Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘மட்டன் கொடுக்கலைன்னா கேஸ் போடுவேன்!’’

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் உளவுப் பிரிவில் பணியாற்றும் தமிழ்க் கடவுளின் பெயரைக்கொண்ட காவலர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த கறிக்கடைக்காரர் ஒருவரிடம் ஓசியில் மட்டன் கேட்டு மிரட்டிவந்திருக்கிறார். சமீபத்தில் கறிக்கடைக்குச் சென்ற அந்தக் காவலர், ‘‘மட்டன் கொடுக்கலைன்னா, லாட்டரி சீட்டு வித்ததா கேஸ் போட்டுடுவேன்’’ என்று சொல்ல... கறிக்கடைக்காரரும் பதிலுக்குப் பேசிவிட்டார். காவலருக்கும் கடைக்காரருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தவர்களில் சிலர், ‘‘மருதமலை படத்துல வர்ற வடிவேலு மாதிரி பண்றாரு” எனக் காவலரின் காதுபடவே கலாயத்திருக்கிறார்கள். அதைக் கேட்ட காவலர், கோபமாக மட்டன் வாங்காமலேயே சென்றுவிட்டாராம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஜூனியர் வாக்கி டாக்கி

‘கும்கி’ அதிகாரிக்குத் தனி வசூல் கணக்கு!

தமிழகக் காவல்துறையில் அதிகாரமிக்க பதவியிலிருக்கும் அதிகாரியான அவரை, காவல்துறை வட்டாரத்தில் ‘கும்கி’ எனச் செல்லமாக அழைப்பதுண்டு. ஏற்கெனவே சர்ச்சைகளில் சிக்கிய கும்கி அதிகாரி, தனக்குக் கீழே பணியாற்றும் அதிகாரிகளைத் தனித்தனியாக போனில் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘‘எவ்ளோப்பா வசூல் வருது?’’ என்று கும்கி அதிகாரி கேட்க, மறுமுனையில் ஒரு தொகையைச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘இல்லையே... என்கிட்ட இருக்குற லிஸ்ட் வேற மாதிரி இருக்கே...’’ என்று இவர் பட்டியலை வாசிக்கவும், மறுமுனையில் இருந்தவர்கள் அரண்டுபோயிருக்கிறார்கள். ‘‘அவரையும் கவனிச்சிருங்க. வேற வழியில்லை’’ என்று கும்கி அதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள் அறிவுரை சொல்லவே, தமிழகம் முழுவதுமுள்ள அதிகாரிகள் ‘சென்னை அலுவலக வசூல்’ எனப் புதிய கணக்கைத் தொடங்கி, மாதா மாதம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவருகிறார்களாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘பார்த்’தாலே கடுப்பு, போலி ரிப்போர்ட் அனுப்பு!

கோவை மத்தியச் சிறையில், பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் அதிகாரி ஒருவரைப் ‘பார்த்’தாலே சிறைக்காவலர்கள் கடுப்பாகிறார்கள். உயர் அதிகாரிகளுடன் அதிக நெருக்கத்திலிருக்கும் அவரின் லாபியைச் சகித்துக்கொள்ள முடிய வில்லையாம். சிறைக்குள்ளிருக்கும் வி.வி.ஐ.பி-க் களுக்கும், முக்கியக் குற்றவாளிகளுக்கும் அனைத்து வகையான சலுகைகளையும் அந்த அதிகாரி செய்துகொடுக்கிறாராம். அவரை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள்மீது போலி ரிப்போர்ட் அனுப்பி, இடமாறுதல் செய்யும் வேலையும் நடக்கிறதாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

வேலியே பயிரை மேயலாமா?

புதுக்கோட்டையில், நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்மீது நிலமோசடிப் புகாரைத் திருக்கட்டளை கிராம மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள பூங்கா இடத்தை ஆக்கிரமித்து, அந்த அதிகாரி வீடு கட்டியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் சிலருக்கு, ‘குண்டாஸில் கைதுசெய்துவிடுவேன்’ என அந்த அதிகாரி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. என்ன காரணம்?’ என்பது மக்களின் கோபமாக இருக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

அல்வா நகரத்தில் மன்மத அதிகாரி!

அல்வா நகர காவல்துறையில், கோபியர் விரும்பும் பெயர்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெயருக்கேற்றபடி பெண் காவலர்களிடம் அதிக நெருக்கமாக இருந்ததால், முத்து நகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். ஆனால், ஒரு மாதத்துக்குப் பிறகு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, மீண்டும் பழைய இடத்துக்கு வந்துவிட்டார். சமீபத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமான ‘அழகான’ பெயரைக்கொண்ட பெண் அதிகாரிக்குப் பிறந்தநாள். அதில் கலந்துகொண்டு, அந்தப் பெண் அதிகாரிக்கு அவர் கேக் ஊட்டும் போட்டோதான் இப்போது அல்வா நகரில் வைரல். அந்தக் காவல்துறை அதிகாரியின் வாட்ஸ்அப் எப்போதும் ஆன்லைனிலேயே இருப்பதும், காவலர்கள் மத்தியில் கிசுகிசுப்பாகப் பேசப்படுகிறது.