Published:Updated:

`அங்கு வேலைக்கு உத்தரவாதம் இல்ல’- டிராக்மேன் பணியை தேர்வுசெய்த மும்பை ஐஐடி மாணவர்

ராம் பிரசாத்

மும்பை ஐஐடி-யில் இரண்டு பட்டங்களை முடித்த மாணவர் ரயில்வே டிராக்மேன் பணியில் சேர்ந்தது அதிகாரிகளை ஆச்சர்யப்படவைத்துள்ளது.

Shravan Kumar
Shravan Kumar ( HT )

மும்பை ஐஐடி பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவுக்கு அளித்துக்கொண்டிருக்கும் கல்வி நிறுவனம். இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சுருக்கம்தான் ஐஐடி. இங்கு படிப்பதையே சிலர் கெளரவமாக கருதுகின்றனர். பீகாரை சேர்ந்த ஷரவன் குமார் மும்பை ஐஐடி-யில் பி.டெக் மற்றும் எம்.டெக் முடித்துள்ளார். ஷரவன் குமாருடன் படித்த சக நண்பர்கள் அனைவரும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் துறையில் பணியாற்ற ஷரவனை அவர்கள் கேட்டுப்பார்த்தும் வேண்டாம் என விடாப்பிடியாக இருந்துவிட்டார்.

Mumbai IIT
Mumbai IIT

ஐடி வேலை எல்லாம் வேண்டாம் எனக்கு அரசுப் பணிதான் வேண்டும் என்று அரசுத்தேர்வுக்கு முயன்றுள்ளார். ஷர்வன் 2015-ல் ஐஐடி-யில் படிப்பை முடித்தார். நிறைய தேர்வுகளை எழுதியவர் சமீபத்தில் ரயில்வேதுறை பணிக்கான ஆர்.ஆர்.பி தேர்வு எழுதியுள்ளார். குரூப்- D பிரிவுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். தற்போது அவர் டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார்.

மும்பை ஐஐடியில் இரண்டு பட்டங்களை முடித்தவர் டிராக்மேன் பணிக்கு வந்திருப்பது அதிகாரிகளை புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. இந்தப் பணிக்கு 10-வகுப்பு படித்திருந்தாலே போதும். அப்படி இருக்க உயர்கல்வி நிறுவனத்தில் படித்தவர் அதிகாரி பணிக்கே தேர்வாகக்கூடியவர், இந்தப் பணியில் சேர்ந்திருப்பதுதான் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

Representation image
Representation image

இதுகுறித்து ஷர்வன் கூறும் பதிலோ நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. ``அரசுப்பணியில்தான் ஜாப் செக்யூரிட்டி இருக்கு. தனியார் வேலைகளில் அது எல்லாம் இல்லை. சின்னவயசுல இருந்து அரசுப்பணியில் சேர வேண்டும் என ஆர்வம் இருந்தது” என்கிறார்.