Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘என் சேர்தான்... எனக்கு மட்டும்தான்!’’

திருச்சி மாநகரத்தில் பணிபுரிந்துவந்த இதிகாச நாயகன் பெயர்கொண்ட அதிகாரி ஒருவர், சமீபத்தில் வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ‘பசையான’ இடத்தைவிட்டு நகர மனம் இல்லாததால், இடமாற்ற ஆர்டரை ரத்துசெய்ய உயரதிகாரிகள் முதல் மாவட்டத்தின் உச்சப் புள்ளி வரை போராடிப் பார்த்திருக்கிறார். ம்ஹூம்... எதுவும் எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு டூட்டிக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கடுப்பில், அவர் உட்கார்ந்திருந்த சேர் உள்ளிட்ட சில பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டார். அதேபோல், நகரத்தின் மலைக்கு அருகிலிருக்கும் ஸ்டேஷனில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரியும் இடமாற்றத்தில் சென்றபோது டேபிள், சேர், ஏசி என அனைத்தையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார். என்ன காரணம் என்று விசாரித்தால், ‘‘அதெல்லாமே அவங்களுக்கு ஸ்பான்சரா வந்த சாமான்கள். அதான் எடுத்துட்டுப் போயிட்டாங்க’ என்று சொல்லி தலையில் அடித்துக்கொள்கிறார்கள் சக போலீஸார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

“ஊருக்குள்ள வந்துதானே ஆகணும்!”

மேற்குத் தொடர்ச்சி மலையில், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள் இருக்கும் அகத்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த அருவிக்குச் செல்ல யாரையும் வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்தநிலையில்தான், சமீபத்தில் பலத்த சிபாரிசுடன் அருவிக்குச் செல்ல முயன்ற காவல்துறை உயரதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினரை வனத்துறையினர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், ‘‘காட்டுக்குள்ள நீங்க ராஜாவா இருந்தாலும், ஊருக்குள்ள வந்துதானே ஆகணும்...’’ என்று ஓப்பனாகவே எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில்தான், வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவர் பைக்கில் சென்றபோது அவரை மறித்த போலீஸார், வாகனத்தின் ஆவணங்கள் சரியாக இல்லை என்று சொல்லி பைக்கை ஸ்டேஷனுக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். ‘‘அதிகாரிகளுக்குள்ள நடக்குற ஈகோ பிரச்னைக்கு என்னை மாதிரி கடைநிலை ஊழியரை மிரட்டி என்ன பயன்... முடிஞ்சா அதிகாரியோட வாகனத்தை மறிச்சுப் பாருங்களேன்...’’ என்று பாதிக்கப்பட்டவர் குமுறியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், நெல்லையில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

‘‘வெள்ளந்தியா இருக்காரே எஸ்.பி!’’

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை நாகை எஸ்.ஐ ஒருவர் மடக்கிப் பிடித்திருக்கிறார். சரக்கு மற்றும் மினி லோடு ஆட்டோ ஆகியவற்றை வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்க, 8 லட்சம் ரூபாய் வரை கேட்டு பேரம் பேசினாராம் எஸ்.ஐ. ஆனால், பேரம் படியவில்லை. இதில் ஏற்பட்ட கால தாமதத்தால் விஷயம் வெளியில் கசியவே... வேறு வழியில்லாமல் வழக்கு பதிவுசெய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்திருக்கிறார் எஸ்.ஐ. இந்த உள்ளடி விவகாரம் தெரியாத எஸ்.பி ஜவஹர், பெரிய அளவில் மதுபானங்களைக் கைப்பற்றியதற்காக அந்த எஸ்.ஐ உள்ளிட்ட டீமை அழைத்து பாராட்டியிருக்கிறார். “விஷயம் தெரியாத வெள்ளந்தியாக இருக்கிறாரே எஸ்.பி!” என்று சொல்லி நகைக்கிறார்கள் நாகை காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

வேட்டுவைத்த வீடியோ!

கோவை டி.கே மார்க்கெட்டுக்கு தினசரி காலை பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால், வாகனங்களை நிறுத்தக் கடும் சிரமம் ஏற்படுகிறது. மக்கள் வாகனங்களை பார்க் செய்யும் வரை வேடிக்கை பார்க்கும் போலீஸார், அதன் பிறகு வாகனத்துக்குப் பூட்டுப் போட்டுவிட்டு, “முந்நூறு கொடு... ஐந்நூறு கொடு” என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். ‘‘வாகனத்தை நிறுத்தும்போதே தடுக்கலாமே... அதைவிட்டுவிட்டு டார்ச்சர் செய்வது நியாயமா? எங்களுக்கு முறையான பார்க்கிங் வசதி செய்து கொடுங்கள்’’ என்று மக்கள் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான், பெரிய கடைவீதி போக்குவரத்துக் காவலர் பாப்பாத்தி என்பவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி சிக்கலை ஏற்படுத்தியது. அதையடுத்து, பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றினார்கள். ‘இனி போலீஸார் தொல்லை இருக்காது’ என்று வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சுவிட... அடுத்த நாளே ஜீப்பில் வந்த சில காக்கிகள், ‘‘அந்த வீடியோவை யார் எடுத்தது... அவங்களைச் சும்மா விடமாட்டோம்...’’ என்று மிரட்டுவதால், மன உளைச்சலுக்குள்ளாகிவருகிறார்கள் வியாபாரிகள்.

‘‘எங்கு போட்டாலும் திரும்ப வருவேன்!’’

தஞ்சை மாவட்டத்திலுள்ள நட்சத்திர காவல் நிலையத்தில் பணியாற்றும் பாம்பு பெயர் கொண்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், அருகேயுள்ள காவல் நிலையங்களுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டாலும் அடுத்த நாளே ‘அதர் டூட்டி’ என்ற பெயரில் பழைய இடத்துக்கே பணிக்கு வந்துவிடுகிறாராம். கிட்டத்தட்ட 13 வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருவதால், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள காட்டாறுகளில் நடைபெறும் மணல் கடத்தல் அந்தச் சிறப்பு எஸ்.ஐ தலைமையில்தான் நடக்கிறதாம். அத்துடன் கள்ள லாட்டரி, கள்ள மது விற்பனை செய்யும் கும்பலிடமும் தொடர்பிலிருந்து மாதம் தவறாமல் மாமூல் வாங்கி விடுகிறாராம். இதனால் ருசிகண்ட பூனையாக மாறிப் போனவர், பணி இடமாறுதலில் வேறு எங்கு போட்டாலும், தன் பவரைப் பயன்படுத்தி நட்சத்திர காவல் நிலையத்துக்கே வந்துவிடுவதாக சக காக்கிகளே புலம்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism