Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘விவரமான’ காவலருக்கு கல்தா!

நாகை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையிலிருந்த காவலர் ஒருவர் துப்பறிவதிலும், தகவல்கள் சேகரிப்பதிலும் விவரமானவர் என்கிறார்கள். அந்தக் காவலர் கொடுத்த தகவல்களால் கடந்த சில நாள்களாக அதிக அளவு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ‘தியாக’மான இன்ஸ்பெக்டரின் காவல் எல்லைக்குள் சரக்குகள் ஏராளமாகப் பிடிபட்டதால், அவருக்கு மூன்று மெமோக்கள் தரப்பட்டன. மேலும், போதைப்பொருள் விற்பனையும் குறைந்துபோனதால், டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு வர வேண்டிய மாமூலும் குறைந்துபோனதாம். என்ன செய்வது என்று யோசித்தவர்கள், அந்த விவரமான காவலரை, தனிப்படையிலிருந்து மாற்றிவிட்டார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஆதிக்கம் செலுத்தும் முன்னாள் உளவு அதிகாரி!

திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் பாடலாசிரியர் பெயர்கொண்ட முன்னாள் உளவுத்துறை பிரமுகரின் ஆதிக்கம் தாங்க முடியவில்லையாம். மீசைக்கார உச்சப் புள்ளியின் ஆசி இவருக்கு இருப்பதால், ‘யார் யாரை எந்தப் பதவியில் அமரவைக்க வேண்டும்’ என்பதையெல்லாம் இவர்தான் தீர்மானிக்கிறாராம். மாநகர உளவுப்பிரிவில் இருக்கும் முருகப் பிரமுகரும் இவரால் கொண்டுவரப்பட்ட நபர்தான் என்கிறார்கள். அத்துடன் அவரின் நெருங்கிய உறவினரான இதிகாச நாயகனையும் மீசைக்கார உச்சப் புள்ளியின் சொந்த ஊருக்குக் கொண்டுவந்திருக்கிறாராம். உச்சப் புள்ளியின் சொத்து விவரங்களைக் கவனிப்பதற்காகவே இந்த மாற்றம் என்கிறார்கள்.

மகனுக்காக மல்லுக்கட்டும் பெண் காவலர்!

கோவையின் இனிஷியல் காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர் ஒருவரின் 15 வயது மகன் தொடர் சர்ச்சையில் சிக்கிவருகிறான். சமீபத்தில் அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிக்கு வேண்டப்பட்ட ஒருவர் தன் காதலியுடன் வெளியில் உலாவ, அதை வீடியோ எடுத்திருக்கிறான் அந்தப் பெண் காவலரின் மகன். அந்த நபர் சிறுவனிடம் சண்டைபோட, தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டானாம். ஒருவழியாக அவனைப் பிடித்து புகார் அளிக்கச் சென்றபோதுதான், அவனின் தாய் போலீஸ் எனத் தெரியவந்தது. ‘புகார் எல்லாம் வேண்டாங்க’ என அவர்களிடம் சமரசம் பேசி பிரச்னையைச் சமாளித்திருக்கிறார் அந்தப் பெண் காவலர். இதேபோல, அந்தச் சிறுவன் சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறான். சக காவலர்களிடம் மல்லுக்கட்டி தன் மகனின் குற்றச் சம்பவங்களை மூடி மறைத்துவருகிறாராம் பெண் போலீஸ்.

எகிறும் காக்கிகளின் க்ரைம் ரேட்!

சமீபத்தில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் நீலகிரி மாவட்டம், சேரம்பாடி காவல் நிலைய எஸ்.ஐ ஒருவர் கைதுசெய்யப்பட்டார். வெளி மாநிலத்திலிருந்து கடத்திவந்த மதுபானங்களைப் பறிமுதல் செய்து, மசினகுடி காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது அவை மாயமாகின. பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால், கூடுதல் எஸ்.பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் இப்படி காக்கிகளின் குற்றப்பட்டியல் நீண்டுவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் தாண்டிய உறவில் தன்னுடன் இருந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய க்யூ பிராஞ்ச் எஸ்.ஐ-யைத் தப்பவைக்க காக்கிகள் சிலர் முயன்றார்கள். உஷாரான அந்தப் பெண்ணின் உறவினர்கள் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கவே, வேறு வழியில்லாமல் அந்த எஸ்.ஐ கைதுசெய்யப்பட்டார். ஆனாலும், வழக்கை நீர்த்துப்போகச் செய்து அந்த எஸ்.ஐ-க்கு குறைந்த அளவு தண்டனை மட்டுமே கிடைக்கும்படி செய்துவருகிறார்களாம் காக்கிகள் சிலர்!

எங்கேதான் போகிறார் உயரதிகாரி?

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், மக்களிடமிருந்து அநியாயத்துக்கு அந்நியப்பட்டிருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள். இவரை நேரில் பார்ப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறதாம். குறைகள், புகார்கள் தொடர்பாக இவரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வருபவர்கள், காத்திருந்து காத்திருந்தே களைப்படைந்துவிடுகிறார்கள். ‘‘சார் வருவாரா, மாட்டாரான்னு உறுதியா சொல்லிட்டா உதவியா இருக்கும். நாங்களும் நாலஞ்சு நாளா அலைஞ்சுக்கிட்டு இருக்கோம்’’ என்று கேட்கும் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியாமல் டூட்டியில் இருக்கும் காக்கிகள் தவிக்கிறார்கள். “வேலை நேரத்துல வேற எங்கதான் போயிருப்பார் அந்த உயரதிகாரி?” என்று புரியாமல் புலம்புகிறார்கள் மக்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

காவல் அதிகாரி பதவிக்கு போட்டி!

புதுச்சேரியில், நகர்ப்புற காவல் உயரதிகாரி பதவியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றிவருகிறார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்தப் பதவியைப் பிடிப்பதற்காக உள்ளூர் எஸ்.பி-க்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மசாஜ் நிலையங்கள், ஒரு நம்பர் லாட்டரி, பார் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் ஒவ்வொரு மாதமும் தேதி தவறாமல் வரிசையில் நின்று ஸ்வீட் பாக்ஸ்களை அடுக்கிவைத்துவிட்டுச் செல்வதால்தான் அந்தப் பதவிக்கு இவ்வளவு போட்டி நிலவுகிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அதேசமயம் தன்னை அந்தப் பதவியிலிருந்து மாற்றக் கூடாது என்று லீவு போட்டுவிட்டு டெல்லிக்குச் சென்று லாபி செய்துவருகிறாராம் பெண் அதிகாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism