Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

“பர்மிஷன் குடுக்கலாமா மேடம்?”

ஜூனியர் வாக்கி டாக்கி

கன்னியாகுமரி மாவட்டம், ஐந்தெழுத்து காவல் நிலையத்தில், அதிக செல்வாக்குடன் இருக்கிறார் அப்ப்குதியைச் சேர்ந்த இரண்டெழுத்து அ.தி.மு.க பெண் நிர்வாகி. அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம், நிகழ்ச்சிகள் நடத்த யாராவது காவல் நிலையத்துக்குச் சென்றால், அங்கு பணியிலிருக்கும் முத்தான அதிகாரி, அந்தப் பெண் நிர்வாகியை போனில் அழைத்து ‘பர்மிஷன் கொடுக்கலாமா மேடம்’ என்று கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அவரிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால் மட்டுமே காவல்துறை அனுமதியளிக்கிறதாம். சமீபத்தில் குடிநீர்ப் பிரச்னை ஒன்றுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுப்பது தொடர்பாக, காவல் நிலையத்துக்குச் சென்ற ஐந்து இளைஞர்களை முத்தான ஆய்வாளர், பெண் நிர்வாகியின் பேச்சைக் கேட்டு மிரட்டியிருக்கிறார். பா.ஜ.க-வின் பின்புலம்கொண்ட இளைஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்குத் தகவலைக் கூறியதும், முத்தான அதிகாரிக்கும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் முத்தான அதிகாரி, சுமுகமாகப் பிரச்னையைச் சமாளித்துவிட்டாராம். #வில்லங்க விஸ்வாசம்!

‘‘வருத்தம்தான்... ஆனா, எங்களை வறுத்தெடுக்கிறார்!’’

ஜூனியர் வாக்கி டாக்கி

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, ஜனவரி 26-ல் திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. தகவல் தெரிந்ததும் டி.ஜி.பி அலுவலகத்தில் முக்கியப் பதவியிலிருக்கும் கும்கி அதிகாரி ஒருவர், திருவாரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை போனிலேயே வறுத்தெடுத்துவிட்டாராம். உடனே பத்து பேர்மீது வழக்கு பதிவுசெய்து, மூவரைக் கைதுசெய்து ஏழு பேரைத் தேடிவருகிறது காவல்துறை. இந்த மாவட்டத்திலிருக்கும் காவல்துறையினரின் பல குடும்பங்கள் விவசாயப் பின்னணியைக் கொண்டவை. காவல்துறையின் நடவடிக்கைகளின் போது, பலரும் கேட்ட சென்டிமென்ட் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றனர் போலீஸார். “எங்களுக்கு வருத்தம்தான். ஆனா மேலிடத்திலிருந்து எங்களை வறுத்தெடுக்குறாங்களே...” என்று பதிலளித்திருக்கிறார்கள் காவலர்கள். #விவசாயிகளும் காவலர்கள்தானே!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘நான் இருக்கேன்டி தங்கம்!’’

தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் கோட்டை மாவட்டத்தில், ‘சத்தான’ காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவருகிறார். செல்போன் சாட்டிங்... ரகசிய மீட்டிங் என பிஸியாக இருக்கும் அவர், தற்போது திருட்டு வழக்கில் சிக்கியவர்களை விடுவிக்க மாமூல் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறாராம். அந்தப் புகாரில் உயரதிகாரிகளின் விசாரணை வளையத்திலிருந்த அவர், திடீரென விடுப்பு எடுத்துக்கொண்டு மண்டல மேலதிகாரி ஒருவரைச் சந்தித்திருக்கிறாராம். ராஜாவான அந்த மேலதிகாரி ‘நீ போயிட்டு வாடி தங்கம். நான் இருக்கேன்டா’ என்று அன்பாகச் சொல்லி அனுப்பிவைத்திருக்கிறாராம். இப்போது மறுபடியும் இன்ஸ்பெக்டர் தைரியமாகக் கோட்டை மாவட்டத்தில் வலம்வருகிறாராம். #உங்க பேருக்காகவாவது கொஞ்சம் குறைச்சுக்கலாமே மேடம்!

காக்கிகளின் தனி டோல்கேட்!

ஜூனியர் வாக்கி டாக்கி

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு, கேரளாவிலிருந்து எம் சாண்ட் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வருகின்றன. இந்த லாரிகளுக்குச் சோதனைச் சாவடியிலேயே தனி டோல்கேட் கட்டணத்தை தேவாலா காக்கிகள் வசூலிக்கிறார்களாம். வசூல் தொகையில் பெரும்பகுதியை உயரதிகாரிகள் வைத்துக்கொண்டு, காக்கிகளுக்குச் சொற்ப தொகையைக் கொடுக்கின்றனர். கட்டணம் செலுத்த முரண்டுபிடிக்கும் லாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுகின்றனவாம். அதற்கு பயந்தே அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், காக்கிகள் கேட்கும் 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு, சோதனைச் சாவடிகளை லாரிகள் கடக்கின்றன! #300 காவல் வீரர்கள்!

காவலருக்கு வாய்ப்பூட்டுப் போட்ட இன்ஸ்பெக்டர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரத்தில் பணியாற்றும் ‘ஆற்றல் மிக்க’ இன்ஸ்பெக்டர் ஒருவர், தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களில் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறாராம். இந்தப் பொங்கலுக்குப் பெரும் தொகையை வசூலித்த இன்ஸ்பெக்டருக்கும், அவர் பணியாற்றும் காவல் நிலையத்திலிருக்கும் காவலர் ஒருவருக்கும் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ‘எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ... நான் பார்க்க வேண்டியவங்களைப் பார்த்துப் பேசிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் அந்தக் காவலர். அது பவர்ஃபுல்லான அமைச்சர் தொகுதி. அமைச்சரை மனதில்வைத்துத்தான் அக்காவலர் மிரட்டியிருக்கிறார். அதிர்ச்சியான இன்ஸ்பெக்டர், வசூல் தொகையில் பாதியைக் கொடுத்து, காவலரின் வாய்க்குப் பூட்டுப்போட்டிருக்கிறாராம். #அடிச்சுக்காதீங்க ஆபீசர்ஸ்!