Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

இன்ஃபார்மர்’ பரத்

இன்ஃபார்மர் ஏட்டய்யா...

வழக்கமாக போலீஸார்தான் இன்ஃபார்மர்களை வைத்திருப்பார்கள். ஆனால், வடசென்னையிலுள்ள பிரபல ரௌடிகள், தனிப்பிரிவு ஏட்டு ஒருவரை இன்ஃபார்மராகப் பயன்படுத்திவருகிறார்கள். காவல்துறையில் ரௌடிகள் குறித்து சீக்ரெட் மீட்டிங் ஏதாவது நடந்தால், அடுத்த நிமிடமே போன் செய்து தகவலைச் சொல்லிவிடுகிறாராம் அந்த ஏட்டு. அதற்காக ரௌடிகள் அந்த ஏட்டய்யாவைச் சிறப்பாக கவனிக்கிறார்கள். அத்துடன் நம்பர் டூ பிசினஸ் செய்யும் தொழிலதிபர்களையும் மிரட்டி, பணம் பறிப்பதில் அவர் கில்லாடியாம். இப்படிப் பல வகைகளில் பணம் கொட்டுவதால் வீடுகள், நிலங்கள் என்று 10 சி வரை சொத்து சேர்த்திருக்கிறாராம். சமீபத்தில் ஈ.சி.ஆரில் மூன்று கோடி ரூபாய்க்கு ஃபிளாட், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான புல்லட் வாங்கிய விவரங்கள் டி.ஜி.பி-க்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதால், அவர் மீது விரைவில் விசாரணை தொடங்கப்படலாம் என்கிறார்கள் சக காக்கிகள்.

மாறுதலாகிச் சென்ற மன்மத ராசா!

நெல்லையில் பணியாற்றிய அந்த அதிகாரிமீது பெண் காவலர்கள் பாலியல்ரீதியாக புகார்கள் அனுப்பியபோதும், மேலிடத்து நெருக்கம் காரணமாக நுண்ணறிவுடன் செயல்பட்டு நடவடிக்கைகளிலிருந்து தப்பினார். ஏற்கெனவே ஒருமுறை பக்கத்து மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டபோதிலும், அங்கு பொறுப்பேற்காமலேயே ஆர்டரை ரத்துசெய்யும் அளவுக்குச் செல்வாக்கோடு வலம்வந்தார். இதையடுத்து, தொடர்ந்து புகார்கள் வந்ததால், மேற்கு மாவட்டம் ஒன்றுக்கு அவரைத் தூக்கியடித்தார்கள். ஆனால், அங்கும் டூட்டியில் சேராமல் மாதக்கணக்கில் இழுத்தடித்தார். இந்த நிலையில்தான், அவர்மீதான புகார்கள் சென்னை வரை எட்டவே... ஆபத்து நெருங்கிவிட்டதைப் புரிந்துகொண்டு மேற்கு மாவட்டத்தில் அமைதியாக டூட்டியில் சேர்ந்துவிட்டார். அவர் சென்ற பிறகே பெண் காவலர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்களாம்.

கந்துவட்டிக்குத் துணைபோகும் காக்கிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில், ‘கடலை மிட்டாய்’ ஊரின் மேற்கேயுள்ள காவல் நிலையப் பகுதியில் கந்துவட்டித் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அடுத்த சில மணி நேரங்களில் புகார் நகல் கந்துவட்டி கும்பலுக்கே சென்றுவிடுகிறதாம். அத்துடன், “காசைக் கொடுத்தவன் கேட்கத்தான் செய்வான்... இத்தனை ரூவா வட்டின்னு தெரிஞ்சுதானே வாங்குன...” என்று அதட்டும் காக்கிகள், தவணை முறையில் பணத்தைக் கட்டச் சொல்லி டீலை முடித்துவிடுகிறார்களாம். இது குறித்து எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினாலும், அது மீண்டும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கே வந்து அதே டீலிங் தொடர்கிறதாம். “யாரிடம்தான் புகார் சொல்வது?” என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்!

‘‘அந்த எம்.எல்.ஏ-வே நம்ம பக்கம்!” - உதார்விடும் உதவி கமிஷனர்...

சென்னையில் பிரசித்திபெற்ற கோயில் அமைந்திருக்கும் பகுதியில் பணியாற்றும் ‘புத்தர்’ உதவி கமிஷனர், தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையங்களில் எந்தப் புகார் வந்தாலும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டிருக்கிறாராம். “டூட்டியில் அவ்வளவு சின்சியரா?” என்று விசாரித்தால், ‘‘நீங்க வேற... எல்லாம் பசைக்காகத்தான்’’ என்று கண்சிமிட்டுகிறார்கள் அவருக்குக் கீழ் பணியாற்றும் காக்கிகள். சமீபத்தில் அவரின் மேலதிகாரி, குற்றவாளி ஒருவரைப் பிடிக்க இவருக்கு உத்தரவிட்டிருக்கிறார். வழக்கம்போல குற்றவாளிக்கு போன் செய்து டீல் பேசி தப்பிக்கவைத்தவர், ‘‘ஐயா... ஆள் எஸ்கேப் ஆகிட்டான்’’ என்று பவ்யமாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் மேலதிகாரிக்குச் செல்ல கடுப்பானவர், ‘‘மிஸ்டர்... நீ சஸ்பெண்ட் ஆகப்போற...’’ என்று ஓப்பன் மைக்கில் எச்சரித்தும் உதவி கமிஷனர் அலட்டிக்கொள்ளவில்லையாம். கேட்டால், “அடப் போய்யா... அந்த எம்.எல்.ஏ-வே நம்ம பக்கம்!” என்று உதார்விடுகிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“ஆடிய ஆட்டமென்ன!” - கொண்டாட்டத்தில் உயரதிகாரிகள்!

கோவை மாவட்டத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவில் பணியாற்றிவந்த கலையான அதிகாரி மீது குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. அங்கிருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டபோதிலும், மீண்டும் கோவைக்கே வந்து சேர்ந்தார் அந்த அதிகாரி. ‘மன்னார்குடி நெட்வொர்க் மூலம் அவர் பவர்ஃபுல்லாக வலம் வருகிறார். அதனால்தான் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை’ என்று காக்கிகள் வெளிப்படையாகப் புலம்பிவந்த நிலையில், ‘புகார்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக’ தற்போது அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, ‘‘பதவியில இருந்தவரைக்கும் என்னா ஆட்டம் ஆடினார்?’’ என்று அவரின் சக அதிகாரிகளே சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

‘‘பார்வையே படுமோசம்!” அழுது புலம்பும் பெண் காக்கிகள்...

டெல்டா மாவட்டத்து கோட்டை காவல் நிலையத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர், உடன் பணிபுரியும் பெண் காவலர்களுக்குத் தாங்க முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவருகிறாராம். “அவரோட பார்வையே படுமோசமா இருக்கும்... கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாம ரொம்ப நேரம் உத்துப் பார்ப்பாரு... ‘எனக்கு ஒத்துழைச்சாத்தான் இந்த ஸ்டேஷன்ல வேலை பார்க்க முடியும்’னு டார்ச்சர் பண்றாரு” என்று அழுது புலம்புகிறார்கள் கோட்டை காவல் நிலைய பெண் காவலர்கள்.