தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்த `நீராவி’ முருகனை நேற்று (16-ம் தேதி) திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸாரை அரிவாளால் வெட்டியதால் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டார். அந்த என்கவுன்டரில் நீராவி முருகன் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தென்மாவட்ட ஐ.ஜி-யான அன்பு, டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். என்கவுன்டரில் கொல்லப்பட்ட நீராவி முருகன் உடலைப் பார்வையிட்டதுடன் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவல்துறையினரையும் சந்தித்து விசாரணை நடத்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து நாங்குநெரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் விசாரணை நடத்தினார். நீராவி முருகனின் உடலை மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் பார்வையிட்டதைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

நீராவி முருகனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது சகோதரி மாரியம்மாள் தன் கணவர் ஆறுமுகத்துடன் வந்திருந்தார். உடற்கூறு ஆய்வு முடியும் வரையிலும் இருவரும் பிணவறையின் முன்பாக சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.
நீராவி முருகனின் உறவினர்களை செய்தியாளர்கள் சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்களை யாரிடமும் பேச விடாமல் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.