அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

தொடரும் போலீஸார் தற்கொலை முயற்சி... மேலதிகாரிகள் டார்ச்சர் காரணமா?

தந்தை இறந்த தகவல் வந்தபோதும் கடந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்புக்குத் தலைமையேற்று, அதை நடத்திக் கொடுத்து கடமை உணர்வுடன் பணியாற்றியவர், நெல்லை மாநகர போக்குவரத்துப் பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. சமீபத்தில் அவர், அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதற்கு மேலதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்று சர்ச்சை எழுந்த நிலையில், ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட இன்ஸ்பெக்டர், ‘எனக்கு யாரும் டார்ச்சர் கொடுக்கவில்லை’ என்று விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் நெல்லை காவல்துறையினரோ, “அதிகாரிகள் மறுபடியும் நெருக்கடி கொடுத்ததாலேயே, பெண் இன்ஸ்பெக்டர் விளக்கம் கொடுக்கவேண்டியதாயிற்று. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே கடந்த சில மாதங்களில் நான்கு போலீஸார் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், எப்போதுதான் உயரதிகாரிகளின் டார்ச்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்?” என்று குமுறுகிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

தூதுவிடும் சூரியன் அதிகாரி!

சென்னையில் தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட ஐந்து பேர்மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தில் ‘சூரியன்’ அதிகாரியைச் சுற்றி இறுக்கமாக வலை பின்னப்படுகிறதாம். சமீபத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் அந்த அதிகாரிக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால், இன்னும் ஆடிப்போயிருக்கிறாராம் அதிகாரி. இதையடுத்து, துறை மேலிடத்திலும் வெளியிலும் தனக்கு எதிரானவர்களைச் சரிக்கட்ட தூதுவிட்டுவருகிறார் அதிகாரி.

டபுள் மாமூல் மன்னர்... தள்ளாடும் ‘ஹாலிவுட் நடிகர்!’

சென்னை விமான நிலையத்தில் அனுமதியில்லாத இடத்தில் கார் பார்க்கிங், குருவிகளிடம் மாமூல் என்று விமான நிலைய காவல் சரக காக்கிகள் காட்டில் அடைமழை பொழிகிறது. மேலிடத்தில் ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து இந்தச் சரகத்துக்கு வந்திருக்கும் ‘மன்னர்’ பெயரைக்கொண்டவர், போட்ட முதலீட்டை எடுப்பதற்காகச் சட்டவிரோத மது விற்பனை தொடங்கி வெளிநாட்டுப் பணம் மாற்றும் நிறுவனங்கள் வரை மாமூலை டபுள் மடங்காக அதிகரித்துவிட்டாராம். இவர் இப்படியென்றால், இதே சரகத்தில் பணிபுரியும் ஹாலிவுட் நடிகரின் பெயரைக்கொண்ட உயரதிகாரி ஒருவர் பணி நேரத்திலேயே தள்ளாடுவதுடன், தனது கட்டுப்பாட்டிலுள்ள ஸ்டேஷனின் பெண் காக்கி ஒருவரையும் ‘கட்டுப்பாட்டில்’ எடுத்துவிட்டாராம். இந்த விவகாரமெல்லாம் கமிஷனர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட்டாகச் சென்றும் ஃபைல் அப்படியே தூங்குவது ஏன் என்று தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் விமான நிலைய சரக சக காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஆயுதப்படைக்கு மாற்றுவதுதான் சட்ட நடவடிக்கையா?

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில், சமீபத்தில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ உமாபதி, பைக்கை நிறுத்தாமல் சென்ற மணிகண்டன் என்பவரை விரட்டிப் பிடித்து, கன்னத்தில் அறைந்தார். இளைஞரும் பதிலுக்கு எஸ்.எஸ்.ஐ-யை அறைய... இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டைபோட்டார்கள். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இளைஞரைக் கைதுசெய்தது போலீஸ். இதையடுத்து, “முதலில் தாக்கிய எஸ்.எஸ்.ஐ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்று பலரும் கேள்வி எழுப்பவே... தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் உமாபதி. ஆனாலும், “எஸ்.எஸ்.ஐ மீது வழக்கு பதிவு செய்யாமல் ஆயுதப்படைக்கு மாற்றியிருப்பது எப்படி சட்டபூர்வமான நடவடிக்கையாகும்?” என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘அண்ணே, இட்லியா... முட்டை தோசையா?’’ - சாராய வியாபாரியிடம் பம்மிய காவலர்கள்!

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காவல் சரகத்தில் உஷாராணி என்பவரை சாராய வியாபாரி சண்முகம் என்பவர் இடத் தகராறில் மண்டையை உடைத்ததுடன், அவரின் மகளின் கையையும் கடித்துவிட்டார். இதைத் தடுக்க வந்த ஈஸ்வரராஜ் என்பவரையும் தாக்கியிருக்கிறார். உஷாராணியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பாதிக்கப்பட்ட இருவரும் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, இவர்களுக்கு முன்பாகவே சாராய வியாபாரி கால்மேல் கால் போட்டுக்கொண்டு சேரில் அமர்ந்திருக்கிறார். புகார் கொடுக்க வந்தவர்களைத் தரையில் அமரச் சொன்ன காவலர்கள், “கேஸ் இல்லாம பேசி முடிச்சுக்கலாம்” என்று பஞ்சாயத்துப் பேசியதுடன், சண்முகத்திடம் பவ்யமாக, “அண்ணே, பசி தாங்க மாட்டீங்க, இட்லி வாங்கிட்டு வரவா... முட்டை தோசை வேணுமா?” என்று கேட்டிருக்கிறார்கள்! இவர்களிடம் போய் எப்படி நீதி கிடைக்கும் என்று புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.