Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

சுவர் ஏறிக் குதித்த லஞ்ச அதிகாரி!

திருச்சியில் பயோ டீசல் கடத்திச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கேரளாவைச் சேர்ந்த அந்த லாரியின் உரிமையாளரிடம் 11 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட லாரி உரிமையாளர் பணத்தைக் கொடுக்க திருச்சி அலுவலகம் வந்திருக்கிறார். அப்போது ரோந்துப் பணிக்காக அந்த வழியாகச் சென்ற போலீஸ் வாகனத்தைப் பார்த்து, விஜிலென்ஸ் போலீஸார்தான் வருவதாக நினைத்து, பணத்தைக் காரிலேயே வைத்துவிட்டு ஓடியிருக்கிறார் லாரி உரிமையாளர். லஞ்சம் பெறுவதற்குக் காத்திருந்த உயரதிகாரியும் சுவர் ஏறிக் குதித்துத் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். இவர்கள் ஓடுவதைப் பார்த்த பிறகுதான் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அலர்ட் ஆன போலீஸார், பணத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதையடுத்து, லஞ்சம் கேட்ட அதிகாரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்!‘‘

ஜூனியர் வாக்கி டாக்கி

உயரதிகாரி பெயர் விடுபட்டது எப்படி?’’

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் ஆயில் கடைக்காரர் ஒருவரிடமிருந்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஏட்டு ராஜ்குமார் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தார்கள். ராஜ்குமாருக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ இருளப்பனும் கைதுசெய்யப்பட்டார். ‘‘ஆனால், இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட உயரதிகாரி ஒருவரை விட்டுவிட்டார்கள். அந்த அதிகாரியின் கணவர், அமைச்சர் ஒருவரின் பாதுகாவலராக இருக்கிறார். அந்தச் செல்வாக்கால்தான் உயரதிகாரியின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை’’ என்று கிசுகிசுப்பவர்கள், ‘‘இதெல்லாம் ‘ஆரோக்கிய’மான விஷயமாக இல்லை’’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.

கொடநாடு கொள்ளையர்களிடமே கொள்ளை!

கொடநாடு விசாரணை சூடுபிடித்திருப்பதை அடுத்து புதிய புதிய விவகாரங்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. கொடநாடு கொள்ளைச் சம்பவத்தை முடித்துவிட்டு விலையுயர்ந்த அலங்காரப் பொருள்களைக் காரில் எடுத்துச் சென்ற கும்பல், அன்றைய தினம் இரவுப் பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வாகன சோதனையில் சிக்கியிருக்கிறது. மேலிடத்திலிருந்து வந்த போன் அழைப்பால் அந்தக் கும்பலை பெண் இன்ஸ்பெக்டர் விடுவித்துவிட்டாலும், அவர்கள் கொள்ளையடித்ததிலிருந்து இரண்டு மூட்டைப் பொருள்களை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டாராம். அன்றைய தினம் இரவுப் பணியிலிருந்த அனைத்து காக்கிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது வேறு மாவட்டத்தில் ஆய்வாளராக இருக்கும் அந்த இன்ஸ்பெக்டரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சக காக்கிகளே தனிப்படையினரின் காதைக் கடித்துவருகிறார்கள். என்ன நடக்குமோ என்று கலக்கத்தில் இருக்கிறாராம் அம்மணி!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஆயுதப்படை அதிகாரியின் அர்ச்சனை!

சென்னை மாநகரத்தில் இருக்கும் ஆயுதப்படைப் பிரிவின் பெண் அதிகாரி ஒருவருக்கு, அவருக்குக் கீழ் பணியும் காவலர்கள் ‘ஆனந்த’மாக இருந்தால் பிடிக்காதாம். குறிப்பாக பெண் காவலர்கள் விடுப்பு, பர்மிஷன் என்று கேட்டால் ஆபாச அர்ச்சனையைத் தொடங்கிவிடுகிறாராம். ‘நீ அவனோட ஊர் சுத்தத்தானே லீவு கேட்குற... ஏற்கெனவே ஒருத்தனோட சுத்திக்கிட்டிருந்தியே... என்னாச்சு?” என்று தொடங்கி காதுகூசும் வகையில் வசைபாடுவாராம். சில நாள்களுக்கு முன்பு பெண் காவலர் ஒருவர் இரண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டிருக்கிறார். வழக்கம்போல அவரையும் ஆபாச வார்த்தைகளால் அந்தப் பெண் அதிகாரி வறுத்தெடுக்க... மனமுடைந்த பெண் காவலர் கையை அறுத்துக்கொண்டார். இதையடுத்து, “விஷயத்தை வெளியே சொன்னால் சர்வீஸ் புக்கில் கைவைத்துவிடுவேன்” என்று பெண் காவலரை மிரட்டியே விஷயத்தை அமுக்கிவிட்டாராம் பெண் அதிகாரி!

‘‘வரப்போறாரு வசூல் ராஜா!’’

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோர காவல் நிலையத்துக்கு, கள்ளச்சாராயம் முதல் மணல் கொள்ளை வரை வருமானம் கொட்டுகிறது. இதனால், காவல் நிலையத்துக்கென்று ஒரு மாமூல் தொகையும், இன்ஸ்பெக்டருக்குத் தனியாக ஒரு மாமூல் தொகையும் வாரந்தோறும் வந்துவிடுகின்றனவாம். இதைக் குறிவைத்து திருவாரூர் மாவட்டத்திலிருந்து ‘மணி’யான இன்ஸ்பெக்டர் ஒருவர் இந்தக் காவல் நிலையத்துக்கு இடமாற்றல் கேட்டு தீவிர முயற்சிகளைச் செய்துவருகிறார். இதற்காக லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகளை கவனித்துவிட்டவர், வாரிசுப் புள்ளி ஒருவரையும் சந்தித்துவிட்டாராம். இவர் ஏற்கெனவே பணிபுரிந்த காவல் நிலையங்களில் மாமூல் வசூலை ஸ்டேஷனுக்குப் பிரித்துக் கொடுக்காமல், மொத்தமாக தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்வாராம். இதனால், “அவர் நம்ம ஸ்டேஷனுக்கு வந்துட்டா, நமக்கு கிடைக்குற மாமூல் கிடைக்காதே!” என்று புலம்புகிறார்கள் காவலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism