பிரீமியம் ஸ்டோரி

ஆடு திருடர்களிடம் வசூல்... ஆடிப்போன பொதுமக்கள்!

ஆடு திருடர்களை விரட்டிச் சென்றதால் சிறப்பு எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட அதே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் இப்படியொரு வசூல் வேட்டை நடந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ‘காடு’ காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஆடு திருட முயன்ற இருவரை பொதுமக்களே பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இருவரிடமும் முத்தான அதிகாரி விசாரணை நடத்தியதில், “இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளைத் திருடியிருக்கோம்” என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம், ‘‘அதுல பாதியைக் கொடுத்துடுங்க” என்று ஒரு லட்சம் ரூபாயை வசூலித்தவர் பொதுமக்களிடம், ‘‘இவங்க ஆடு திருடங்க கிடையாது... கூலி வேலை செய்யறவங்க’’ என்று சொல்லி ஆடு திருடர்களை விடுவித்துவிட்டாராம். அதிகாரியின் பேச்சைக் கேட்டு ஆடு வளர்ப்பவர்கள் திகைத்துப்போயிருக்கிறார்கள்.

டீ குடிக்க 1,500 ரூபாய்!

தஞ்சாவூர் அருகே ‘பூதம்’ பெயர்கொண்ட காவல் நிலையத்தில், செல்லமான ரைட்டர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக அதே ஸ்டேஷனில் ‘பசை’யாக ஒட்டிக்கொண்டிருக்கிறார். ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வருபவர்களிடம் எடுத்த எடுப்பில், “டீ குடிக்கணும். 1,500 ரூபாய் கொடுங்க...’’ என்று கட் அண்ட் ரைட்டாகக் கேட்டு அதிர்ச்சியடைய வைக்கிறாராம். ‘‘என்ன சார்... டீ குடிக்க இவ்வளவு பணம் கேக்குறீங்க?’’ என்று அப்பாவியாகக் கேட்பவர்களிடம், ‘‘உங்க பிரச்னையைத் தீர்த்துவைக்க என் மூளைதானே செலவாகுது. அதுக்குத்தான்’’ என்று வடிவேலு பாணியில் கூலாகக் கூறுகிறாராம். மேலதிகாரிகளை மாதம்தோறும் சிறப்பாக இவர் கவனித்துவிடுவதால், அதே ஸ்டேஷனில் பணியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் சக காவலர்கள்!

“கம்யூனிஸ்ட்காரன் பார்க்குற வேலையா இது!”

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே அமைந்திருக்கும் துணைக்காவல் நிலையம் அது. இரண்டு எஸ்.எஸ்.ஐ-க்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே பணிபுரியும் இந்தக் காவல் நிலைய எல்லைக்குள், கம்யூனிஸ்ட் பிரமுகர் ஒருவரே அத்தனை பஞ்சாயத்துகளையும் டீல் செய்கிறார். பொதுமக்கள் புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் சென்றாலும் கம்யூனிஸ்ட் பிரமுகரைச் சென்று பார்க்குமாறு அனுப்பிவிடுகிறார்கள். “எதுக்கு கோர்ட்டு, கேஸுன்னு அலையுறீங்க... நல்லபடியா நாலு நாள்ல முடிச்சுவிடறேன்” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் பிரமுகர் இரு தரப்பிடமும் லம்ப்பாகக் கறந்துவிடுகிறார். இதில் போலீஸுக்கும் பங்கு செல்வதால், நமக்கு வேலை மிச்சம் என்றபடி ரெஸ்ட் எடுக்கிறார்கள் துணைக்காவல் நிலைய காவலர்கள்! “கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பார்க்குற வேலையா இது!” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் ஊர் மக்கள்.

காதலி வீட்டுக்குக் காய்கறி... கதறும் காக்கிகள்!

நீலகிரியில் மின் உற்பத்தி நடக்கும் பகுதியின் காவல் நிலையத்தின் ‘அரச’ எஸ்.ஐ ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் படு பிஸி. இந்த நிலையில்தான், சமீபகாலமாக அவர் வருவாய்த்துறைப் பெண் அலுவலர் ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டுக்கு பால் பாக்கெட் முதல் மளிகை, காய்கறிகள் வரை அனைத்தையும் வாங்கிக்கொடுக்கும்படி டூட்டியில் இருக்கும் காவலர்களை எஸ்.ஐ டார்ச்சர் செய்கிறார். இதையடுத்து, ‘‘அவரோட வீட்டுக்குக் காய்கறி வாங்கிக் கொடுக்க சொன்னாக்கூட பரவாயில்லை. காதலி வீட்டுக்கு வாங்கிக்கொடுக்கச் சொல்றதைத்தான் தாங்க முடியலை’’ என்று உயரதிகாரிகள் வரை பஞ்சாயத்து சென்றிருக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

போதையில் மிரட்டிய எஸ்.எஸ்.ஐ! பாயுமா நடவடிக்கை?

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டத்தூர் கிராமத்தில் பெருமாள் பெயரைக்கொண்ட மணல் கடத்தல் புள்ளி, பெண்மணி ஒருவரது இடத்திலிருக்கும் மரங்களையெல்லாம் வெட்டி அழித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்மணி வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே... அங்குள்ள எஸ்.எஸ்.ஐ ஒருவர் புகாரை வாங்காமல் அந்தப் பெண்மணியை விரட்டியதுடன், அவரது வீட்டுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மது போதையுடன் சென்று மிரட்டியிருக்கிறார். இது பற்றி உயரதிகாரிகளிடம் புகார் சென்றும் இதுவரை எஸ்.எஸ்.ஐ மீது எந்த நடவடிக்கையும் இல்லையாம்!

மீண்டும் மதுரைக்கு வந்த சர்ச்சை அதிகாரி!

மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து, பல்வேறு புகார்களால் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட ‘சிவன்’ பெயரைக்கொண்ட அதிகாரி, தற்போது மீண்டும் மதுரை புறநகர் பகுதிக்கே பணிக்கு வந்திருப்பதைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் இவர் ஏற்கெனவே மதுரை மாநகரில் பணியாற்றியபோது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கன்மேனை நியமித்து ஆதாயம் பார்க்கிறார் என்றும், அன்றைய அமைச்சரிடம் காரியம் சாதித்துக்கொள்கிறார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், அப்போதைய மாநகர உயரதிகாரியின் ‘ஆசீர்வாதத்தால்’ தப்பித்துவந்தார். இந்த நிலையில் மதுரை போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா வந்த பிறகு இவரை மாற்றிவிட்டார். சில மாதங்கள் திண்டுக்கல்லில் பணிபுரிந்துவந்த நிலையில், மதுரையில் கிடைத்த வருமானம் அங்கு கிடைக்காததால் மேலிடத்தில் பேசி மீண்டும் மதுரை புறநகருக்கே வந்துவிட்டார். ‘‘இனி என்னென்ன ஆட்டம் ஆடப்போகிறாரோ?’’ என்று புலம்புகிறார்கள் புறநகர் போலீஸார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு