Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

புது அதிகாரி எப்படி? காத்திருக்கும் லாட்டரி கூட்டணி

சென்னையில் தொழிற்சாலைகள் அதிகமுள்ள காவல் மாவட்டத்தில் பணியாற்றிய பெண் உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டார். அவர் அங்கு பணியிலிருந்த வரையில் ஒரு நம்பர் லாட்டரி பிசினஸ் ஓஹோவென்று நடந்திருக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

அந்த பிசினஸில் ஈடுபட்டு வந்தவர்களும் சுகபோக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இதில் கோலோச்சிய இனிப்பான தி.மு.க பிரமுகர் ஒருவர் தன் வாரிசின் திருமணத்தை முன்னிட்டு காவல் மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, பட்டுச் சேலை என்று துணிமணிக்கே 15 லட்சம் ரூபாய் வரை செலவழித்துடன், உயரதிகாரிக்குத் தங்க நகைகளை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்தநிலையில்தான், உயரதிகாரியின் இடமாறுதல், தி.மு.க பிரமுகரை மட்டுமல்லாமல் ஒரு நம்பர் லாட்டரி பிசினஸில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ‘புது உயரதிகாரி எப்படி நடந்துகொள்வார் என்று தெரியவில்லையே...’ என்று காத்திருக்கிறதாம் லாட்டரி கூட்டணி!

ஜூனியர் வாக்கி டாக்கி

“போட்டோவைப் போட்டுறாதீங்கப்பா!” - பார்ட்டி கொடுத்த அதிகாரி அட்வைஸ்...

சென்னையிலிருந்து தென்மாவட்டத்துக்கு இடமாறுதலான ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்குக் கீழே பணியாற்றிய காக்கிகளுக்கு போன் செய்து குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். ‘என்ன விஷயம்?’ என்று புரியாமல் அங்கு சென்ற காக்கிகளுக்கு இன்ப அதிர்ச்சி... அனைவருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி தன் சொந்தச் செலவில் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அத்தனையும் வெளிநாட்டு இறக்குமதி அயிட்டங்களாம். ‘‘சார்... இதுவரைக்கும் எத்தனையோ ஆபீஸர்கள்கிட்ட வேலை பார்த்திருக்கிறோம். ஆனா, உங்களைப்போல யாரும் பார்ட்டி கொடுத்ததில்லை’’ என்று காக்கிகள் உற்சாக மிகுதியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் ஐ.பி.எஸ் அதிகாரியின் புகழ்பாடும் சமூக வலைதளங்களில் இந்த பார்ட்டி குறித்துத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள... பதறிப்போன அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, ‘‘யோவ்... பழக்கதோஷத்துல பார்ட்டி போட்டோக்களைப் போட்டுடாதீங்கய்யா’’ என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

காதலர்களைப் பிரித்த கைது சர்ச்சை!

கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ-யும் இன்ஸ்பெக்டரும் நெருங்கிப் பழகிவந்திருக்கிறார்கள். காவல் நிலையத்திலேயே முத்தச் சத்தம் அதிகமாகக் கேட்டதால், விஷயம் ‘காட்டு’த்தீயாக எஸ்.பி அலுவலகம் வரை சென்றது. இதையடுத்து பெண் எஸ்.ஐ வேறொரு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், குறுகிய நாள்களிலேயே அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் சிபாரிசால் அதே காவல் நிலையத்துக்கு வந்துவிட்டார் பெண் எஸ்.ஐ. இந்தச் சமயம் பார்த்து, விவசாய சங்கத் தலைவர் ஒருவரின் கைது சர்ச்சையில் சிக்கி, இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட, சோகத்தில் இருக்கிறாராம் பெண் எஸ்.ஐ.

ஜூனியர் வாக்கி டாக்கி

கஞ்சா வழக்கு... காஞ்சி பார் உரிமையாளர் கைங்கர்யம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், டாஸ்மாக் சூப்பர்வைசர் ஒருவரின் கை கால்களை உடைக்கச் சொல்லி பார் உரிமையாளர் கூலிப்படையினரிடம் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ தொடர்பாகப் புகார் எதுவும் பதிவாகாததால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பார் நடத்துபவர் சும்மாயிருக்கவில்லை. ‘ஆடியோ எப்படி வெளியானது?’ என்று தனக்கு விசுவாசமான காக்கிகள் மூலம் கண்டறிந்திருக்கிறார். இதையடுத்து, அதே காக்கிகள் மூலம் ஆடியோ வெளியிட்டவர்மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவுசெய்ய வைத்துவிட்டாராம். கஞ்சா வழக்கில் கைதானவர் கட்சி ஒன்றில் பொறுப்பிலிருந்தும், பார் நடத்துபவர் மாதந்தோறும் கொடுக்கும் மாமூல் பணத்துக்காக விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள் காக்கிகள். கஞ்சா வழக்கில் சிக்கிய கட்சிப் பிரமுகர், தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்கிறாராம். அதோடு, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி அலுவலகம் வரை ‘விசுவாச’ காக்கிகள் மீது புகார் சென்றிருக்கிறதாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

சிக்கலில் சர்ச்சை இன்ஸ்பெக்டர்!

அல்வா மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், சமீபத்தில் மேலதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டை அனுப்பிவைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அந்த இன்ஸ்பெக்டர் ஏற்கெனவே பணியிலிருந்த காவல் நிலையங்களில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றனவாம். போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்மீது பதியப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க பெரும் தொகையைப் பேரம் பேசியிருக்கிறார். அதோடு, கல் குவாரி அதிபர் ஒருவரிடமும் பெரும் தொகையைக் கறந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு விவகாரமாக வெளிவரத் தொடங்கியிருப்பதால், அந்தப் பெண் இன்ஸ்பெக்டருக்கு விரைவில் சிக்கல் வரலாம் என்கிறார்கள்.