Published:Updated:

மன்னிப்பா... பழிக்குப் பழியா... சவுக்கு சங்கரை விடுதலை செய்ய முன்வருமா நீதிமன்றம்?

சவுக்கு சங்கர்

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

மன்னிப்பா... பழிக்குப் பழியா... சவுக்கு சங்கரை விடுதலை செய்ய முன்வருமா நீதிமன்றம்?

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

Published:Updated:
சவுக்கு சங்கர்

உயர் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு, ‘கேப்பர் குவாரி சிறை’யில் (கடலூர்) அடைக்கப்பட்டிருக்கும் சங்கர் என்கிற சவுக்கு சங்கர் பற்றி ஊடகங்களில் கடந்த சில நாள்களாகக் கடுமையாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

அவமதிப்பு வழக்கு!

ஒருசாரார், ‘அவருடைய பேட்டிகளுக்காக, கருத்துரிமை மறுக்கப்பட்டு சிறைத் தண்டனை விதித்தது முறையல்ல’ என்கிறார்கள். மற்றொரு சாரார், அவரது விமர்சனக்கணையிலிருந்து தப்பாதவர் யாருமில்லை என்பதால் அவர்மீதே கோபம்கொண்டு, ‘இப்பிரச்னையில் தலையிட விரும்பவில்லை’ என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் படித்த சிலரோ, ‘நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை கொடுப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்றாலும், அந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டவிதம் குறைபாடு உடையது’ என்று மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள்.

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் கணிசமானோர் ஊழல் குற்றம்புரிந்தவர்கள்’ என்று கூறியதற்காக பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, நாடு முழுதும் கண்டனக் குரல் எழுந்தது. அந்த வழக்கு விசாரணையில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறியதோடு, அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை தண்டிக்க முடியாது என்றும் பலர் குரல் எழுப்பினர். இறுதியில் நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்து வழக்கை முடித்துக்கொண்டதோடு, அவர் மீதிருந்த பழைய வழக்கையும் சமீபத்தில் முடிவுக்குக் கொண்டுவந்தது.

சட்டம் என்ன சொல்கிறது?

இதையொட்டி எழுப்பப்பட்ட விவாதங்களில், 1971-ம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தையே ரத்துசெய்ய வேண்டுமென்றும் குரல் எழுப்பினர். அரசமைப்புச் சட்டத்தில் பேச்சுரிமைக்கு அடிப்படை உரிமை வழங்கிய அதேநேரத்தில் அவை நியாயமான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்றும், அந்தக் கட்டுப்பாட்டில் நீதிமன்ற அவமதிப்பும் உள்ளடங்கும் என்றும் பிரிவு 19(2)-ல் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் உச்ச நீதிமன்றத்துக்கு பிரிவு 129-லும், உயர் நீதிமன்றங்களுக்கு பிரிவு 215-லும் நீதிமன்ற அவமதிப்புகள் பற்றி விசாரிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அசல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை வரையறுத்து, 1971-ம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது.

1971-ம் வருட சட்டத்தின்படி இரண்டு வகையான அவமதிப்பு வழக்குகள் தொடர வாய்ப்புண்டு. ஒன்று சிவில் அவமதிப்பு. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பணியாதவர்களையும், நிறைவேற்றாதவர் களையும் தண்டிக்கலாம். இரண்டாவதாக, கிரிமினல் அவதூறு என்று சொல்லக்கூடிய வகை வழக்குகள். இதன்படி நீதிமன்றத்தை அவதூறு செய்பவர்களும், நீதிமன்ற நடைமுறைகளை ஆற்றவிடாமல் தடுப்பவர்களையும், நீதிமன்றத்தின் மாண்பையும் கௌரவத்தையும் குலைப்பவர்களையும் தண்டித்து, ஆறு மாத சிறைத்தண்டனை (அல்லது) ரூ.2,000/- அபராதம் (அல்லது) இவை இரண்டையும் சேர்த்துத் தண்டனையாக வழங்க முடியும்.

மன்னிப்பா... பழிக்குப் பழியா... சவுக்கு சங்கரை விடுதலை செய்ய முன்வருமா நீதிமன்றம்?

வழக்கு சரியாக நடந்ததா?

இரண்டாவது பிரிவில் நீதிமன்ற மாண்பு, கௌரவம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது நீதிமன்றத்தைக் குறித்து இயற்றப்பட்டதா (அல்லது) நீதி பரிபாலனம் செய்யும் நீதிபதிகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டதா என்ற கேள்வி அடிக்கடி எழலாம். மேலும், ஒரு நீதிபதி தனக்கு நேரடியாகத் தொடர்புள்ள வழக்குகளை விசாரிக்க முற்படுவது இயற்கைநீதிக்கு முரண்பட்டது என்று இருப்பினும், அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைச் சம்பந்தப்பட்ட நீதிபதிகளே விசாரிப்பதற்குச் சட்டத்தில் இடமுண்டு.

ஒரு நீதிபதி லஞ்சம் வாங்குகிறார் என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றிக் கூறினால் அவரை கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்க முடியும். அதேசமயத்தில் அப்படிக் குற்றம்சாட்டுபவர், தான் கூற முற்பட்டதை நிரூபிக்க முன்வந்து, அவரது கூற்று உண்மை என்று நிரூபித்தால் அவரை அச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. இதற்கான சட்டத் திருத்தம் 13(b) என்ற பிரிவில் 2006-ம் வருடம் நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் பதிப்பிப்பதும், நீதிமன்றத் தீர்ப்புகளை முறையாக விமர்சனம் செய்வதும் சட்டப்படிக் குற்றமாகாது.

நீதிமன்ற அவமதிப்பு சட்டம் பேச்சுரிமையைப் பறிப்பதாக இருப்பதாகவும், நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அதை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதாகவும் சமீபகாலங்களில் விமர்சனங்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இதனால், கிரிமினல் அவதூறு வழக்கு பதிவுசெய்யும் நீதிமன்ற அதிகாரத்தை ரத்துசெய்ய வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டு வருவதோடு, அந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில்தான் சவுக்கு சங்கர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டிகளை வைத்துத்தான் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தியும் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரிவு 19-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சங்கருக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரம் தண்டனையளித்த நீதிபதிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. என்றைக்கு ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது அல்லவோ... அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதோ... அப்போது தண்டனையை நிறுத்திவைப்பதுதான் முறை. இல்லையென்றால், வாரக் கடைசியில் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்து, ‘உன்னை இரண்டு நாள்களாவது சிறையில் வைப்பேன்’ என்று வீம்பு செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

இதுவரை தண்டிக்கப்பட்டோர்...

`இதற்கு முன்பு, இதே சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் யாரையுமே தண்டித்தது கிடையாதா?’ என்று கேட்டால், தண்டித்திருக்கிறார்கள் என்பதே பதில். பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சில வக்கீல்களும் நீதிமன்ற கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருக் கின்றனர். ‘சிவப்பு நாடா’ என்ற பத்திரிகை ஆசிரியர் குமாரசாமி (எ) கயிலை மன்னன், தலைமை நீதிபதி வீராசாமி மீது கூறிய ஊழல் புகாருக்காக உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. எஸ்.கே.சுந்தரம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் ஏ.எஸ்.ஆனந்த் என்ற தலைமை நீதிபதி ஓய்வு வயதை அடைந்துவிட்டார் என்பதால் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று அவருக்குத் தந்தியொன்றை அனுப்பியதற்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நாவரசு கொலையாளி ஜான் டேவிட் இல்லையென்று அளிக்கப்பட்ட தீர்ப்பையொட்டி, ‘அப்படியானால் உண்மையான குற்றவாளியை நீதிமன்றம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று கடிதமெழுதியதற்காக செந்தமிழ்க்கிழார் என்பவர் தண்டிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்ற வக்கீல் சங்கத் தலைவர் கருப்பனுக்கு மூன்று நீதிபதிகளடங்கிய அமர்வு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தது. மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஏ.கே.ராமசாமிக்கு `தண்டனை விதிப்போம்’ என்றும், `ஒரு வருடம் அவர் நன்னடத்தையுடன் செயல்பட்டால் தண்டனை ரத்துசெய்யப்படும்’ என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆர்.எம்.கிருஷ்ணராஜு என்ற வழக்கறிஞர், ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு எழுதிய கடிதமொன்றை வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரைத் தண்டிக்க முற்பட்டபோது, அவருக்காகச் சுமார் 200 வக்கீல்கள் திரண்டெழுந்து வாதாட முற்பட்டனர். பின்னர் பதவியேற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

விடுவிப்பதுதான் உத்தமமான செயல்!

இப்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது பலர் மீதும் ஏவப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீது வழங்கப்பட்ட தண்டனை ஒன்றும் புதிதல்ல. அதேசமயத்தில், ‘நீதிமன்றங்கள் கிரிமினல் அவமதிப்பு வழக்குகளைக் கையாளும் அதிகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்ற குரல் மீண்டும் எழும்பத் தொடங்கியுள்ளது. பேச்சுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறப்பட்டிருப்பதும், ஒரு கட்டுரையோ (அ) சொற்பொழிவோ நீதிமன்ற அவமதிப்பு வரையறைக்குள் வரும் என்பதும், அதனால் நீதிமன்ற மாண்பு குலைந்துவிட்டது என்று கூறி தனிப்பட்ட நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் எப்படி நியாயமாகும்?

அதேபோல் ஒருவரை தண்டிப்பதற்கு முன்னால் முறையான நடைமுறைகளைக் கையாள மறுத்து, ராணுவ நீதிமன்றங்கள்போல் சட்ட நியாயங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது.

மேலும் தண்டனை என்பது ஒருவரை அவரது குற்றத்தை உணரவைத்து, சீர்திருத்தி மறுபடியும் மைய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது தவறு செய்தவரையும் தண்டிக்காமல், மன்னிப்பதன் மூலம்தான் நீதிமன்றத்தின் மாட்சிமை பெருகுமேயொழிய பழிக்குப் பழி என்பது அதன் தீர்வாகாது. இதை நீதிபதிகள் உணர்வதோடு, ஒரு சிலர் தவறாகப் பேசிவருகிறார்கள் என்பதற்காக மாபெரும் அதிகார வரையறையை மேற்கொள்வது ஒரு கொசுவை நசுக்குவதற்கு உலக்கையைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மதுரை நீதிபதிகள் தாங்கள் அளித்த தண்டனையைச் சுயமாக திரும்பப் பெற்று, சவுக்கு சங்கரைச் சிறையிலிருந்து விடுவிப்பதுதான் உத்தமமான செயலாக இருக்கும்!