Election bannerElection banner
Published:Updated:

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுகிறார்: இதுதான் காரணமா?

ஜெஃப் பெசோஸ்
ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவன மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடும்போதுதான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் ஜெஃப் பெசோஸ்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை அவர் ராஜினாமா செய்தாலும், நிறுவனத்தின் ஒரு நிர்வாகத் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார்.

அமேசான் நிறுவன மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடும்போதுதான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் ஜெஃப் பெசோஸ். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அமேசான் நிறுவனம் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்திருக்கிறது.

உலகின் பெருநிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் அமேசான், 1994-ம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இப்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்.

ஜெஃப் பெசோஸின் கதை

ஜெஃப்பின் அப்பா க்யூபாவில் இருந்துவந்த அகதி என்றாலும், அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்துகள் இருந்தன. சின்ன வயதிலிருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் ஜெஃப்பிடம் இருந்தது.

தொல்லை கொடுக்கும் சுட்டிகளைப் பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார்; தாத்தாவின் கேரேஜில் எப்போது பார்த்தாலும் ஆய்வுகள் செய்துகொண்டும், எதையாவது உருவாக்கிக்கொண்டும் இருந்த இவர் ஆசைப்பட்டது ஒரு விண்வெளி வீரனாக ஆகவேண்டும் என்றே. ஆனால், காலம் வேறொன்றைத் தீர்மானித்துவைத்திருந்தது.

 அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ்
அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ்

கல்லூரிக்குப் போனதும் இயற்பியலிலிருந்து அவர் காதல், கணினி பக்கம் திரும்பியது; கணினி மற்றும் மின்னணு அறிவியல்துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார். இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவர் ஆனார். அதோடு நின்றிருக்கலாம்; வருடத்துக்கு 2,300 சதவிகிதம் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதைப் பார்த்தார்; அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்தத் தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல, வேலையைத் தூக்கிக் கடாசிவிட்டுக் கிளம்பினார் மனிதர்.

இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பதுதான் கான்செப்ட்; அதுவும் விலை குறைவாகத் தருவதுதான் போனஸ். தொடங்கியபோது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆட்கள் இருந்தார்கள். அமோக வரவேற்பு கிடைத்தது; சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்கக் கூடாது எனக் கேட்க, அதையும் ஆரம்பித்தார், டிவிடிகளும் சேர்ந்துகொண்டன.

புத்தகங்களைவிட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கைபோடு போட்டன. இப்போது அமேசானில் விற்கப்படாத பொருள்களே இல்லை.

ஜெஃப் இந்த முடிவை எடுக்க என்ன காரணம்?

நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருக்க, அவர் இந்த முடிவை எடுக்க என்னதான் காரணம்?

அதற்கான பதிலை ஜெஃப்பே கூறியிருக்கிறார். இது தொடர்பான ஒரு நீண்ட கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார. அமேசானின் புதிய புராடக்ட்டிலும், அதன் சில ஆரம்ப முயற்சிகளிலும் தாம் கவனம் செலுத்தப்போவதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவர், ``இந்தப் பயணம் 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது அமேசான் ஒரு யோசனையாக மட்டுமே இருந்தது. அதற்குப் பெயரிடப்படவில்லை. அப்போது என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி. `இணையம் என்றால் என்ன?' என்பதுதான்'' என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெஃப் பெஸோஸ்
ஜெஃப் பெஸோஸ்

இப்போது திறமையான, அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட 13 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். உலகின் மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது? கண்டுபிடிப்பே வெறிக்கான வேர் எனவும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

சரி... பல பில்லியன் மதிப்புள்ள அமேசான் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்?

இவர்தான் அடுத்த தலைவர்!

அமேசான் வெப் சர்வீசஸின் தலைவராக இருக்கும் 52 வயதான ஆண்டி ஜாஸ்ஸிதான் (Andy Jassy) மொத்த அமேசான் நிறுவனத்துக்கும் அடுத்த தலைமைச் செயல் அதிகாரி.

மேகக் கணினி அதாவது, க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அமேசான் வேகமாக வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதைச் சாத்தியமாக்கியவர் ஆண்டி ஜாஸ்ஸி.

அரசாங்கங்கள் மற்றும் மெக் டொனால்ட்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்குகிறது அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம். கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் 52% அமேசான் வெப் சர்வீஸிலிருந்தே வந்திருக்கிறது.

அமேசானும் சர்ச்சையும்

அமேசான் நிறுவனம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்தாலும், லாபம் ஈட்டினாலும், கொரோனா காலத்தில் தங்களை நிறுவனம் மோசமாக நடத்தியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாகப் பல போராட்டங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணத்தால் அமேசான் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது. கொரோனா தொற்றின் காரணமாக ஒருபக்கம் அரசாங்கம் மக்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தும்போது, அமேசான் நிறுவனம் பிரிட்டனிலுள்ள தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கூறியது சர்ச்சையானது.

மக்கள் கடைகளுக்குச் செல்ல அச்சப்பட்டுக்கொண்டு பெரும்பாலான பொருள்களை இணையத்தில் வாங்கியதுதான் இதற்குக் காரணம். பாதுகாப்பைவிட லாபம்தான் அமேசான் நிறுவனத்துக்கு முதன்மையாக இருக்கிறது எனத் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டின.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு