Published:Updated:

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

ஜிதின் ஜாய்
பிரீமியம் ஸ்டோரி
ஜிதின் ஜாய்

- ‘கொடநாடு கொள்ளை இரவு’ குறித்து மனம் திறக்கும் ஜிதின் ஜாய்

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

- ‘கொடநாடு கொள்ளை இரவு’ குறித்து மனம் திறக்கும் ஜிதின் ஜாய்

Published:Updated:
ஜிதின் ஜாய்
பிரீமியம் ஸ்டோரி
ஜிதின் ஜாய்

கொடநாடு வழக்கின் மர்மங்களைத் தேடி ஜூ.வி டீம் நடத்திவரும் விசாரணையில், பல்வேறு விவகாரங்கள் வெளிப்பட்டுவருகின்றன. அந்தவகையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலரையும் சந்தித்துப் பேசிவருகிறோம். கொடநாடு வழக்கில் 10-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் கேரள மாநிலம், வயநாட்டைச் சேர்ந்த ஜிதின் ஜாயைத் தேடிச் சென்றோம். இதுவரை எந்த மீடியாவிடமும் முகம் காட்டாத அவர், ஜூ.வி-யிடம் முதன்முறையாக மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“நீங்கள் தேடிக்கொண்டிருப்பவர் இங்கே இருக்கிறார்!”

23.04.2017 அன்று நள்ளிரவு நடந்த கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம், வெளியில் தெரிந்த பிறகு உஷாரான தமிழகக் காவல்துறை, தொழில்முறையாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருபவர்கள் அனைவரையும் அந்தந்தக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரிக்கத் தொடங்கியது. இரண்டு‌, மூன்று நாள்களாக எந்தத் துப்பும் கிடைக்காமலிருந்த நிலையில், அப்போது நீலகிரி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த முரளி ரம்பாவுக்கு, 27-ம் தேதி இரவு கேரள மாநிலம், வயநாடு மாவட்டக் காவல் நிலையம் ஒன்றிலிருந்து போன் கால் வந்தது. ‘‘கொடநாடு கொலை தொடர்பாக நீங்கள் தேடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் இங்கே இருக்கிறார்’’ என்று தகவல் சொல்லப்பட... எஸ்.பி தலைமையிலான டீம் இரவோடு இரவாக அங்கு விரைந்தது. கேரள போலீஸாரால் அடையாளம் காட்டப்பட்ட நபரைக் கண்டு எஸ்.பி உள்ளிட்ட டீம் திடுக்கிட்டுப்போனது.

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

மெலிந்த தேகம், மீசைகூட அரும்பாத முகம், 19 வயதான ஜிதின் ஜாய் என்ற மாணவனை கேரள போலீஸார் காட்ட... கொடநாடு சம்பவத்தில் அவன் ஈடுபட்டிருப்பான் என்ற நம்பிக்கை தமிழ்நாடு போலீஸுக்கு முதலில் வரவில்லை. அந்த மாணவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் ஒவ்வொரு தகவலாகச் சொல்ல... அந்த அடிப்படையில்தான் ஜம்ஷீர் அலி, தீபு முதல் சயான், கனகராஜ் வரை மொத்த நெட்வொர்க்கையும் கண்டறிந்தார்கள். மறுநாளே கொடநாட்டுக்கு ஜிதின் ஜாயை அழைத்துச் சென்று அடுத்தகட்ட விசாரணைக்கு நகர்ந்தனர்.

வயநாடு மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, கார் மெக்கானிக் ஒருவரின் மகன் ஜிதின் ஜாய். உள்ளூர் மக்களால் கிரிக்கெட்‌ வீரனாகவும், கார்ட்டூனிஸ்ட்டாகவும், வாகன‌ப் பிரியனாகவும் அறியப்பட்ட ஜிதின் ஜாய், கொடநாடு வழக்கில் ‌10-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது எப்படி? வயநாடு நோக்கிப் பயணித்தோம்.

“கார் வேணும்... ஊட்டிக்கு எடுத்துட்டு வர முடியுமா?”

வயநாட்டிலுள்ள அணைப்பகுதிக்கு நம்மை வரச் சொன்ன ஜிதின் ஜாய், ஒரு ஐடி கம்பெனி ஊழியரைப்போல டிப்டாப்பாக வந்துநின்றார். ‘இவரா இந்த வழக்கில் கைதான முதல் நபர்?’ என்ற ஆச்சர்யத்தில் நாம் இருக்க... ‘‘எனக்குத் தமிழே சுத்தமா தெரியாது. இந்த கேஸ்ல வந்ததுக்கு அப்புறம்தான் தமிழ் பேசத் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என மலையாளம் கலந்த தமிழில் பேசத் தொடங்கினார்.

‘‘அம்மா பிரைவேட் ஸ்கூல் டீச்சர், அப்பா மெக்கானிக். ரெண்டு அக்கா, நான்தான் ஒரே பையன். வீட்ல ரொம்ப செல்லம். அப்பாகூட அடிக்கடி ஒர்க்‌ஷாப் போனதால, கார், பைக் மேல ரொம்ப ஈடுபாடு. ஸ்கூல்ல பிரைட் ஸ்டூடன்ட். கிரிக்கெட் பிளேயர். ஓவியமும் நல்லா வரைவேன். ஸ்டேட் லெவல்ல கார்ட்டூன் போட்டியில கலந்துருக்கேன். பாட்டுப் பாடுறதும் ரொம்பப் பிடிக்கும். இப்படி யூனிக்கா இருந்தேன்.

2017-ல்ல, சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு பி‌.ஜி கோர்ஸ் பண்ற கேப்ல ஊருக்கு வந்தேன். வீட்ல சும்மா இருந்தப்ப, என்னோட ஃபிரெண்ட் நடத்துற கார் வாட்டர் சர்வீஸ் சென்டருக்கு அடிக்கடி போவேன். அங்கேதான் எனக்கு ஜம்ஷீர் அலி (ஏ4) பழக்கமானார். திடீர்னு ஒருநாள் எனக்கு போன் பண்ணி, ‘அக்கா மேரேஜுக்கு ஊட்டிக்குப் போக கார் வேணும்’னு கேட்டார். எண்டேவர் காரை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். அடுத்த நாள் போன் பண்ணி, ‘இன்னொரு கார் வேணும். ஊட்டிக்கு எடுத்துட்டு வர முடியுமா?’னு கேட்டார். இன்னோவா காரை வாடகைக்கு எடுத்துக்கிட்டு, ஜாலி டிரிப் போகலாம்னு 23-ம் தேதி மதியம் தனியா ஊட்டிக்குக் கிளம்பினேன்.

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

“எங்களை விடச் சொல்லி ஸ்டேஷனுக்கு போன் வந்துக்கிட்டே இருந்துச்சு!”

சாயந்தரம் அஞ்சு மணி சுமாருக்கு, நடுவட்டத்துல ஜம்ஷீர்கிட்ட இன்னோவாவைக் கொடுத்துட்டு, ‘ஊருக்குக் கிளம்பறேன்’னு சொன்னேன். ‘கார் ஓட்ட ஆள்‌ இல்லை. ஒருநாள் மட்டும்தான்... நீயே கார் ஓட்டு, பணம் தரேன்’னு சொன்னார். நானும் ஓகே சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ஊட்டியில இருந்த ஒரு லாட்ஜுக்குப் போனோம். நான் பார்க்கிங்ல வெயிட் பண்ணினேன். நைட் எட்டு மணிக்கு மேல, ஜம்ஷீரோட நாலஞ்சு பேரு வந்து கார்ல ஏறுனாங்க. அவங்க யாரையுமே எனக்கு அப்போ தெரியலை. சொன்ன இடம் இல்லாம வேற ஒரு இடத்துக்குப் போனாங்க. எனக்கு எதுவுமே புரியலை. நடுராத்திரியில ஒரு பெரிய கேட்டு முன்னாடி வண்டியை நிறுத்தச் சொல்லிட்டு, கிளம்பிப் போயிட்டாங்க. நான் வண்டியிலேயே தூங்கிட்டேன். மூணு மணி நேரம் கழிச்சு வந்தாங்க. சதீஷன் (ஏ-5), பிஜின் குட்டி (ஏ-6) ரெண்டு‌ பேர் மட்டும் என்னோட வண்டியில ஏறினாங்க. வந்த வழியே வயநாடு விடச் சொன்னாங்க.

அதிகாலை அஞ்சு மணி இருக்கும்... கூடலூர் டவுன்ல ஏகப்பட்ட போலீஸ்காரங்க டூட்டியில இருந்தாங்க. எங்களோட வண்டியையும் நிறுத்தி விசாரணை செஞ்சாங்க. ஆளுக்கொரு பதில் சொன்னதால, சந்தேகப்பட்டு கூடலூர் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. கார்ல இருந்த சில பொருள்களையும் போலீஸ் எடுத்தாங்க. அப்போதான் ஏதோ சிக்கல்ல சிக்கிக்கிட்டோம்னு எனக்குப் புரிஞ்சுது. கார்ல இருந்த பொருள்கள், அந்த ரெண்டு பேரும் சொன்ன பதில் இதெல்லாத்தையும்வெச்சு, அவங்க தேடுற ஆள்கள் இவங்கதான்னு போலீஸ் 99 சதவிகிதம் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

எங்க கார் போலீஸ்ல மாட்டின விஷயத்தை, கார்ல இருந்த ஒருத்தர் யார்கிட்டயோ சொன்னார். அடுத்த நிமிஷமே யார் யாரோ அந்த நேரத்துல வந்து, எங்களை விடச் சொன்னாங்க. எங்களை விடச் சொல்லி ஸ்டேஷனுக்கும் ஏகப்பட்ட போன் வந்துக்கிட்டே இருந்துச்சு. கடைசியில ஒரு லெட்டர் மட்டும் எழுதிக் கொடுத்துட்டுப் போகச் சொல்லிட்டாங்க. இது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. யார் சொல்லி எங்களைப் போகவிட்டாங்கனு இப்போவரை புரியலை. ஆனா, அம்மா கட்சி ஆளுங்கன்னு உறுதியா தெரிஞ்சுது.

அதுக்கப்புறம் நாங்க தனித்தனியா பிரிஞ்சு போயிட்டோம். ஏதோ தப்பு நடந்திருக்கு என்பது புரிந்ததால், ஊருக்குப் போனதும் நடந்த விஷயத்தை கேரளா போலீஸ்ல நான் சொன்னேன். எந்தத் தொடர்புமே இல்லாத என்னைச் சாட்சியா சேப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா, என்னைக் குற்றவாளியா சேத்துட்டாங்க. இந்த கேஸுக்கு அப்புறம் என்னோட‌ நிம்மதியே போயிடுச்சு. கார்ட்டூன்‌ வரையறதைக்கூட மறந்துட்டேன். ரெண்டு அக்காவுக்கும் மாப்பிள்ளை கிடைக்கவே படாத பாடுபட்டேன். ஒருவழியா இப்போதான் அவங்களுக்கு மேரேஜ் முடிஞ்சுது. இந்த கேஸ்ல எனக்குத் தொடர்பு இல்லைன்னு மக்கள் கண்டிப்பா ஒருநாள் தெரிஞ்சுக்குவாங்க. நிரபராதியா என்னோட அடுத்த வாழ்க்கையைத் தொடங்குவேன்’’ என்றார் கண்ணீருடன்.

சாட்சி சொல்ல வந்தேன்... குற்றவாளி ஆக்கிவிட்டார்கள்!

ஜெயலலிதா படம்‌ போட்ட வாட்ச், கண்ணாடி, பொம்மை...

கூடலூர் காவல் நிலையத்தில், அன்றிரவு டூட்டி பார்த்த காவலர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘அன்னிக்கு விடியக்காலை மூணு மணிக்கு மேல இருக்கும். ‘கொடநாட்டுல கொலை, கொள்ளை நடந்துருச்சு. அலர்ட்டா இருங்க’னு வாக்கிடாக்கில வார்னிங் கொடுத்துட்டாங்க. அந்தச் சந்தேகத்துலதான் அந்த காரைப் பிடிச்சோம். ஜெயலலிதா படம்‌ போட்ட வாட்ச், கண்ணாடி பொம்மைனு ஏதேதோ இருந்துச்சு. அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கக்கூட எங்களுக்கு நேரம் கொடுக்கலை. எங்கெங்கேயோ இருந்து போன் கால் வந்துக்கிட்டே இருந்தது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கூடலூர் நிர்வாகிகள்கூட அந்த நேரத்துலயே ஸ்டேஷனுக்கு வந்துட்டாங்க. ஸ்டேஷன்ல கூட்டம் கூடிருச்சு. இன்ஸ்பெக்டருக்குக் கைகால் ஓடலை. அவங்க தந்த அழுத்தம் தாங்க முடியலை. ஒருகட்டத்துல வேற வழியே இல்லாம சும்மா ஒரு பேப்பர்ல எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டோம்’’ என்றார்.

ஜிதின் ஜாய் சொல்வதைவைத்துப் பார்க்கும்போது, கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட நிறைய பேர் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது!