Published:Updated:

``இங்கு சந்தோஷத்துக்கு குறைவில்ல... நைட்டிதான் நிறைய தேவைப்படுது!’’ - `முதியோர் இல்லம்' ஜெயந்தி

ஜெயந்தி
ஜெயந்தி

இல்லத்தில் இருக்கிற பாட்டிகள், அம்மாக்கள் எல்லாம் சாப்பிட்டு ஓய்வாக இருக்கிற ஒரு சாயங்கால வேளையில் நாம் அங்கு சென்றோம். இல்லத்தை நடத்தி வருகிற ஜெயந்தியுடன் இல்லத்தில் நடமாட்டத்துடன் இருக்கிற சில அம்மாக்களும் நம்மை வரவேற்றார்கள்.

ராஜ்பாபா முதியோர் இல்லம் சென்னை கொளத்தூர் பகுதியில் ஒடுங்கிய தெருவொன்றில் இருக்கிறது. இந்த இல்லத்தை தனியொருவராக நடத்தி வருகிறார் ஜெயந்தி. இல்லத்தில் இருக்கிற பாட்டிகள், அம்மாக்கள் எல்லாம் சாப்பிட்டு ஓய்வாக இருக்கிற ஒரு சாயங்கால வேளையில் நாம் அங்கு சென்றோம். இல்லத்தை நடத்தி வருகிற ஜெயந்தியுடன் இல்லத்தில் நடமாட்டத்துடன் இருக்கிற சில அம்மாக்களும் நம்மை வரவேற்றார்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முதியோர் இல்லமாக மாற்றி வைத்திருக்கிறார் ஜெயந்தி. ஓர் அறையில் 97 வயது பாட்டியொருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். நாம் உள்ளே நுழைந்ததும் வலது கையைத்தூக்கி நம்மிடம் ஏதோ சொல்ல முயன்றவரிடம் சற்று நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்றோம். அம்மாக்களில் ஒருவர் சமையல்கட்டுக்குச் சென்று சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வர, மற்றவர்கள் மாஸ்க்குடன் நம்மைச் சுற்றி உட்கார ஆரம்பித்தார்கள். ஜெயந்தி பேச ஆரம்பித்தார்.

old age home
old age home

``என் வீட்டுக்காரர் பேரு ராஜ்பாபா. அவரோட பாட்டி ஒருத்தங்க வயசாகி படுத்தபடுக்கையா இருந்தப்போ இவர்தான் அவங்களைப் பார்த்துக்கிட்டார். ஒருவகையில அவங்க எனக்கும் பாட்டின்னாலும், என்னைவிட அவர்தான் அவங்களை தாங்கு தாங்குன்னு தாங்கினார். அவங்க இறந்த சில மாசம் கழிச்சு, ராஜ் ரோட்டுல நடந்துபோயிட்டு இருந்தப்போ, பாட்டி ஒருத்தங்க `பசிக்குதுப்பா. ஏதாவது சாப்பிட வாங்கிக்கொடேன்’னு கேட்டிருக்காங்க. கண் கலங்கிட்டே அவங்களுக்கு இட்லி வாங்கிக்கொடுத்துட்டு வீட்டுக்கு வந்தவரு, நாமளே முதியோர் இல்லம் ஒண்ணு ஆரம்பிச்சா என்ன’ன்னு கேட்டார். உடனே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இல்லத்தையும் ஆரம்பிச்சார். அந்த வீடுதான் இது’’ என்றவர், அடுத்து சொன்ன தகவல் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

``சொந்தமா கார்பென்டர் பிசினஸ், ரெண்டு குழந்தைங்க, மனசு நிம்மதிக்கு முதியோர் இல்லம்னு வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒருநாள், விபத்துல அவர் இறந்துட்டாரு. அவர் நல்ல எண்ணத்தோட ஆரம்பிச்ச இந்த முதியோர் இல்லத்தை மூடறதுக்கு எனக்கு மனசில்ல. நான் எடுத்து நடத்தலாம்னு முடிவு செஞ்சேன். `பொம்பளை உன்னால அதெல்லாம் நடத்த முடியாது’ன்னு சொந்தக்காரங்ககிட்ட இருந்தே எதிர்ப்புகள் வந்துச்சு. ஆனா, அவர் விருப்பத்தையும் அவரோட புதைக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. நடத்தியே தீருவேன்னு அடம்பிடிச்சு தொடர ஆரம்பிச்சேன். இதோ அஞ்சு வருஷமா நடத்திட்டு வர்றேன்’’ என்றவர் தொடர்ந்தார்.

மகிழ்ச்சி முகத்துடன் இல்லத்தினர்
மகிழ்ச்சி முகத்துடன் இல்லத்தினர்

``இப்போதைக்கு 30 பேரை இல்லத்துல வெச்சு பராமரிச்சுட்டு வர்றேன். இவங்க மொத்த பேரையும் ஒரே வீட்ல வைக்க முடியாதுங்கிறதால, ரெண்டு வீடு வாடகை எடுத்திருக்கேன். ரெண்டு வீட்லேயும் நடமாட்டமா இருக்கிறவங்க, படுத்தபடுக்கையா இருக்கிறவங்களைப் பார்த்துக்கிறாங்க. சமையல் வேலைக்கு ஆள் வெச்சிருக்கேன். சில நல்ல உள்ளங்கள் பொருளாதார உதவி செய்றாங்க. என் கணவரோட பிசினஸை என் அப்பா உதவியோட இப்போ நான் செஞ்சிக்கிட்டிருக்கேன். அந்த வகையில வர்ற வருமானமும் குடும்பத்துக்கும் முதியோர் இல்லம் நடத்துறதுக்கும் பயன்படுது. இல்லத்துல யாருக்காவது நடுராத்திரி உடம்பு சரியில்லைன்னாதான் ரொம்ப அவஸ்தைப்பட்டுப் போறோம்’’ என்கிற ஜெயந்தி, அதற்கான காரணத்தைச் சொல்கிறார்.

``பொதுவா வயசானவங்களுக்கு நைட்லதான் உடம்பு முடியாம போகும். அந்த நேரங்கள்ல உடனே அவங்களை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகணும். அந்த மாதிரி நேரங்கள்ல வண்டிகள் கிடைக்காது. சரி, கிடைக்கிற ஆட்டோவுல போகலாம்னு பார்த்தா, பக்கத்து தெருவுல இருக்கிற ஹாஸ்பிடல் போறதுக்குக்கூட ஐந்நூறு கொடு, அறுநூறு கொடுன்னு கேட்பாங்க. வேற வழியில்லாம இதுவரைக்கும் கொடுத்துட்டுதான் வர்றேன். அவங்க எல்லாம் கொஞ்சம் மனிதாபிமானமா நடந்துகிட்டா நல்லாயிருக்கும்’’ என்று வருத்தப்படுகிற ஜெயந்தி, தன் இல்லத்திலிருக்கிற சில முதியோர்களின் கதைகளை நம்மிடம் பகிர்ந்தார்.

முதியோர் இல்லத்தினர்
முதியோர் இல்லத்தினர்

``ஓர் அம்மாவுக்கு எட்டுப் பிள்ளைங்க. அதுல ஒருத்தர் அந்தம்மாவை ரோட்டுல விட்டுட்டுப் போயிட்டாங்க. அவங்களை எங்க இல்லத்துல வெச்சுதான் பராமரிக்கிறோம். அந்தம்மாவை பராமரிக்கிறது தொடர்பா, எட்டு பிள்ளைங்ககிட்டேயும் பேசினோம். அத்தனை பேரும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இன்னொரு அம்மாவை, அவங்க பொண்ணு வீட்டைவிட்டே விரட்டி விட்டுட்டாங்க.

சமீபத்துல எங்க இல்லத்துல இருக்கிற ஒரு பாட்டி டீ குடிச்சிட்டு படுத்தாங்க. டிபன் சாப்பிட எழும்பலை. போயிட்டாங்க. அவங்க பையனை இறுதிச்சடங்கு செய்யக் கூப்பிட்டா, அதுக்குகூட மனசில்லாம ஓடிட்டான். இவங்க எல்லாம், நாளைக்கு நமக்கும் வயசாகும். அப்போ நம்ம நிலைமை என்னன்னு யோசிச்சா போதும். முதியோர் இல்லங்களுக்கு அவசியமே வராது’’ என்கிற ஜெயந்திக்கு நன்றி சொல்லிவிட்டு இல்லத்தைவிட்டுக் கிளம்ப வெளியே வந்தோம்.

ஜெயந்தி
ஜெயந்தி
``எனது கருத்தை சினிமா மூலம் கொண்டு செல்வேன்!” - ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து கங்கனா

வாசலில் சில அம்மாக்கள் சிரித்துப் பேசியபடி அரிசி, பருப்பை வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புடவை கட்டிக்கொண்டிருக்க, பலர் நைட்டி அணிந்திருந்தார்கள். பாட்டிகள் சிலர் வீல் சேர்களில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் புன்னகை. அவர்களும் நைட்டிதான் அணிந்துகொண்டிருந்தார்கள். ``வயசானவங்களுக்கு நைட்டிதான் வசதி மேடம். இங்க சந்தோஷத்துக்குக் குறைச்சல் கிடையாது. ஆனா, நைட்டிதான் நிறைய தேவைப்படுது’’ என்ற ஜெயந்தியிடம் கைக்கூப்பி விடைபெற்றோம்.

அடுத்த கட்டுரைக்கு