பிரீமியம் ஸ்டோரி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம், ‘சென்னையின் ஷாஹீன் பாக்’ என்கிற அளவுக்கு நாளுக்குநாள் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. டெல்லி ஜே.என்.யூ (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) மாணவர்களின் ‘ஆஸாதி’ கோஷமும் இங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவரான ஆய்ஷி கோஷ், ஆஸாதி கோஷத்தை எழுப்ப... திரண்டிருந்த பெண்களும் சிறுவர் சிறுமியரும் அதை எதிரொலித்தனர்.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

கடந்த ஜனவரி 5-ம் தேதி முகமூடி அணிந்த குண்டர்களால் ஜே.என்.யூ-வில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானவர் ஆய்ஷி கோஷ். மண்டை உடைக்கப்பட்டு முகம் முழுவதும் குருதி வழிய கதறியபடி ஆய்ஷி கோஷ் நின்ற காட்சியைக் கண்டு தேசமே அதிர்ந்தது. கடந்த வாரம் சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம். புன்னகையுடன் நம்மை வரவேற்றவரிடம், “எப்படி இருக்கீங்க, காயங்கள் ஆறிவிட்டனவா?” என்றோம். “நான் நலமாக இருக்கிறேன்” என்றார் சிரித்தபடி.

அருகில் அமர்ந்திருந்த இந்திய மாணவர் சங்கத் தோழர் ஒருவர், ‘‘அந்தத் தாக்குதலில் ஆய்ஷிக்கு மண்டை உடைந்து 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆழமான வெட்டுக் காயத்தால் தலையில் அவ்வப்போது வலி ஏற்படுவதாகச் சொல்கிறார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இப்போது பரவாயில்லை. முதுகுத்தண்டுவடத்தைக் குறிவைத்து தாக்கியதால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அவரால் உட்கார முடிய வில்லை” என்றார் கவலையுடன்.

ஜே.என்.யூ-வில் நடைபெற்ற தாக்குதல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஆய்ஷி.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

‘‘வண்ணாரப்பேட்டைக்குச் சென்றிருந்தேன். அங்கு பெண்களும் குழந்தைகளும் மிகுந்த மன உறுதியுடன் போராட்டத்தைத் தொடர் கிறார்கள். பாசிசத்துக்கு எதிராகப் போராடிவரும் தமிழக இளைஞர்களைக் கண்டு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஜே.என்.யூ-வில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை. அங்கு கட்டணம் குறைவாக இருப்பதால்தான், எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களால் உயர்கல்வி பெற முடிகிறது. கட்டண உயர்வு என்பது அந்த வாய்ப்பை முற்றாக அழித்துவிடும். எனவேதான், அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

எல்லா மாநிலங்களிலிருந்தும் பல மொழிகளைப் பேசக்கூடிய மாணவர்கள் ஜே.என்.யூ-வில் படிக்கிறார்கள். அரசியல்ரீதியாக, கொள்கைரீதியாக எங்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளை விவாதங்கள் மூலமாகவும் கலந்துரையாடல் மூலமாகவும் தீர்த்துக்கொள்வதுதான் ஜே.என்.யூ-வின் கலாசாரம். ஆனால், ஜே.என்.யூ-வில் இப்படிப்பட்ட கொலைவெறித் தாக்குதல் என்பது இதுதான் முதன்முறை. இப்படிப்பட்ட வன்முறை நடவடிக்கைகள்மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, எதிர்க்குரலை நசுக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி மற்றும் பி.ஜே.பி ஆகிய அமைப்புகள் முயற்சி செய்கின்றன’’ என்று குற்றம்சாட்டினார் ஆய்ஷி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்?”

‘‘அங்கு வன்முறை நிகழ்ந்து இத்தனை நாள்களாகியும் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை. மாறாக, என்மீது மூன்று எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளார்கள். சர்வர் அறைக்குள் நுழைந்து வொயரைத் துண்டித்ததாக என்மீது குற்றம்சாட்டினார்கள். ஆனால், சர்வர் அறையில் எந்த வொயரும் துண்டிக்கப்படவில்லை என்பது ஆர்.டி.ஐ மூலம் தற்போது தெரியவந்துள்ளது. எங்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை ஜே.என்.யூ-வில் பேராசிரியர்களாக நியமிக்கும் அநியாயமும் நடக்கிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் எங்கள் துணைவேந்தர் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை; ஆறுதல் வார்த்தைகூட பேசவில்லை. அந்தத் தாக்குதலின் பின்னணியில் துணைவேந்தரை நீக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், ‘ஜே.என்.யூ துணைவேந்தர் சிறப்பாகப் பணிபுரிகிறார்’ என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ் கொடுக்கிறார்.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

பெண்களும், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தினரும், விளிம்புநிலையில் இருப்பவர்களும் ஏற்கெனவே பல்வேறு சமூகப் பாகுபாடுகளையும் அவமானங்களையும் சந்தித்துதான் உயர்கல்வி கற்க வருகிறார்கள். அவர்கள், ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகளையும் கொள்கை களையும் நிச்சயமாக விமர்சிப்பார்கள். எனவே, அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது.

பன்மைத்துவம் என்பதுதான் ஜே.என்.யூ-வின் சிந்தனை. இந்தி, இந்து, இந்துஸ்தான் என இந்தியாவை மாற்ற விரும்பும் சக்திகளுக்கு ஜே.என்.யூ-வின் அந்தச் சிந்தனை பிடிக்கவில்லை. எனவே, ஜே.என்.யூ-வை இழுத்து மூட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஆயுதம் தாங்கிய குண்டர்களைக் கண்டு அஞ்ச மாட்டோம்.”

“ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவராக இருந்த கன்ஹையா குமார், முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார். உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?”

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

“இப்போது என்னுடைய எம்.ஃபில் ஆய்வைச் சமர்ப்பிக்கப்போகிறேன். அதற்கடுத்து பிஹெச்.டி ஆய்வை மேற்கொள்ளப்போகிறேன். இன்று ஏராளமான பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஜே.என்.யூ-வுடன் மட்டும் நின்றுவிடாமல் பிற பல்கலைக் கழகங்களுக்கும் சென்று, அந்த மாணவர் களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, கேரளாவில் நடைபெற விருக்கும் மாணவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கப் புறப்பட்டார் ஆய்ஷி கோஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு