Published:Updated:

ஜீவானந்த் எம்ஏ பி.எட் தா.பெ. ஜீவானந்தம்

குடும்பத்துடன் மணிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் மணிக்குமார்

அம்மா சமூகநலத்துறையில் வேலை பார்த்தாங்க. ஒருமுறை அம்மாவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பார்க்கப்போனேன்.

ஜீவானந்த் எம்ஏ பி.எட் தா.பெ. ஜீவானந்தம்

அம்மா சமூகநலத்துறையில் வேலை பார்த்தாங்க. ஒருமுறை அம்மாவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பார்க்கப்போனேன்.

Published:Updated:
குடும்பத்துடன் மணிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் மணிக்குமார்

“ஜீவா ஏறினா ரயில், இறங்கினா ஜெயில் என்ற பொன்மொழி தமிழ்நாட்டுக்கே தெரியும். அப்படி ஒருமுறை அப்பா ஜெயிலில் இருந்தப்போ எங்க குடும்பம் வண்ணாரப்பேட்டையில் இருந்தது. அம்மாவுக்கு செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். ஆனா அந்த வீட்டில் செடி வைக்கக்கூட இடமில்லை. அப்பதான் ஒரு தோழர் சொல்லி அம்மா இந்த 10 சென்ட் இடத்தை வாங்கினாங்க. ஜெயிலில் இருந்து ரிலீஸான அப்பா நேரா வண்ணாரப்பேட்டை போனபிறகுதான் விஷயம் தெரிஞ்சது. ‘ஒரு கம்யூனிஸ்ட் எப்படி சொத்து சேர்க்கலாம்?’னு அம்மாவுடன் சண்டை. தோழர் மணலி கந்தசாமி, புதுச்சேரி கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சுப்பையா ரெண்டுபேரும்தான் ‘எல்லாருக்கும் உணவு, உடை, உறைவிடம் வேணும்னு போராடும் கம்யூனிஸ்ட்டுக்கு வீடு இருக்கக்கூடாதா?’ன்னு அப்பாவைச் சமாதானப்படுத்தினாங்க. அதுக்கப்புறமும் 4 சென்ட் இடம் வரை ரோடு போட, பொதுக்காரியம்னு அப்பா கொடுத்துட்டார். மிச்சமுள்ள 6 சென்ட் இடம் குடிசை வீடுதான். அம்மா இறந்ததற்குப் பிறகு நான்தான் லோன் போட்டு வீட்டைக் கட்டினேன்” என்கிறார் மணிக்குமார். பொதுவுடைமைக் கொள்கையில் ஈர்ப்பு, லட்சியவாதம், அர்ப்பணிப்பு என்று வாழ்ந்த தோழர் ஜீவானந்தத்தின் மகன். மணிக்குமாரின் மாற்றுத்திறனாளி மகன் ஜீவானந்துக்குத் தமிழக முதல்வர் அரசு வேலை அளித்திருப்பதையொட்டி ஜீவாவின் குடும்பத்தைத் தாம்பரத்தில் சந்தித்துப் பேசினேன்.

ஜீவானந்த் எம்ஏ பி.எட் தா.பெ. ஜீவானந்தம்

“அம்மா சமூகநலத்துறையில் வேலை பார்த்தாங்க. ஒருமுறை அம்மாவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பார்க்கப்போனேன். ‘நான் யாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எம்.ஆர்.ராதா’ன்னு சொன்னேன். ‘நான் நடிகர்னு மட்டும்தான் உனக்குத் தெரியுமா? உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் லவ் லெட்டர் எடுத்திட்டு நான்தான் தூது போனேன்னு தெரியாதா?’ன்னு அவர் கேட்கவும் அம்மாவுக்கு அளவில்லாத வெட்கம். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு அப்பா, எம்.ஆர்.ராதா வீட்டில் தலைமறைவா இருந்தார். அப்பதான் அப்பா கொடுத்த கடிதங்களை அம்மாகிட்ட கொண்டுபோய்க் கொடுத்திருக்கார் எம்.ஆர்.ராதா. ‘நான் ஏதோ புரட்சி பண்றதுக்கான கடிதம்னு நினைச்சேன். ஆனா அது காதல் கடிதங்கள்னு பின்னாடிதான் தெரியும்’னு எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப எளிமையாத்தான் கல்யாணம் நடந்தது. வந்தவங்களுக்கு எல்லாம் டீயும் பன்னும்தான். இதைக் கேள்விப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் கொதிச்சுப்போயிட்டார். ‘அதெப்படி எங்க தலைவரின் கல்யாணம் இப்படி நடக்கலாம்’னு சொல்லி ஒரு விருந்து ஏற்பாடு பண்ணினார். 1948 ஜனவரி 30 அன்னைக்கு காந்தி சுடப்பட்டதால் அந்த விருந்து ரத்தாச்சு. அப்பாவும் நண்பர்களும் இணைஞ்சு ‘அவ்வை பாடசாலை’ன்னு ஒரு பள்ளி ஆரம்பிச்சாங்க. இப்போ அதை நடுநிலைப்பள்ளியா நடத்திட்டு வர்றோம். அந்தப் பள்ளி திறப்புவிழாவுக்காக வந்த முதலமைச்சர் காமராஜர் இந்தக் குடிசைவீட்டைப் பார்த்ததும், ‘ஏன் ஜீவா, எங்களையெல்லாம் அவமானப் படுத்தணும்னுதான் இந்தக் குடிசை வீட்டில் இருக்கீங்களா? உங்களுக்கு நல்ல வீட்டை அரசாங்கம் சார்பா நான் ஏற்பாடு பண்றேன்’னு சொன்னார். ‘நீங்க சோஷலிசம் பேசுறீங்கல்ல, அந்த சோஷலிசம் மூலமா எல்லா மக்களுக்கும் வீடு கிடைக்கிறப்ப நானும் வீடு வாங்கிக்கிறேன்’னு அப்பா மறுத்துட்டார். ஆனால் அப்பாவிடம் ரெண்டு வேட்டிகள்தான் இருந்துச்சு, ஒண்ணு காயறதுக்காகக் காத்திருந்தார்னு சொல்றதெல்லாம் தவறான தகவல்” என்று சொல்லும் மணிக்குமார், தன் பால்யகால நினைவுகளில் மூழ்கிப் பெருமூச்சு விடுகிறார்.

ஜீவானந்த் எம்ஏ பி.எட் தா.பெ. ஜீவானந்தம்

“அப்பா இறக்கும்போது எனக்கு 10 வயது. ஆனாலும் இப்போதும் அவருடனான நினைவுகள் அப்படியே இருக்கு. பொதுக்கூட்டம், போராட்டம், ஜெயில் என்று அப்பா வீட்டில் இருந்த நாள்கள் குறைவு. ஆனால் வீட்டில் இருக்கும்போதெல்லாம் அன்போடும் அக்கறையோடும் இருப்பார். குறிப்பாக எங்கள் படிப்பில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். நான் படிக்காமல் முரண்டுபிடித்தால், ‘படிக்க போரடிக்குதா? புத்தகத்தை மூடிட்டுக் கொஞ்சம் நடந்துட்டு வா, இல்லைன்னா விளையாடிட்டு வந்து படி’ன்னு சொல்வார். இரவு எங்களுடன் தூங்குபவர், காலை எழுந்து பார்த்தால் ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். எப்போது எழுந்தார், எப்போது படிக்கத் தொடங்கினார் என்றே தெரியாது. அவர் சேகரித்துவைத்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இப்போதும் எங்களிடம் இருக்கின்றன.

அப்பா இறந்ததற்குப் பிறகு என்னையும், என் அக்காக்கள் உஷாதேவி, உமாதேவியையும் அம்மாதான் வளர்த்து ஆளாக்கினார். சுதந்திரப்போராட்டத் தியாகிகள் பென்ஷனை அப்பா வேணாம்னு மறுத்திட்டார். அவர் இறந்தபிறகு அம்மாவுக்கு அது தேவையா இருந்தது. ஆனால் அதைப்பெறுவதற்குச் சில சட்டச்சிக்கல்கள் இருந்தன. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் சிறப்பு பென்ஷனாக வழங்கினார். உஷாதேவி அக்கா மின்வாரியத்தில் பணிபுரிந்தார். உமாதேவி அக்கா டாக்டர் ஆனார். கலைஞரும் எங்கள் குடும்பத்தின்மீது பிரியத்துடன் இருந்தார். 2011-ல் என் மகள் பத்மா உஷா திருமணம். அப்போது தி.மு.க-வுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உறவு சுமுகமாக இல்லை. கலைஞரைத் திருமணத்துக்கு அழைத்தால் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறையில் நான் பணிபுரிந்தபோது கனிமொழியிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன்.

‘இதுக்கா தயங்கறீங்க?’ என்றபடி அப்பாவிடம் அழைத்துச்சென்றார். ‘நான் நிச்சயம் திருமணத்துக்கு வர்றேன். உங்க கம்யூனிஸ்ட்காரங்க கல்யாணத்துக்கு வருவாங்களா?’ என்று கேட்டார். அவர்தான் தலைமை தாங்கித் திருமணத்தை நடத்திவைத்தார். மகள் பத்மா உஷா கிரசென்ட் கல்லூரியில் பொறியியல் விரிவுரையாளர், மருமகன் ராமமூர்த்தி சவீதா பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர். உடல்நலக்குறைவு காரணமாகப் பேச முடியாது என்று முதலில் சொன்ன கலைஞர், அந்தத் திருமணத்தில் ஒருமணிநேரம் சிறப்புரை ஆற்றினார்’’ என்று நெகிழும் மணிக்குமாரின் மகன் ஜீவானந்துக்கு, அதே கலைஞரின் மகன் ஸ்டாலின் மூலம் இப்போது அரசுப்பணி கிடைத்திருக்கிறது.

“குழந்தையாக இருக்கும்போதிருந்து முழங்காலுக்குக் கீழே கால்கள் விறைத்துப்போய் நெகிழ்வுத்தன்மை இல்லாத spastic நோயால் பாதிக்கப்பட்டேன். உறுதியாகத் தரையில் காலூன்றி நடக்க முடியாது. மிகமிக மெதுவாகத்தான் நடக்க முடியும். எம்.ஏ., பி.எட் படித்திருக்கிறேன். ஆனால் இளங்கலையில் பொலிட்டிக்கல் சயின்ஸ், முதுகலையில் வரலாறு என்று வெவ்வேறு பாடப்பிரிவுகள் படித்ததால் வேலை கிடைக்காத சூழல்” என்று ஜீவானந்த் சொல்ல, அவர் கைகளை இறுகப்பற்றியபடி மணிக்குமார் தொடர்கிறார்.

“இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸிடம் விஷயத்தைச் சொல்லி வேலைக்கு முயன்றேன். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியிருந்தேன். ஆனாலும் அதே சட்டச்சிக்கல்களால் தாமதமாகிக்கொண்டிருந்தது. பிறகு ‘தோழர் ஜீவாவின் பேரனுக்கு இல்லாத முன்னுரிமையா?’ என்று முதல்வரே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியதால் இப்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் நிர்வாகப்பிரிவில் வேலை கிடைத்திருக்கிறது. இப்போது ஜீவானந்த் பயிற்சியில் இருக்கிறான். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி ‘நாங்கள் எல்லாம் ஜீவாவின் புத்தகங்களைப் படித்து வளர்ந்தவர்கள்’ என்று நெகிழ்ந்து போய்ச் சொன்னார். முதல்வர் ஸ்டாலின், இறையன்பு ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் லியோனி மூவரும் இந்தப் பணிக்காகப் பெருமுயற்சி எடுத்தார்கள். அதேபோல் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், சங்கர சரவணன் ஆகியோரும் உதவினார்கள்” என்று சொல்லும் மணிக்குமார், மண்ணிவாக்கத்தில் ‘சரணாலயம்’ என்ற முதியோர் காப்பகத்தையும் நடத்திவருகிறார்.

ஜீவானந்த் எம்ஏ பி.எட் தா.பெ. ஜீவானந்தம்

“காந்தியக்கொள்கையில் ஈர்க்கப்பட்டு அப்பா சிராவயலில் ஆசிரமம் நடத்தினார். அந்த ஆசிரமத்தைப் பார்வையிட்ட காந்தி, ‘ஜீவா, உங்கள் சொத்துமதிப்பு என்ன?’ என்று கேட்டார். ‘தேசம்தான் என் சொத்து’ என்றார் அப்பா. ‘இல்லையில்லை, நீங்கள்தான் தேசத்தின் சொத்து’ என்றார் காந்தி. அப்பாவின் பணியைத் தொடர வேண்டும் என்றுதான் இந்த முதியோர் காப்பகத்தையும் அவ்வை நடுநிலைப்பள்ளியையும் நடத்திவருகிறோம்” என்கிறார், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரத்தின் மூலம் ஜீவானந்த் மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். அரசுவேலை இருவரின் வாழ்க்கைக்கும் கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மக்களுக்காகவே வாழ்ந்த மகத்தான தோழர் ஜீவாவின் வீட்டில் மகிழ்ச்சிச் சுடர் பிரகாசிக்கிறது.