Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

உயரதிகாரி காட்டம்... நடுரோட்டில் கதறியழுத பெண் எஸ்.ஐ!

நெல்லை மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களை ஓய்வின்றி வேலை வாங்கி டார்ச்சர் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது. இது பற்றி ஏற்கெனவே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆடியோ பதிவாக தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் நெல்லை மாவட்டத்துக்கு வந்த காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு, அந்த எஸ்.ஐ-யை அழைத்து ஆறுதலாகப் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், அதன் பிறகும் உயரதிகாரிகளின் நடவடிக்கையில் மாற்றம் இல்லையாம். சில நாள்களுக்கு முன்பு ஓப்பன் மைக்கில் பேசிய அதிகாரி ஒருவர், டிராஃபிக் பெண் எஸ்.ஐ-யிடம் காட்டமாகப் பேசியிருக்கிறார். மனமுடைந்துபோன அந்தப் பெண் எஸ்.ஐ., நடுரோட்டிலேயே கதறி அழுதிருக்கிறார். சாலையில் சென்றவர்கள் என்னவோ ஏதோவென்று பதறிப்போய் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்கள்! ‘‘எங்க பிரச்னைக்கு எப்போதான் தீர்வு கிடைக்கும்?’’ என்ற புலம்பல் சத்தம் நெல்லை காவல்துறையில் அதிகமாகவே கேட்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘சும்மா சும்மா வராதீங்கப்பா!’’

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான கட்டுமானங்களை எழுப்புவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஊட்டியில் முக்கியமான இடத்திலேயே ஜவுளி நிறுவனம் ஒன்று, பல விதிமீறல்களைச் செய்து பிரமாண்டமான கட்டுமானத்தை எழுப்பி கடையைத் திறந்திருக்கிறது. இந்த விதிமீறலைக் கண்டுபிடித்த ஊட்டி காக்கிகளில் சிலர், அடிக்கடி‌ கடை வாசலுக்குச் சென்று ஏதேனும் பிரச்னையை எழுப்பி கல்லாகட்டி வந்திருக்கிறார்கள். காக்கிகளின் குடைச்சலைச் சமாளிக்க முடியாத அந்த நிறுவனம், காக்கிகள் பலரையும் ஊட்டியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து, கணிசமான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி வாங்கும் வவுச்சரைக் கொடுத்து, ‘‘சும்மா சும்மா வந்து பிசினஸைக் கெடுக்காதீங்கப்பா’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போதும்கூட இரண்டு, மூன்று வவுச்சர்களைக் கேட்டு சண்டைபோட்டார்களாம் சில காக்கிகள்!

10 மணிக்கு மேல் போன்... வறுத்தெடுத்த இன்ஸ்பெக்டர்!

நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் 24 மணி நேரமும் அலர்ட்டாக இருக்க வேண்டும். ஆனால், சென்னையின் மலை ஏரியாவை கவனிக்கும் பிஸ்கட் பெயர்கொண்ட நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், ‘‘நைட் பத்து மணிக்கு மேல எனக்கு யாரும் போன் பண்ணக் கூடாது’’ என்று அவருக்குக் கீழ் பணியாற்றும் காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். சமீபத்தில் ஒருநாள் சட்டம், ஒழுங்கு தொடர்பாக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இதைக் காவலர் ஒருவர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து சொல்ல முயன்றிருக்கிறார். போனை எடுத்த இன்ஸ்பெக்டர், ‘‘இந்த நேரத்துல எனக்கு போன் செய்யக் கூடாது தெரியும்ல” என்று கேட்டு வறுத்தெடுத்ததுடன், கடைசி வரை காவலர் சொல்ல வந்த விஷயத்தையே கேட்கவில்லையாம். முக்கியமான தகவல் என்பதால், வேறு வழியில்லாமல் உதவி கமிஷனருக்கு தகவலை பாஸ் செய்திருக்கிறார் காவலர். மறுநாள் காலையில் இந்த விஷயம் இன்ஸ்பெக்டருக்குத் தெரியவர, ‘‘என்னை மீறி எப்படி நீ ஏ.சி-கிட்ட பேசலாம். நான் நினைச்சா உன்னோட சர்வீஸ் ரெக்கார்டுல கைவைக்க முடியும்’’ என்று மிரட்டியிருக்கிறார். இதனால், அந்த இன்ஸ்பெக்டரின் கீழ் வேலைபார்ப்பவர்கள், விதியை நொந்தபடி பணிபுரிகிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்.பி அறையில் மராமத்துப் பணிகள்! - வசூலில் இறங்கிய எஸ்.எஸ்.ஐ...

விழுப்புரத்தில் ஸ்பெஷல் பிராஞ்ச் சிறப்பு உதவி ஆய்வாளராக புராண நாயகன் பெயர்கொண்டவர் பணியாற்றிவந்தார். விழுப்புரத்தில் பொறுப்பேற்கும் எஸ்.பி-க்களுடன் நெருங்கிப் பழகும் அவர், அந்தப் பழக்கத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டுவந்திருக்கிறார். தற்போது புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி நாதாவிடம் விசுவாசமாக இருப்பதைப்போல அவர் காட்டிக்கொள்ள முயல... எஸ்.பி-யோ கண்டுகொள்ளவே இல்லையாம். சமீபத்தில் எஸ்.பி அலுவலகத்தில் சில மராமத்துப் பணிகள் நடந்திருக்கின்றன. அதைக் காரணம் காட்டியே விழுப்புரம் நகரிலுள்ள சில வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டை நடத்திவிட்டாராம் எஸ்.எஸ்.ஐ. இந்தத் தகவல் எஸ்.பி-யின் காதுக்குப் போக... கடுமையாக டோஸ்விட்டவர், அந்த எஸ்.எஸ்.ஐ-யை ஸ்டேஷன் டூட்டிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்.

மீம்ஸைவிட பொறுப்பு முக்கியம்!

கொங்கு மண்டல முக்கிய நகரத்தின் உயரதிகாரி ஒருவர் மீடியா மற்றும் தன்னார்வலர்களின் வாட்ஸ்அப் குரூப்களில் படு ஆக்டிவாக மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக மீம்ஸ் போடுவது, உதவி மையங்கள் ஆரம்பிப்பதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அவர் ஆரம்பிக்கும் உதவி மையங்களின் பெயர்களெல்லாம் ஆளுங்கட்சி சென்டிமென்ட்டைத் தழுவியே வைக்கப்படுகின்றன. மேலிடத்திடம் நல்ல பெயரை வாங்கத்தான் இப்படிச் செய்கிறார் என்கிறார்கள் சக காக்கிகள். சமீபத்தில் உணர்ச்சிவசப்பட்டு, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டிருக்கிறார் அந்த உயரதிகாரி. மீம்ஸைவிட பொறுப்பு முக்கியம் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் இவரது லிமிட்டில் இருக்கும் காக்கிகள்!