பிரீமியம் ஸ்டோரி

வசூல் வேட்டைக்குத் துணைபுரியும் தெய்வத்தாய்!

டெல்டா மாவட்டம் ஒன்றில், காவல்துறை தனிப்பிரிவில் சிவபெருமானின் துணைவி பெயர்கொண்டவர் அதிகாரியாகக் கோலோச்சிக்கொண்டிருக்க... அங்கு சமீபத்தில் அவரின் மகனும் காவலராகப் பணியில் இணைந்திருக்கிறார். அடுத்தடுத்த நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு. தனிப்பிரிவையே தன் மகனின் கீழ் இயங்கவைத்திருக்கிறாராம் அந்த தெய்வத்தாய். அவரின் ஆசீர்வாதத்தால் மாவட்டத்திலுள்ள சாராய வியாபாரிகளிடமும், மணல் கடத்தல்காரர்களிடமும் மகன் வசூல் வேட்டையில் தூள்கிளப்புகிறாராம். ‘‘அம்மா மேலிடத்தில் இருப்பதால் உயரதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரியாமல் தடுத்து இருவரும் கல்லாகட்டுகிறார்கள்’’ என்று பொருமுகிறார்கள் கல்லாகட்ட முடியாத சக காக்கிகள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘கொரோனாவுக்கு நன்றி!’

ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நீலகிரியில், கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு சீஸனும் காற்று வாங்குகிறது. இதனால், ஊட்டி வியாபாரிகள் வருத்தத்தில் ஆழ்ந்திருக்க... காக்கிகளோ கொரோனாவுக்கு நன்றி சொல்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வெளி மாவட்ட காக்கி உயரதிகாரிகள் பலரும் ஊட்டி காக்கிகளைத் தொடர்புகொண்டு, ‘‘குடும்பத்துடன் ஊட்டிக்கு வர்றோம். நல்ல லக்ஸரி கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணி வைங்க. வாகன ஏற்பாட்டையும் பாத்துக்குங்க’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘‘எல்லா செலவையும் நம்ம தலையில கட்டிவிட்டுட்டுப் போயிடுவாங்கபோலிருக்கே’’ என்று அவர்கள் அலறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் புதிய கட்டுப்பாடுகளில் சுற்றுலாவை முடக்கியதால், கொரோனாவுக்கு நன்றி சொல்லிவருகிறார்கள். இந்த விவகாரத்தைச் சொன்ன ஊட்டி காக்கி ஒருவர், ‘‘சீஸன் ஆரம்பிச்சா போதும்... ரூமப் போடு; சரக்க வாங்குனு டார்ச்சர் பண்ணுவாங்க. இது பத்தாதுன்னு போகும்போது வர்க்கி வேணும்; சாக்லேட் வேணும்; தைலம் வேணும்னு செலவை நம்ம தலையில கட்டிட்டுப் போயிருவாங்க. இந்த வருஷம் ரெண்டு மடங்கு போன் கால் வந்ததால பயத்துல இருந்தோம். நல்லவேளை... கொரோனா காப்பாத்திடுச்சு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

மாயமான 18 மதுபாட்டில் பெட்டிகள்!

கரூர் டு திருச்சி சாலையில், காவிரிக் கரையை ஒட்டியுள்ள ஊரில் பணியாற்றும் மலைக்கடவுள் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர், 18 மதுபாட்டில் பெட்டிகளை மாயமாக மறையவைத்ததைப் பற்றித்தான் வாய்வலிக்கப் பேசிக்கொள்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை காரில் கடத்திய கும்பலை, எஸ்.பி உத்தரவின்பேரில் அந்த இன்ஸ்பெக்டர் பிடித்திருக்கிறார். மொத்தம் 24 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஆறு பெட்டிகளைக் கணக்கு காட்டிவிட்டு மீதி 18 பெட்டிகளை அபேஸ் செய்திருக்கிறார். பிறகு 18 பெட்டிகளிலுள்ள மது பாட்டில்களையும் கள்ளச் சந்தை பார்ட்டிகளிடம் விற்றுக் காசாக்கிவிட்டாராம் அந்த பலே இன்ஸ்பெக்டர்.

‘என்கிட்ட எல்லா எவிடென்ஸும் இருக்கு!’

கொங்கு மண்டலத்தில் பொருளாதார குற்றப்பிரிவில் இருக்கும் களையான சர்ச்சைப் பெண் அதிகாரி ஒருவருக்கும், தமிழகமே அதிர்ந்த பாலியல் வழக்கில் பந்தாடப்பட்ட உயரதிகாரிக்கும் முன்பு நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இதைவைத்து அந்தப் பெண் அதிகாரி அவரிடம் ஏ.டிஎம் போல பணத்தைக் கறந்துவந்திருக்கிறார். இந்த நடவடிக்கைகள் பிடிக்காமல் உயரதிகாரி விலக முயல, கடுப்பான பெண் அதிகாரி, ‘என்கிட்ட எல்லா எவிடென்ஸும் இருக்கு. வெளியிலவிட்டு பெயரை டேமேஜ் பண்ணிடுவேன்’ என்று பிளாக்மெயில் செய்கிறாராம். ‘ஓராண்டாகத்தான் எந்தச் சர்ச்சையிலும் சிக்காம இருக்கேன். இனியும் எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாது’ என்று பெண் அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து இப்போதும் பணத்தை வெட்டிக்கொண்டிருக்கிறாராம் அந்த உயரதிகாரி.

ஜூனியர் வாக்கி டாக்கி

கொம்பனுக்குப் பல்லக்கு தூக்கும் காக்கிகள்!

ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு இறைச்சிக்காக லாரிகளில் அடிமாடுகள் கொண்டுசெல்லப்படுகின்றன. அரசின் விதிமுறைகளுக்கு மாறாக இந்த லாரிகளில் அதிக மாடுகளை அடைத்து, கொண்டுசெல்வதும், விதிமீறலுக்காக கரன்சியை அடித்து அதிகாரிகளைச் சரிக்கட்டுவதுமாக இந்த பிசினஸ் ஜெகஜோதியாக நடந்துவருகிறதாம். குறிப்பாக, ஆந்திராவிலிருந்து வேலூர் குடியாத்தத்தில் நுழையும் இந்த லாரிகள் கேரள எல்லையான வாளையார் செக்போஸ்ட் வரை எந்தப் பிரச்னையுமில்லாமல் செல்ல, வழியிலுள்ள 22 ஹைவே பேட்ரோல் போலீஸ் வாகனங்களுக்கும் தலா 500 ரூபாயை விசிறியடிக்கிறார்களாம். அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த லாரிகளுக்கு ‘கொம்பன்’ எனப் பட்டப்பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.

இதுபோக, கோவையைச் சேர்ந்த மாஃபியா கும்பல் ஒன்று ஈரோடு மாவட்டம், நசியனூர் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு மாடுகளை ஏற்றிவரும் ஒவ்வொரு லாரியிடமும் ரூ.5,000 வரை கறார் வசூல் செய்கிறார்களாம். அதிகாரிகள் வரை இந்தப் பணம் பாய்கிறது என்பதால், லாரி ஓனர்களும் எதற்குப் பிரச்னை எனப் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்களாம். இந்த லாரிகளில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் கொண்டுசெல்லப்படுகின்றனவாம். இதெல்லாம் தெரிந்தும் கரன்சிக்காக கொம்பனுக்கு சல்யூட் அடித்து போலீஸாரே பத்திரமாக அனுப்பிவைக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு