Published:Updated:

“உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்!” - சாமக்கோடாங்கிகளின் துயர் துடைத்த ஜூ.வி

நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது...
பிரீமியம் ஸ்டோரி
News
நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது...

நாங்க நடுச்சாமத்துல மயானத்துக்குப் போய் வழிபட்டுட்டு, கிராமங்களுக்குள்ள போய் குறி சொல்வோம்

ஊரடங்கிய நள்ளிரவில் விடாமல் குரைக்கும் நாய்கள் சத்தத்துக்கு மத்தியில், ஓங்கிய குரலில் ‘நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது’ என்று கிராமங்களில் குடுகுடுப்பைச் சத்தம் கேட்பது வழக்கம். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்களான சாமக்கோடாங்கி சமூகத்தினரின் வாழ்க்கையை கொரோனா ஊரடங்கு புரட்டிப்போட்டிருக்கிறது.

முருகன் - கணேசன் - அந்தோணி
முருகன் - கணேசன் - அந்தோணி

தலைப்பாகை, நெற்றி நிறைய விபூதி, மையமாகக் குங்குமம், கழுத்தில் பாசி மாலைகள், தோளில் துணிப்பை, கையில் குடுகுடுப்பையுடன் நள்ளிரவில் வலம்வரும் இவர்கள் சாமக்கோடாங்கி, குடுகுடுப்பைக்காரர், ராப்பாடி என பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் இவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக நெல்லை மாவட்டம், தருவை கிராமத்தை ஒட்டியிருக்கும் இவர்களின் குடியிருப்புக்குச் சென்றோம். 45 குடும்பத்தினர் அங்கு வசித்துவருகிறார்கள். அங்குள்ள கெங்கையம்மன் கோயில் முன்பாக சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வாகனச் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த முருகன் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘நாங்க நடுச்சாமத்துல மயானத்துக்குப் போய் வழிபட்டுட்டு, கிராமங்களுக்குள்ள போய் குறி சொல்வோம். ‘நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த வீட்டுல பூ பூக்கப் போவுது... இந்த வீட்டு ஆலமரம் சாயுது...’னு எங்க நாக்குல வந்து ஜக்கம்மா என்ன சொல்றாளோ அதை அப்படியே சொல்லுவோம். மறுநாள் பகல்ல நாங்க ஊருக்குள்ள போகும்போது, ராத்திரி சொன்னதை விளக்கமா சொல்லச் சொல்வாங்க. பணம், பொருள், சாப்பாடுனு எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கிடுவோம். ஆனா, கொரோனா வந்த பிறகு எங்க பொழப்பே போச்சு...’’ என்று உச்சுக் கொட்டியவரிடமிருந்து தொடர்ந்தார் பக்கத்துக் குடிசையில் வசிக்கும் கணேசன்.

“உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்!” - சாமக்கோடாங்கிகளின் துயர் துடைத்த ஜூ.வி

‘‘கொரோனா காலமகிறதால ராத்திரியில எங்கேயும் வெளியே போக முடியலை. பகல்ல போனா, ‘நீங்க பல இடங்களுக்குப் போறவங்க. உங்களால எங்களுக்கு கொரோனா தொத்திக்கும். ஊருக்குள்ள வராதீங்க’னு விரட்டுறாங்க. அதனால, அடுத்த வேளை சாப்பிடவே வழியில்லாம இருக்கோம். ஏதோ அப்பப்ப சேர்த்துவெச்ச அரிசி, பருப்பை வெச்சு காலத்தை ஓட்டுறோம். இன்னும் எத்தனை நாளைக்கு அது தாங்கும்னு தெரியலை’’ என்றார் ஆதங்கத்துடன்.

இவர்களின் ஊர் நாட்டாமையான அந்தோணி, தம் சமூகத்தின் குறைகளை அரசிடம் முறையிட்டு வருகிறார். அவர் நம்மிடம், ‘‘கொரோனா காலகட்டம்னு இல்லைங்க. எப்பவுமே புறக்கணிக்கப்பட்ட சமூகமாத்தான் நாங்க இருக்கோம். இந்த இடத்துல 35 வருஷமா குடியிருக்கோம். பட்டா கேட்டும் இதுவரைக்கும் ஒருத்தர்கூட எட்டிப் பார்க்கலை. எங்களுக்குப் பிறகு எங்க பிள்ளைகளும் இப்படிக் கஷ்டப்பட வேணாம்னு பள்ளிக்கூடத்துல சேர்த்திருக்கோம். என் பையன் காலேஜ் முடிச்சுட்டான். ஆனா, காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு சாதிச் சான்றிதழ் தர மாட்டேங்குறாங்க. அதனால, நிறைய பேர் படிப்பைப் பாதியிலேயே முடிச்சுக்குறாங்க’’ என்று வருத்தப்பட்டார்.

“உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்!” - சாமக்கோடாங்கிகளின் துயர் துடைத்த ஜூ.வி

இந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழக நாடோடிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளரான மகேஸ்வரியிடம் பேசினோம். ‘‘தமிழகம் முழுக்க பாம்பு பிடிக்குறவங்க, நரிக்குறவர்கள், சாட்டையால் அடித்துக் கொள்பவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என 20 வகையான நாடோடிச் சமூகத்தினர் ஐந்து லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள். அதனாலேயே பலரும் குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாமல் தங்களோடு தொழிலுக்கு அழைத்துச் சென்றுவிடு கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ் வாதாரம் இழந்து, உணவுக்கே வழியின்றித் தவிக் கிறார்கள்.

பகல் நேரத்தில் பெண்கள் கிராமங்களுக்குச் சென்று குறி சொல்வார்கள். அப்போது சிலர் பழைய துணிகளையும், உணவுப் பொருள்களையும் கொடுப்பார்கள். இப்போது கொரோனா காலம் என்பதால் அதுவும் இல்லை. பெண் குழந்தைகளுக்கு நாப்கின் வாங்கக்கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, பசியால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

“உங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்!” - சாமக்கோடாங்கிகளின் துயர் துடைத்த ஜூ.வி

கொரோனா தடுப்புப் பணிக்காக நெல்லை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு இந்த விவரங்களை எடுத்துச் சென்றோம். அக்கறையுடன் கேட்டவர், உடனடியாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டு தருவை கிராமத்துக்குச் சென்று, நாடோடி சமூகத்தினரைச் சந்தித்துப் பேசியதுடன் அவர் களுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினார்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

தொடர்ந்து அங்கு தகுதியுள்ள ஏழு பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனடியாக ஆணை பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ‘‘எல்லோருக்கும் ‘நல்ல காலம் பொறக்கும்’ என்று வாக்குச் சொல்லும் உங்களுக்கும் சீக்கிரமே நல்ல காலம் பிறக்கும். நீங்கள் குடியிருக்கும் இந்த இடத்துக்கு ஒரு வாரத்தில் பட்டா கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்று கிடைக்கவும் சீக்கிரம் ஏற்பாடு செய்கிறேன்’’ என்று உறுதியளித்தார்.

தங்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய ஜூ.வி-க்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்கள் நாடோடிச் சமூகத்தினர்.