“தெரிஞ்ச பையன் ஒருத்தன், நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிட்டுப் போய் பக்கத்துல இருந்த கவர்ன்மென்ட் ஆபீஸ் வளாகத்துல பாத்ரூம் போகவிட்டிருக்கான். போலீஸ் கம்ப்ளையின்ட் ஆகிடுச்சு. எம்.எல்.ஏ-வா இருக்கேங்கிறதுக்காக என்னென்ன விவகாரத்துக்கெல்லாம் கூப்பிடுறாங்க பாருங்க” என்று சிரித்தபடி குறும்புக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.
“படிச்சிட்டிருந்த நாள்களில் பொது அறிவை வளர்த்துக்கணும்கிற ஆர்வம் ரொம்பவே இருந்துச்சு. படிப்பு முடிச்சு 20 வருஷமாச்சு. இப்போ என்ன ஞாபகமிருக்கப் போகுதோ, சரி கேளுங்க” என்றார், ‘நாயகி’ சீரியலின் நாயகன் கிருஷ்ணா.
“விவகாரமா ஏதாவது கேட்டு என்னை மாட்டி விட்றாதீங்க தலைவா” என்று வேண்டுகோளை முன்வைத்தபடி பதில் சொல்லத் தயாரானார் நடிகர் ரவிமரியா.
“தெரியாத கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லுங்கன்னு கேப்பீங்களே... அதுதானே... இப்போ நான் ப்ரீதான்; அப்படியே பேசிடலாமா” என்று உற்சாகமானார் தொகுப்பாளர் அஞ்சனா.
தமிழக காங்கிரஸின் மேலிடப்பொறுப்பாளர் யார்?
பதில் : தினேஷ் குண்டுராவ்
விஜயதாரணி: “தினேஷ் குண்டுராவ்.”
கிருஷ்ணா: “எடுத்ததுமே அரசியல் கேள்வியா... அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.”
ரவிமரியா: “நல்ல பேருங்க. சமீபமாகூட அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ம்ம்... ஞாபகம் வந்திடுச்சு. குண்டுராவ்.”
அஞ்சனா: “காங்கிரஸில் எனக்குத் தெரிஞ்சது சோனியா காந்தி மேடம்தான். அவங்க இல்லேல்ல?”

தமிழின் முதல் வண்ணப்படம் எது?
பதில் : அலிபாபாவும் 40 திருடர்களும்
விஜயதாரணி: “ ‘நாடோடி மன்ன’னா? அதுவாத்தான் இருக்கும்.”
கிருஷ்ணா: “எம்.ஜி.ஆர் நடிச்ச படம்னு நினைக்கிறேன். ஆனா பேரு ஞாபகம் வரமாட்டேங்குது.”
ரவிமரியா: “ ‘நாடோடி மன்னன்’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்.’ இந்த ரெண்டுல ஏதோ ஒண்ணுதான்.”
அஞ்சனா: “அலிபாபாவும் 40 திருடர்களும்.”

சொத்துவரி விவகாரம் குறித்து ரஜினி ட்விட்டரில் வெளியிட்ட ஹேஷ்டேக் என்ன?
பதில் : #அனுபவமேபாடம்
விஜயதாரணி: “கல்யாண மண்டபத்துக்குச் சொத்து வரி கட்ட முடியலைன்னு கார்ப்பரேஷனுக்கு மனு கொடுத்தது, பிறகு கோர்ட்ல வழக்கு போட்டது, இது எதுவுமே அவருக்குத் தெரியாமலேயே நடந்திருக்குமோன்னு எனக்குத் தோணுது. மீடியாவுல நியூஸ் வந்த பிறகே அவர் கவனத்துக்குப் போயிருக்கும்னு நினைக்கிறேன். தன்னைச் சுத்தியே, தன்னைப் பங்கம் பண்ண நினைக்கிறவங்க இருக்காங்களேன்னு நினைச்சு, அவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும்கிற அர்த்தத்துலதான், ‘அனுபவமே பாடம்’னு சொன்னார்னு நான் நினைக்கிறேன்.”
கிருஷ்ணா: “ரஜினி சாரைக் கலாய்க்கிற கேள்வியா இது; ஆளை விடுங்க. எனக்குத் தெரியாது.”
ரவிமரியா: “அனுபவமே பாடம்.”
அஞ்சனா: “சொத்து வரி விவகாரம் வந்துச்சுன்னு தெரியும். ஆனா, நான் ட்விட்டர் பக்கம் போகலையே.”
தி.மு.க தொடங்கப் பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் யார்?
பதில் : யாருமில்லை, ‘பெரியாருக்காகத் தலைவர் நாற்காலி காலியாக இருக்கிறது’ என்று அண்ணா பொதுச்செயலாளராக இருந்தார்.
விஜயதாரணி: “அண்ணா, தி.மு.க தலைவரா இருந்ததில்லை. பெரியாருக்கு அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருந்ததுதான் வரலாறு. ஆனா பெரியார் கடைசி வரைக்கும் அந்தப் பொறுப்பை ஏத்துக்கலை.”
கிருஷ்ணா: “எம்.ஜி.ஆரா சார்?”
ரவிமரியா: “அண்ணாதுரை பொதுச்செயலாளரா இருந்தார்னு படிச்சது நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ தலைவரா யார் இருந்தாங்கன்னு தெரியலையே!’’
அஞ்சனா: “அண்ணா பொதுச்செயலாளரா இருந்தார். தலைவராக யாரும் இல்லைன்னு நினைக்கிறேன்.”

ஐபிஎல்லில் அதி வேகமாக பந்துவீசி சாதனை படைத்த வீரரின் பெயர்?
பதில் : அன்ரிச் நார்க்கியா
விஜயதாரணி: “இருக்கிற வேலைகளில் எங்க தம்பி கிரிக்கெட் பார்க்க நேரமிருக்கு?”
கிருஷ்ணா: “மேட்ச் பார்க்க முடியலைங்க. ஷூட் ஷெட்யூல் அப்படி பிசியா போயிட்டிருக்கு.”
ரவிமரியா: “டெல்லி டீம் பிளேயர் ரபாடா சரியா?”
அஞ்சனா: “சென்னை டீம் பிளேயரா” என்று நம்மிடம் எதிர்க்கேள்வி கேட்டவரிடம், ‘டெல்லி அணி வீரர்’ என்றதும், “சத்தியமா தெரியாது. சென்னை பிளேயரா இருந்தால்கூட தெரிஞ்சிருக்கும்” என்றார்.