Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலைமிட்டாய்க்கு பெயர்போன ஊரிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் ‘சிவத்த ஏட்டையா’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏட்டு பணியாற்றிவருகிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலைமிட்டாய்க்கு பெயர்போன ஊரிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் ‘சிவத்த ஏட்டையா’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏட்டு பணியாற்றிவருகிறார்.

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

இன்ஸ்பெக்டர் பெயரைச் சொல்லி பலே வசூல்!

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு, அவரது லிமிட்டில் மணல் கடத்தும் `வசூல்’ பிரமுகர் ஒருவர், 40 இன்ச் டி.வி வாங்கிக் கொடுத்ததாகத் தகவல் பரபரபக்க... ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானை விசாரணை செய்யும்படி உத்தரவிட்டிருந்தார் எஸ்.பி செல்வகுமார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாகப் புகாரை மறுக்க... ஸ்டேஷனில் பணியாற்றும் மற்ற போலீஸாரிடம் விசாரித்தபோதுதான், காவலர் தினகரன் என்பவர் வசமாகச் சிக்கியிருக்கிறார். அவர்தான் இன்ஸ்பெக்டர் பெயரைச் சொல்லி மாமூல் வாங்குவதோடு, டி.வி-யும் வாங்கி சொகுசாக இருந்திருக்கிறார். உடனடியாக டி.வி-யைப் பறிமுதல் செய்யச் சொன்ன எஸ்.பி., போலீஸ்காரர் தினகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதனால், மாவட்டத்திலுள்ள மாமூல் காக்கிகள் பலரும் பதற்றத்தில் இருக்கிறார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘பரோட்டா தராட்டா ஃபைன்!’’

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலைமிட்டாய்க்கு பெயர்போன ஊரிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் ‘சிவத்த ஏட்டையா’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏட்டு பணியாற்றிவருகிறார். அந்த ஊரின் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நடைபாதையில் தள்ளுவண்டியில் இரவு சாப்பாட்டுக் கடை நடத்திவந்தவரிடம், இரவு 10 மணிக்குப் போன அந்த ‘சிவத்த ஏட்டு’ பரோட்டா பார்சல் கேட்டிருக்கிறார். ‘‘பரோட்டா முடிஞ்சுட்டுய்யா. இட்லி, தோசை, ஊத்தப்பம்னு ஏதாவது வேணும்னா சொல்லுங்கய்யா... ரெடி பண்ணித் தர்றேன்’’ என்று கடைக்காரர் சொல்ல, ‘‘நான் கேட்டா பரோட்டா தர மாட்டியா?’’ என்று கண் சிவந்திருக்கிறார் ஏட்டு. மறுநாள் அதே ஸ்டேஷனிலுள்ள உயரமான எஸ்.ஐ-யுடன் வந்து, ‘‘எலேய் கொஞ்சம் மாஸ்க்கைக் கழட்டு’’ என்று அதட்டியிருக்கிறார்கள். கடைக்காரரும் மாஸ்க்கைக் கழட்ட, உடனடியாக அதை செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதன்பின், ‘‘ஏன் மாஸ்க் போடலை’’ என்று கடைக்காரரிடம் கேட்டு 200 ரூபாய் ஃபைனை வசூலித்தவர்கள், ‘‘இனிமே, பரோட்டா இல்லைனு சொன்னா, ஃபைன் கட்ட வேண்டியிருக்கும்... பார்த்துக்கோ’’ என்று எச்சரித்தார்களாம். ‘‘பரோட்டா தராததுக்கு ஃபைனா?’’ என்று புலம்பிவருகிறார் கடைக்காரர்.

‘‘புகார் கொடுக்க வாங்க!’’ ஆள்பிடிக்கும் போலீஸார்

சென்னையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவர், ‘போலி கால் சென்டர் மூலம் என்னிடம் 82,000 ரூபாய் கொள்ளையடித்துவிட்டார்கள்’ என்று கடந்த ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். ஓராண்டாகப் புகார் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் அந்தப் பெண் புகார் அளிக்கவே, சைபர் க்ரைம் போலீஸார் களத்தில் இறங்கி, டெல்லியில் வசிக்கும் அசோக்குமார்-காமாட்சி தம்பதியரைக் கைது செய்தார்கள். அவர்களின் வீட்டில் 8 லட்ச ரூபாய் ரொக்கத் தொகை கைப்பற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பலரையும் அந்தத் தம்பதியர் ஏமாற்றியிருந்தபோதும், ஒருவர் மட்டுமே புகார் கொடுத்துள்ளார்; அதுவும் 82,000 ரூபாய்க்குத்தான் என்பதால், மீதிப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ‘புகார் கொடுக்க வரவும்’ என்று கூவாத குறையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் காக்கிகள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

கல்லாகட்டியே மாடி வீடுகள் கட்டிய போலீஸ்!

கரூர் டூ திருச்சி சாலையிலிருக்கும் முக்கிய நகரிலுள்ள காவல் நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி-யாக இருந்த சோழ மன்னர் ஒருவரின் பெயரைத் தாங்கிய காவலர், தற்போது ஸ்டேஷன் டூட்டிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்தப் பகுதியிலேயே நீண்டகாலமாகப் பணியாற்றும் அவர் மணல் கொள்ளை, சந்துக்கடை மது விற்பனை, லாட்டரி விற்பனை, கஞ்சா, குட்கா விற்பனை என்று இல்லீகல் தொழில் செய்பவர்களுக்குக் கூட்டாளியாக இருந்து, மாதமானால் லட்சங்களில் கொழிக்கிறாராம். அந்த வருமானத்தைக் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள மாடி வீடுகள் இரண்டைக் கட்டியிருக்கிறாராம். அத்துடன், மனைவிக்கு ஹோட்டல் ஒன்றை வைத்துக் கொடுத்ததோடு, கந்துவட்டி தொழிலையும் நடத்தவைத்திருக்கிறார். இவரது அக்கப்போரைத் தாங்க முடியாத பொதுமக்கள், ‘இவரை மாத்திவிடுங்க’ என்று மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உயரதிகாரியைக் காப்பாற்றும் உச்சப் புள்ளி!

திருச்சியில் பணியாற்றும் சுந்தரமான உயரதிகாரி ஒருவர், மாவட்ட உச்சப் புள்ளியின் வலதுகரமாக வலம்வருகிறார். அவர் அலுவலகத்துக்கு வரும் நாள்களைவிட உச்சப் புள்ளியின் வீட்டுக்குச் செல்லும் நாள்கள்தான் அதிகம் என்கிறார்கள். டூட்டியைச் சரிவரப் பார்ப்பதில்லை என்பதால், அவரது லிமிட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், புகார்கள் தொடர்பாக மக்கள் யாரேனும் போன் செய்தால் போனை எடுக்காமல், ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ என மெசேஜ் மட்டும்தான் அனுப்புகிறார். அவருக்கு வரும் மாதாந்தர வசூல் குறைந்துவிட்டதால், சில நாள்களுக்கு முன்பு அவரின் எல்லைக்குட்பட்ட போலீஸாரை போனில் அழைத்து கடும் அர்ச்சனை செய்திருக்கிறார். இப்படி அவர்மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், உச்சப் புள்ளிதான் காப்பாற்றிவிடுவதாகச் சொல்கிறார்கள் காக்கிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism