பிரீமியம் ஸ்டோரி

முன் சீட்டில் அதிகாரி... பின் சீட்டில் கமிஷன் ஆசாமி!

ஜூனியர் வாக்கி டாக்கி

நாகர்கோவில் நகரத்தில் முக்கியமான வழக்குகளெல்லாம் வந்து குவியும் காவல் நிலையம் அது. அங்கு கோபியர்கள் கொஞ்சும் பெயர்கொண்ட ஒருவர், ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம்வருகிறார். காவல் நிலையத்துக்கு வழக்கு விஷயமாக யாராவது வந்தால் வாசலிலேயே அவர்களை அலேக்காக அமுக்கிவிடுபவர், ‘இது நம்ம ஸ்டேஷன். எல்லாரும் நமக்கு வேண்டப்பட்டவங்கதான்’ என்று பேசி கரெக்ட் செய்துவிடுகிறாராம். ஸ்டேஷனிலும் காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தருபவர், லம்ப்பாக ஒரு தொகையைக் கறந்துவிடுகிறார். அதுமட்டுமல்ல... காவல் நிலைய அதிகாரி தனது வாகனத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து செல்ல, பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் அளவுக்குச் செல்வாக்கோடு வலம்வருகிறார் அந்த நபர். யார் அவர், ஸ்டேஷனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்தால், ஓராண்டுக்கு முன்பு அந்தப் பகுதியிலுள்ள பெருமாள் கோயிலில் சிலைவைத்து வழிபாடு நடத்தி, வசூல் செய்த விவகாரத்தில் வழக்குகளைச் சந்தித்தவர் என்கிறார்கள். அந்தப் பிரச்னைக்காக காவல் நிலைய வாசலை மிதித்தவர், இப்போது காவல் நிலையமே கதியெனக் கிடந்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

ஊரெல்லாம் சரக்கு வாசம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் இரண்டெழுத்து அதிகாரி ஒருவரின் ஆசியுடன் பெட்டிக்கடைகள் வரை 24 மணி நேரமும் சரக்கு பாட்டில்கள் தாராளமாகப் புழங்குகின்றன. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில்கூட கிடைக்காத ஜில் பீர்கள், பெட்டிக்கடைகளின் ஐஸ் பெட்டிகளில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் இன்ன சரக்கு... இன்ன விலையில் விற்க வேண்டும் என்று விலை நிர்ணயம் செய்வதே அந்த மதுவிலக்கு அதிகாரிதானாம். ஒவ்வொரு கடைக்கும் ஏரியாவைப் பொறுத்து மாமூலும் நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இரண்டெழுத்து அதிகாரி சார்பாக மில்க் காவலர் மாமூல் வசூலிக்கச் சென்றபோது, ‘‘பக்கத்துல சில கடைகள்ல பாட்டிலுக்கு 20 ரூபா வரை குறைவா வெச்சு விக்குறாங்க. நம்ம கடையில காத்தாடுது. முன்ன மாதிரி மாமூல் கொடுக்க முடியலை’’ என்று முனகியிருக்கிறார் ஒரு கடைக்காரர். கோபமாக அந்தக் கடைகளுக்குச் சென்ற காவலர், ‘‘ராஸ்கல்... தொழில்ல வாக்குசுத்தம் வேணாமா? தொழில்ல போட்டி இருக்கலாம்... பொறாமை இருக்கக் கூடாது” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணணும் சொல்ல வர்றாரோ என்று விழிபிதுங்கிப் போனார்களாம் பெட்டிக்கடைக்காரர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘மீடியாவுக்குச் சொல்லிடுவேன்!’’

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றில் ஆய்வாளராகப் பணியாற்றுபவர், மீடியாக்களைக் காட்டியே பணம் கறந்துவிடுவதில் கில்லாடியாக இருக்கிறார். குறிப்பாக, போக்சோ குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கைதுசெய்து, முதல் தகவல் அறிக்கை தயார் செய்தவுடன், ‘‘மீடியாக்களை வரச் சொல்லப்போறேன்... உங்களோட மானம், மரியாதையெல்லாம் கப்பலேறப் போகுது’’ என்று மிரட்டுகிறாராம். குற்றச்சாட்டுக்குள்ளானவர் பதறிப்போனதும், ‘‘சரி சரி... கவலைப்படாதீங்க. வெளியில தெரியாம முடிச்சிடலாம்’’ என்று சொல்லி பேரம் பேசுகிறார். அவர் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டால், கமுக்கமாக மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்று ஆஜர் செய்துவிடுகிறாராம். மறுத்தால், உள்ளூர் மீடியாக்களுக்கு போன் செய்து வரவழைத்துவிடுகிறார். இப்படித்தான் சமீபத்தில் மைனர் பெண் காணாமல்போன விவகாரத்தில் காதலன் குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கறந்துவிட்டாராம் இன்ஸ்பெக்டர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்... பின்னணியில் கூடுதல் டி.ஜி.பி?

மதுரை மாநகரில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர்பெற்ற பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் விவகாரம் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறது. இதற்கு முன்னர் அந்த இன்ஸ்பெக்டர் பணியாற்றிய காவல் நிலையங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கண்டித்துவந்தார்கள். இந்தநிலையில்தான், தற்போது பணியாற்றிய காவல் நிலையத்தில் ‘மொழிரீதியாகப் பாகுபாடு பார்க்கிறார்’ என்று நாம் தமிழர் கட்சியினர் இவர்மீது புகார் எழுப்பினார்கள். இந்நிலையில், கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி மூலம் காய்நகர்த்தி இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர், மாநகர கமிஷனரின் குட்புக்கில் இடம்பெற்றிருந்தவராம். கமிஷனரை மீறி லாபி செய்து இன்ஸ்பெக்டரை மாற்றிவிட்டார்கள் என்கிறது காக்கி வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு