Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்கார்ட் ஏட்டய்யா!

மயிலாடுதுறை மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள காவல் நிலையத்தில் கிருஷ்ணனின் மறுபெயர்கொண்ட ஏட்டு ஒருவர் பணியாற்றி வந்தார். மணல் மாஃபியாக்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக வாங்கிவந்த அவர், அதற்கு விசுவாசமாக மணலைக் கடத்திக்கொண்டு வாகனங்கள் செல்லும்போது, காவல்துறையினரிடம் சிக்காமலிருக்க எஸ்கார்ட்போல கடத்தல் வாகனத்துக்கு முன் சென்று வழிகாட்டி வந்திருக்கிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்கார்ட் ஏட்டய்யா குறித்த தகவல் மாவட்ட எஸ்.பி-க்குச் சென்றதும், தென்கோடியிலுள்ள ஸ்டேஷனுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். தற்போது எஸ்.பி இடமாற்றப்பட்டதும், ஆளுங்கட்சி மற்றும் மணல் மாஃபியா மூலம் வசூல் கொழிக்கும் மற்றொரு ஸ்டேஷனுக்கு எஸ்கார்ட் ஏட்டய்யா மாறுதலாகியிருக்கிறார். இங்கும் மாஃபியாக்கள் மணல் கடத்த எஸ்கார்ட்டாக பைக்கில் செல்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘தொட்டால் பூ மலரும்!’

தென்மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டத்துக்குப் பெண் விவகாரம் காரணமாகத் தூக்கியடிக்கப்பட்ட முருகக்கடவுளின் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், இங்கு வந்தும் திருந்தவில்லையாம். புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், ‘தொட்டால் பூ மலரும்’ என்று காதல் பாடலைப் பாடியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த பெண், ‘புகாரே வேண்டாம்... ஆளைவிட்டால் போதும்!’ என்று தலைதெறிக்க ஓடிவிட்டாராம். தகவல் வெளியில் தெரிந்ததும், திருச்சி மாவட்டத்திலிருந்து மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார். ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து மீண்டும் திருச்சி மாவட்டத்தில் சிறப்புப் பிரிவு ஒன்றுக்கு வந்த இன்ஸ்பெக்டர், தற்போது காதல் லீலைகளைச் சற்றே ஓரங்கட்டிவைத்துவிட்டு வியாபாரிகளை மிரட்டி கரன்சி கறப்பதில் தீவிரமாகிவிட்டாராம். இன்ஸ்பெக்டரைக் கண்டிக்க வேண்டிய மேலதிகாரியோ, தன் பங்குக்கு ஊர் ஊராக ரூம் போட்டு வசூல் வேட்டையை நடத்திவருகிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘மாமிக்கு பிரியாணின்னா ரொம்பப் பிடிக்கும்!’’

சென்னை - திருவள்ளூர் மாவட்ட எல்லையிலிருக்கும் மூன்றெழுத்து காவல் சரகத்தில், நடிகரின் பெயரைக்கொண்ட உதவி கமிஷனர் ஒருவர் பணியாற்றுகிறார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த உதவி கமிஷனரிடம் திருமணம், பிறந்தநாள் விழா என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அழைப்பிதழ் கொடுத்தால், தவறாமல் கலந்துகொள்வாராம். விழா நடத்துபவர் களிடம், ‘‘மாமியும் வர்றதா சொன்னா. ஆனா, வர முடியலை. அவளுக்கு பிரியாணின்னா ரொம்பப் பிடிக்கும்’’ என்பாராம். ‘‘அதுக்கென்ன... பிரியாணியைப் பார்சலா கட்டித் தர்றோம். மாமிக்குக் கொண்டுபோய்க் கொடுங்க’’ என்று பிரியாணி பார்சலை உதவி கமிஷனரின் காரில் வைத்துவிடுவார்களாம். இந்த பிரியாணி பார்சல் தகவலைத் தெரிந்துகொண்டவர்கள், இப்போதெல்லாம் உதவி கமிஷனரின் கார் வருவதற்குள் பிரியாணி பார்சலைத் தயாராகக் கட்டிவைத்துவிடுகிறார்களாம். பார்சலைக் கண்டதும் உதவி கமிஷனர் ஹேப்பியாகி விடுகிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘மாமா... சித்தப்பா...’’ பெண் இன்ஸ்பெக்டரின் சென்டிமென்ட்

டெல்டா மாவட்டத்தில் பெரிய பெரிய கோயில்கள் உள்ள ஊரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றில், நிலவின் பெயரைக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியாற்றிவருகிறார். நீண்டகாலமாக அவர் அங்கு பணியாற்றுவதால், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டாராம். எல்லோரையும் ‘சித்தப்பா’, ‘மாமா’ என்றுதான் இன்ஸ்பெக்டர் அழைப்பாராம். ‘‘எனக்கென்று சொந்தங்கள் இல்லை. நீங்கள்தான் எனக்கு எல்லாம்’’ என்று அவர்களிடம் சென்டிமென்ட்டாகப் பேசி, பல காரியங்களைச் சாதித்து வருகிறாராம். அதனால், இன்ஸ்பெக்டர் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், சீர்வரிசை, முறைசெய்தல் என்று ஆளுங்கட்சியினரே முன்னின்று நடத்துகிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

அமைச்சருக்குக் குடைபிடிக்கும் காவல்துறை அதிகாரி!

பனியன் மாவட்டத்தில், பேட்டை காவல் நிலையத்திலிருந்து மங்கலமான காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட வெளிச்சமான காவல்துறை அதிகாரி ஒருவர், ஏரியா அமைச்சர் பெயரைச் சொல்லி செய்யும் அட்ராசிட்டியைத் தாங்க முடியவில்லையாம். இரு காவல் நிலையங்களும் அமைச்சரின் தொகுதியில்தான் அமைந்திருக்கின்றன. அந்தக் காவல்துறை அதிகாரியும் அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அதனால், அமைச்சரை `அண்ணன்’ என்றுதான் அழைப்பாராம். அதனால், மாவட்டத்துக்குள் அமைச்சர் வந்தால், அவருக்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை அதிகாரியே முன்னின்று செய்வாராம். பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அமைச்சரின் பாதுகாப்புப் பணியில் கவனம் செலுத்திவந்தவர், இடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் இன்சார்ஜ் டூட்டியில் அமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறாராம். சமீபத்தில் அமைச்சர் தொகுதிக்கு வந்தபோது, மழை பெய்திருக்கிறது... அமைச்சர் நனையாமலிருக்க பி.ஏ-வை முந்திக்கொண்டு காவல்துறை அதிகாரியே குடைபிடித்து தனது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism