்பட்டி தொகுதி தலைமை எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்துவந்தேன். தி.மு.க-விலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் என்றதும், நாங்களே கருப்பு, சிவப்பு கொடியின் நடுவே தாமரைப் படம் ஒன்றைப்போட்டு `இதுதான் கட்சியின் புதிய கொடி' என்று புதிதாக ஒரு கொடியை வடிவமைத்து, அந்தக் கொடியை ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். ஆனால், அக்டோபர் 17-ம் தேதியன்று, தேதி அன்று கட்சிக்கான புதிய கொடியை அறிமுகப்படுத்துவதாக தகவல் வந்தது.

கொரோனா: முஸ்லிம் தன்னார்வலர்களைக்  குற்றம்சாட்டிய பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா - வலுக்கும் எதிர்ப்பு

இடைப்பட்ட இந்த ஒரு வார காலத்துக்குள் கொடி அமைப்பு குறித்து ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் ஆலோசனை நடத்தினார். `கொடியின் நடுவில் அண்ணாவின் படத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்' என்று ஆலோசனை சொன்னார் கல்யாண சுந்தரம். இதையடுத்துத்தான் கொடியை வடிவமைக்கும் பணி, பாண்டுவுக்கு தரப்பட்டது.

அவர், கொடியின் நடுவே அண்ணாவின் புகைப்படத்தை பிரிண்ட் செய்யாமல், லைன் ட்ராயிங் படமாக வரைந்து அக்டோபர் 13-ம் தேதியன்று எம்.ஜி.ஆரிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதாவது இரண்டே நாட்களில், கொடியை வடிவமைத்துவிட்டார் பாண்டு. எம்.ஜி.ஆருக்கும் கொடி ரொம்பவும் பிடித்துவிட்டது. கொடியில், பேரறிஞர் அண்ணா, விரலை நீட்டியபடி இருக்கும் அந்தப் படத்துக்கான மாடல், அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைதான். கொடி வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டதும், பாரிஸில் இருந்த மணி அன்கோ நிறுவனத்தில் கொடுத்து, அ.தி.மு.க-வுக்கான கொடி பிரிண்ட் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர் நம்பி - மயில்சாமி - எஸ்.விஜயன்
எம்.ஜி.ஆர் நம்பி - மயில்சாமி - எஸ்.விஜயன்

ஏற்கெனவே எம்.ஜி.ஆர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த பாண்டு, கொடி வடிவமைப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரோடு இன்னும் ஆழமான நட்பை வளர்த்துக்கொண்டார்'' என்றார் மலரும் நினைவுகளோடு.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி பாண்டுவின் நினைவுகள் குறித்து நம்மிடம் பேசும்போது, ``திரையில் மட்டுமல்ல... எதார்த்த வாழ்க்கையிலும் பாண்டு ரொம்பவும் நகைச்சுவையான - ஜாலியான மனிதர். எல்லோருடனும் நட்பு பாராட்டக் கூடியவர். என்னுடைய தமிழ் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி பாராட்டுவார். அதை இப்போது நினைத்தால் ரொம்பவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

நடிகர் என்பதையும் தாண்டி அவரது நிறுவன வேலைகளுக்காக அடிக்கடி வெளிநாடு சென்றுவருபவர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பாண்டு தமிழ்நாட்டில் இருந்ததைவிடவும் வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சிங்கப்பூர், மலேசியாவில்தான் கழித்திருக்கிறார். இந்தக் கொரோனா அரக்கன் இப்போது நம்மிடமிருந்து நிரந்தரமாகவே பாண்டுவைப் பிரித்துக் கொண்டு சென்றுவிட்டது'' என்கிறார் கலங்கிய கண்களுடன்.

`இதயக்கனி' மாத இதழ் ஆசிரியரான எஸ்.விஜயன், 'பாண்டு - எம்.ஜி.ஆர்' ஆகியோரிடையிலான நட்பு குறித்துப் பேசும்போது, ``பாண்டுவின் அண்னன் இடிச்சபுளி செல்வராஜ், இயக்குநர் பந்துலு படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அவர் உதவி இயக்குநராக இருந்ததால், எம்.ஜி.ஆரோடும் நல்ல நட்பு இருந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர்
உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர்

இதன் அடிப்படையில், 'நம்நாடு', 'சிரித்து வாழவேண்டும்', 'குமரிக்கோட்டம்' போன்ற படங்களில் பாண்டுவுக்கும் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கினார் எம்.ஜி.ஆர். இதற்கு முன்னதாக 'மாணவன்' என்ற படத்திலும் ஏற்கெனவே நடித்திருக்கிறார் பாண்டு.

'குமரிக்கோட்டம்' படத்தில், ஜெயலலிதாவின் ஓவியத்தை எம்.ஜி.ஆர் வரைவதாக ஒரு காட்சி வரும். உண்மையில் அந்தப் படத்தை வரைந்தது பாண்டுதான். அடுத்து 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தை வெளியிடும்போது, அரசியல் ரீதியான சிக்கல் வந்த நேரம். பட விளம்பரம் குறித்தப் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட முடியவில்லை. எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிப்பதற்கென்றே தயாராக இருந்தனர் தி.மு.க-வினர். ஆனாலும் படத்தை எப்படியாவது விளம்பரம் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், புதிதாக ஸ்டிக்கர் வடிவில் பட விளம்பரங்களை டிசைன் செய்து, கடைகள் மற்றும் வாகனங்களில் ஒட்டி விளம்பரம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அந்த ஸ்டிக்கர் வடிவமைப்புப் பணிகளை எல்லாம் அன்றைக்கு செய்துகொடுத்தவர் நடிகர் பாண்டுதான். போஸ்டர் ஒட்டாமல் வெறும் ஸ்டிக்கர் விளம்பரத்திலேயே 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் பெரும் வெற்றி பெற்றது. இதிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்தவராகிப்போனார் பாண்டு!'' என்கிறார் சிலிர்த்தபடி.

அடுத்த கட்டுரைக்கு