காட்டிக்கொடுத்த சிக்னல்... காட்டிக்கொடுக்காத இன்ஸ்பெக்டர்!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்திருக்கும் காவல் நிலையம் ஒன்றில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கச் சென்றால், ‘ஏட்டையாவைப் பார்த்துட்டுப் போங்க’ என்று டேக் டைவர்ஷன் காட்டுகிறார். ஏட்டையாவோ ‘நோட்டையா’வாகவே மாறி, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கறந்துவிடுகிறார். சமீபத்தில் சீட்டு நடத்திய ஒரு குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது. இதில் 30 லட்சம் ரூபாயை இழந்த ஒருவர் இன்ஸ்பெக்டரைச் சந்தித்து, புகார் கொடுத்திருக்கிறார். செல்போன் சிக்னல் மூலம் தலைமறைவானவர்கள் சேலத்தில் இருப்பதைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர், சென்னையிலிருந்து சேலம் செல்ல சொகுசு கார், தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே கையிலிருந்த காசையெல்லாம் இழந்துவிட்ட அந்த நபர், “அந்த அளவுக்கு செலவு செய்ய என்கிட்ட பணமில்லங்கய்யா’’ என்று கதறவே... கோபமடைந்த இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, அதே குடும்பத்திடம் பணத்தை ஏமாந்தவர்கள், காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார் கொடுக்கவே... கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்ட தகவல் தெரிந்ததும், “சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துல புகார் கொடுங்க’’ என்று இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டாராம். இன்னொரு பக்கம் சென்னை டு சேலம் எனப் பெரிய டீலிங் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் விவரமறிந்த சில காவலர்கள்!
மணிக்கணக்கில் சாட்டிங்... ரகசிய மீட்டிங்!

வெயிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டத்தில் ‘சத்தான’ காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், பணியாற்றும் இடங்களிலெல்லாம் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. தற்போது பணியாற்றும் காவல் நிலையத்திலும் அவரின் லீலைகள் தொடர்கின்றனவாம். புகார்கள், ஃபைனான்ஸ் பஞ்சாயத்துகள் என வரும் பெரிய இடத்து ஆட்களைக் கண்களாலேயே ‘கவர்’ செய்துவிடுபவர், மணிக்கணக்கில் சாட்டிங்கில் ஈடுபட்டு, பிறகு ரகசியமாக மீட்டிங்கையும் முடித்துவிடுகிறாராம்! ஸ்டேஷனுக்கு எதிரிலேயே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வெகுமானத்தைப் பெற்றுக்கொள்கிறாராம். இதுதவிர, மார்க்கெட் வசூல், டாஸ்மாக் வசூல், கட்டப் பஞ்சாயத்து என்று ஸ்டேஷனுக்கு வரும் வருமானத்தைப் பங்கு பிரிக்காமல் தனது பாக்கெட்டுக்குள்ளேயே அமுக்கிவிடுகிறார் என்றும் ஸ்டேஷனிலிருந்து புலம்பல் சத்தம் எஸ்.பி அலுவலகம் வரை கேட்கிறதாம். ஆனாலும், மேலிடம் வரை பெண் இன்ஸ்பெக்டர் நெருக்கம் காட்டுவதால், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையாம்.

இன்ஸ்பெக்டரின் சாதிப்பாசம்!
குளிர்ப் பிரதேச விஜிலென்ஸ் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ‘செல்வக் கடவுள்’ பெயர்கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், அவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறாராம். அதனால், அந்த இன்ஸ்பெக்டர் மீதே விஜிலென்ஸ் உயரகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளனவாம். சமீபத்தில் சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் நடந்த ரெய்டில் நான்கு அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் இரண்டு அதிகாரிகள், இன்ஸ்பெக்டரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைத் தப்பிக்கவைத்துவிட்டாராம். மாட்டிய மற்ற இருவர், ‘மேடம்... மேடம்...’ என்று கதறியும் கண்டுகொள்ளவே இல்லையாம் இன்ஸ்பெக்டர்.

“அவசரப்பட்டு பாராட்டிட்டாரோ!”
சென்னை காவல்துறையில் ‘சுதாரிப்பான’ உயரதிகாரி ஒருவரின் ஸ்பெஷல் டீமிலிருக்கும் முருகக்கடவுள் பெயர்கொண்ட காவலர் ஒருவர், திருட்டுப்போன பைக்குகளைப் பறிமுதல் செய்து, கமிஷனரின் பாராட்டுகளைப் பெற்றார். இந்தநிலையில், அவர் விசாரித்த திருட்டு வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, பெரிய அளவில் பணம் கைமாறியிருப்பது அம்பலமாகியிருக்கிறது. கடவுள் காவலர், காவலரின் சகோதரர், உயரதிகாரி ஆகிய மூவரும் கூட்டுச் சேர்ந்து பணத்தைப் பங்கு பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் கமிஷனர் அலுவலகத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து, ‘அவசரப்பட்டுப் பாராட்டிவிட்டாரே...’ என்று கமென்ட் அடிக்கிறார்களாம் கமிஷனர் அலுவலகக் காவலர்கள். உயரதிகாரிகள் விசாரணையில், புகாரில் சம்பந்தப்பட்ட காவலரின் சகோதரர் புதுப்பேட்டையில் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சில வில்லங்கங்களும் வெளிவரவே... விரைவில் விசாரணை சூடுபிடிக்கலாம் என்கிறார்கள் கமிஷனர் அலுவலக காக்கிகள்!