Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

கேஸ் இல்லை... ஒன்லி கேஷ்!

கரூர் - திருச்சி சாலையிலிருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றும் கவிஞரின் பெயர்கொண்ட எஸ்.ஐ ஒருவர், அனைத்து கேஸ்களையும் ‘கேஷ்’ ஆகவே டீல் செய்கிறார். சமீபத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் நடுரோட்டில் பிறந்தநாள் கேக்கை அரிவாளால் வெட்டியதுடன், வாகனங்களையும் மறித்து ரகளை செய்திருக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் அந்தப் பெண் எஸ்.ஐ-யிடம் புகார் கொடுக்க, இளைஞர்களிடம் டீல் பேசிவிட்டு “சின்னப் பசங்க... தெரியாமப் பண்ணிட்டாங்க. பேசித் தீர்த்துக்கலாம்’ என்று இரண்டு நாள்கள் மருத்துவரை அலைக்கழித்திருக்கிறார். இதில் கடுப்பான மருத்துவர் மேலதிகாரிகளை அணுகிய பிறகே, பெட்டி கேஸ் பதிவு செய்தாராம். “நூறு, இருநூறுகூட விட மாட்டேங்குறாங்க” என்று சக காக்கிகளே அந்த எஸ்.ஐ-யை நொந்துகொள்கிறார்கள்!

வேம்புவின் வீம்பு!

நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணிபுரிந்தவர் வேம்பு. கணவன் - மனைவி விவகாரம், வரதட்சணைப் புகார் என எது வந்தாலும் தட்சணை வாங்காமல் புகாரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இவரிடம் திட்டச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரிந்து சென்ற கணவரைச் சேர்த்துவைக்கக் கோரி மனு அளித்திருக்கிறார். இதற்கு ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசிய வேம்பு, அந்தப் பெண்ணை பல நாள்கள் அலைக்கழித்திருக்கிறார். ஒருகட்டத்தில் நொந்துபோன அந்தப் பெண், எஸ்.ஐ பேரம் பேசியதை செல்போனில் பதிவுசெய்து உயரதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டார். ஆதாரத்துடன் புகார் வந்ததால், வேம்புவை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் தஞ்சை டி.ஐ.ஜி பிரவேஷ் குமார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்.ஐ சரண்டர்... மனைவி கதறல்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் பேரழகி ஒருவர் முக்கியப் புள்ளிகள் பலரையும் வசியம் செய்து கோடிகளில் புரள்கிறார். சமீப மாதங்களாக அவரிடம் சரண்டராகியிருக்கிறார் ரோம் நகரின் பெயரைக்கொண்ட எஸ்.ஐ ஒருவர். இதனால், தற்போதெல்லாம் அந்த எஸ்.ஐ தனது வீட்டுக்கும் போவதில்லை; காவல் நிலையத்துக்கு வந்தாலும் உடனே கிளம்பிவிடுகிறார். காவல் நிலைய முக்கிய ஆவணங்களைக் காவலர்கள் மேற்படி வீட்டுக்கே எடுத்துச் சென்று கையெழுத்து வாங்கிச் செல்கிறார்களாம். இது தொடர்பாக எஸ்.ஐ-யின் மனைவி, உயரதிகாரிகளிடம் கதறியழுது புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கும் காரணம் அந்தப் பேரழகிதானாம். இந்த ஜோடி பற்றித்தான் இப்போது ஊரெங்கும் பேச்சு!

‘‘ரகசியங்களைச் சொல்லிவிடுவேன்!’’

மோசடி கும்பலுடன் சேர்ந்து வியாபாரி ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறுகிறது காவல்துறை. ஆனால், ``ஜாமீன் பெறுவதற்காகச் சில உயரதிகாரிகள் அவருக்கு உதவிவருகிறார்கள். ஜாமீன் உத்தரவு வரும்வரை அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள்” என்று காதைக் கடிக்கிறார்கள் நேர்மையான காக்கிகள் சிலர். “என்னைக் கைதுசெய்தால், சில உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை வெளியில் சொல்லிவிடுவேன்” என்று அவர் மிரட்டியதுதான் இந்த உதவிக்குக் காரணமாம். சமீபத்தில், 100 பவுன் தங்க மாலையை அவர் அணிந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பரவி, பலரையும் விழி விரியச் செய்தது குறிப்பிடத்தக்கது!