Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘உளவு சொல்லும் அதிகாரியே இப்படியா?’’

தஞ்சை மாவட்டத்தில் ‘பேபி’ காவல் நிலையத்தில் உளவுத் தகவல்களைச் சொல்லும் பொறுப்பில் புலவர் பெயர்கொண்ட அதிகாரி பணிபுரிகிறார். இவர் கள்ளச்சாராயம், மதுபானங்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யும் கும்பல், வெளிமாநில லாட்டரி விற்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு, ‘‘வர்ற லாபத்துல எனக்குப் பாதி தந்துடணும். நான் எஸ்.பி கவனத்துக்குப் போகாம பார்த்துக்குறேன்’’ என்று டீல் பேசி, மாதந்தோறும் பெரும் தொகையை வசூல் செய்துவிடுகிறாராம். ‘‘எஸ்.பி-க்குத் தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரியே இப்படி நடந்துகொள்கிறாரே...’’ என்று நொந்துகொள்ளும் சக போலீஸார், ‘‘குற்றவாளிகளின் டூ வீலரைப் பயன்படுத்தியதால் இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவரை, உளவு சொல்லும் இடத்தில் நியமித்தால் இப்படித்தான்!’’ என்று பழைய வரலாற்றைச் சொல்லி அலுத்துக்கொள்கிறார்கள்.

காவலருக்கே பாதுகாப்பு இல்லையா?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ-யாக இருப்பவர் செலின்குமார். இவரது வீடு புத்தன்சந்தை பகுதியில் உள்ளது. செலின்குமாரின் வீட்டிலிருந்த நாயை ஒரு மாதத்துக்கு முன்பு சிக்கனில் விஷம்வைத்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டார்கள். இந்தநிலையில், ஜூலை 3-ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்கு முன்பாக நிறுத்தியிருந்த கார் மற்றும் பைக்கை பெட்ரோல் ஊற்றி யாரோ எரித்துவிட்டார்கள். ‘‘எஸ்.எஸ்.ஐ செலின்குமார் விசாரித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராவது இதைச் செய்திருக்கலாம்’’ என்று சந்தேகிக்கிறார்கள். ‘‘களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகு, காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை’’ என்று புலம்புகிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட போலீஸார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

கரப்ஷன்... கலெக்‌ஷன்... டிரான்ஸ்ஃபர்!

நெல்லை மாநகர காவல்துறையின் முக்கியப் பொறுப்புக்கு மாறுதலாகி வந்த அதிகாரி, ‘ராஜாவுக்கு ராஜா நான்தான்’ என்கிறரீதியில் செயல்பட்டார். ஏற்கெனவே நெல்லையில் பணியாற்றிய முன் அனுபவம் இருந்ததால், வந்த வேகத்தில் கல்லாகட்டுவதிலும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டார். மணல் புள்ளி ஒருவரின் குடும்பச் சொத்துகள் தொடர்பான புகார் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. சகோதரச் சண்டையில் ஒரு தரப்பிடம் லகரங்களைக் கைப்பற்றிய அதிகாரி, மற்றொரு தரப்பு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரம் மேலிடம் வரை சென்றதால், சம்பந்தப்பட்ட அதிகாரி பயிற்சிப் பள்ளிக்குத் தூக்கியடிக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் மாற்றப்பட்டுள்ளார்கள். `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ...’ எனத் தெரிந்தவர்களிடமெல்லாம் புலம்புகிறாராம் அந்த அதிகாரி.

கூடாரத்தை மாற்றிய காக்கிகள்!

புதுச்சேரியில் புதிய அரசு பதவியேற்று 50 நாள்களைக் கடந்த பிறகே, அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். ஆனாலும், இன்னமும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிக டென்ஷனில் இருப்பது காவல்துறைதானாம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த காவல்துறை உயரதிகாரிகள் பலரும் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்காக முதல்வர் ரங்கசாமியின் வீட்டு வாசலிலும், அவர் செல்லும் அப்பா பைத்தியம் சாமிகள் கோயில் வாசலிலும் கூடாரம் அடிக்காத குறையாகக் காத்திருந்தார்கள். தற்போது உள்துறை அமைச்சர் பதவி, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் நமச்சிவாயத்துக்கு வழங்கப்படவிருப்பதாகத் தகவல் பரவியதை அடுத்து, முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு இருந்த கூடாரத்தைப் பிரித்து நமச்சிவாயம் வீட்டு வாசலில் போட்டதுடன், அவரது கிச்சன் கேபினெட் வரை ஊடுருவி உதவிகளைச் செய்துவருகிறார்களாம்!

காத்திருப்புப் பட்டியலில் ‘வசூல் மன்னன்!’

கரூர் காவல்துறையில் பணியாற்றிவந்த ஜெயமான உயரதிகாரி, அ.தி.மு.க ஆட்சியில் தனி ராஜ்யமே நடத்தி எல்லா கேஸ்களையும் ‘கேஷ்’களாக டீல் செய்துவந்தார். பணத்துக்காக உண்மையான கேஸை ஒன்றுமில்லாமல் செய்வதும், பொய் கேஸ்களைப் பதிவு செய்வதுமாக இவர் செய்த அட்ராசிட்டிகள் அதிகம். இவரால், பிரபல வழக்கறிஞர் ஒருவரும் நேரடியாக பாதிக்கப்பட்டார். இந்தநிலையில், ஆட்சி மாறியும் காட்சி மாறாமல் அவர் வசூல் வேட்டையைத் தொடர, அவரைப் பற்றி உயரதிகாரிகளுக்குப் புகார் மேல் புகார் சென்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க அவரின் கேடரிலுள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்கள். ஆனால், அதில் இவர் பெயர் இல்லை. அப்போது, ‘‘என்னை ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று கொக்கரித்த அவர், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட அந்த வழக்கறிஞர், அந்த அதிகாரியின் வண்டவாளங்களையெல்லாம் ட்விட்டரில் தண்டவாளம் ஏற்றி, முதல்வரை டேக் செய்த பிறகே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism