அலசல்
சமூகம்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

“நீங்களே சொல்லுங்கள்...” - பேரம் பேசும் விஜிலென்ஸ் அதிகாரி

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊழலைத் தடுக்க வேண்டிய பதவியிலிருக்கும் ‘சமீப சர்ச்சை’ விவகாரத்தைப் பெயரில்கொண்ட அதிகாரி ஒருவர் மீதே விஜிலென்ஸ் விசாரணை தேவைப்படுகிறதாம். ஊழல் தொடர்பான புகார்கள் அவரின் கவனத்துக்கு வந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்யும் அந்த அதிகாரி, ``சார்... உங்க மேல ஆதாரங்களோட ரிப்போர்ட் வந்திருக்கு. மேற்கொண்டு என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க சார்...’’ என்று `அன்பாக’ப் பேசுவாராம். பேரம் படிந்ததும், அந்த ரிப்போர்ட் அவரின் மேஜைக்குக் கீழே இருக்கும் குப்பைத்தொட்டிக்குள் சென்றுவிடுகிறதாம். இதனால் சிரமப்பட்டுத் தகவல் சேகரித்துக் கொடுக்கும் ‘இன்ஃபார்மர்கள்’ நொந்து நூலாகி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்!

“ஸ்டேஷனுக்கு வெள்ளையடிக்கணும்... காசு குடு!”

சேலம் மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் ‘பகலிரவு’ பெயர்கொண்ட எஸ்.ஐ ஒருவர், மாமூல் சர்ச்சையில் சிக்கி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பிறகு, அதிகாரிகளின் தயவால் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். வழக்கமாக தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகளைக் கேட்டு நச்சரிக்கும் காவல்துறையினர் மத்தியில், இந்த எஸ்.ஐ வித்தியாசமாக ஒன்று செய்கிறார். ``ஸ்டேஷனுக்கு வெள்ளையடிக்கணும்... காசு குடுங்க” என்று ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் பணம் கேட்டிருக்கிறார். கடுப்பாகிப்போன டிரைவர் ஒருவர், தன்னுடைய செல்போனில் இவர் பேசுவதை வீடியோ எடுத்து காவல்துறை உயரதிகாரியின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரைப் பச்சை குத்திய திருநங்கை!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தென்மாவட்டத்தில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றியபோது, பெண் மாஜிஸ்ட்ரேட் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒருநாள் நள்ளிரவில் ஐ.பி.எஸ்-ஸும் பெண் மாஜிஸ்ட்ரேட்டும் காரில் அருகருகே அமர்ந்து மலைப்பகுதி ஒன்றுக்குப் பயணித்திருக்கிறார்கள். அப்போது கார் விபத்துக்குள் சிக்கி, மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் இருவருக்கும் காயம். தேள்கொட்டிய திருடனாக இருவரும் அமைதி காக்க, சில மணி நேரத்திலேயே எப்படியோ தகவல் எஸ்.பி காதுக்குச் சென்றுவிட்டது. கண்டிப்புக்குப் பெயர் போன எஸ்.பி., உடனே ஐ.பி.எஸ்-ஸின் வாக்கி டாக்கியில் வந்து வறுத்தெடுத்திருக்கிறார். பிறகு மீசை டி.ஐ.ஜி ஒருவர் மூலம் நடவடிக்கையிலிருந்து தப்பியிருக்கிறார் அந்த ஐ.பி.எஸ். சென்னையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். அவரின் வீட்டில் சில ஆண்டுகளாக வேலை பார்த்த சிவனின் பெயரைக்கொண்ட திருநங்கை ஒருவர், அன்பின் வெளிப்பாடாகத் தன் கையில் அதிகாரியின் பெயரைப் பச்சை குத்தியிருக்கிறார். இந்த விவகாரம் ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவிக்குத் தெரிந்து, குடும்பத்தில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த விஷயமும் ஐ.பி.எஸ் வட்டாரங்களில் பரபரப்பாக உலாவருகிறது.

காசு... பணம்... துட்டு... புட்டு!

காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்க, துட்டு கொடுத்துச் சரிக்கட்டுவது வழக்கமானதுதான். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் துட்டோடு, அறுசுவை உணவையும் கொடுத்து காக்கிகள் மனதைக் குளிர்விக்கிறாராம். ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அவர், மாதந்தோறும் மாமூல் கொடுப்பதோடு, அறுசுவை உணவையும் ஸ்டேஷனுக்கு அனுப்பி அசத்திவருகிறாராம். அதில் ‘புட்டு’தான் ஸ்பெஷலாம். துட்டுக்கு மயங்காத காக்கிகள்கூட புட்டுக்கு மயங்கிக்கிடக்கிறார்களாம்.

துபாய் ஸ்டேஷனில் துட்டு மழை

மயிலாடுதுறை சப் டிவிஷனில், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்திலிருக்கும் ஒரு காவல் நிலையத்தில் கரன்ஸி கொட்டும் என்பதால், அதற்கு ‘துபாய் ஸ்டேஷன்’ எனக் காவல்துறையினர் பெயர் வைத்திருக்கிறார்கள். `மணல்’ திருட்டில் தினமும் ஸ்டேஷனிலிருக்கும் இன்ஸ்பெக்டர் கல்லாகட்டுகிறாராம். ஏற்கெனவே ‘மணல்’ குவாரி சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டரும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வும் ‘வே’ண்டப்பட்டவர்களாக இருப்பதால், அசைக்க முடியாத சக்தியாக இருந்துவருகிறாராம் அந்த இன்ஸ்!