Published:Updated:

ஜூனியர் வாக்கிடாக்கி

ஜூனியர் வாக்கிடாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கிடாக்கி

இன்ஃபார்மர் பரத்

வழிவிடாத ரௌடிக்கு வகையாய் கவனிப்பு!

சென்னை, தாம்பரம் பகுதியிலுள்ள பிரபலமான மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனங்களைச் சேதப்படுத்தியதாக ரௌடிக் கும்பலை போலீஸார் சமீபத்தில் கைதுசெய்தார்கள். மருத்துவமனையின் உரிமையாளர் சென்ற காருக்கு, ரௌடிக் கும்பல் வழிவிடாததால் ஏற்பட்ட தகராறுதான் இதற்கு முக்கியக் காரணம். ஈகோ பிரச்னை முற்ற, கணிசமான தொகையைக் காவல்துறை அதிகாரிக்கு மருத்துவமனை நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அதற்கு விசுவாசம் காட்டிய சிவனின் பெயரைக்கொண்ட அதிகாரி, பிரபல ரௌடியைச் சிறப்பாக கவனிக்க ஸ்பெஷல் டீமை அழைத்திருக்கிறார். பின்னர் கையில் கட்டுடன் நீதிமன்றத்துக்குச் சென்ற பிரபல ரௌடி, வழக்கம்போல பைக்கிலிருந்து கீழே விழுந்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்!

பீர் பாட்டிலுடன் வலம்வந்த காவலர்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் ராஜகுரு என்ற காவலர், பாதுகாப்புப் பணிக்காக அருகிலுள்ள திருமலாபுரம் கிராமத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். செல்லும் வழியில் சேர்ந்தமரம் என்ற இடத்திலிருந்த டாஸ்மாக் கடை அவர் கண்ணில் பட்டிருக்கிறது. டூட்டியில் இருக்கிறோமே என்ற ‘குற்றவுணர்வு’ எழுந்தபோதிலும், ‘சரி... ஒரு பீர் மட்டும் குடிக்கலாம்’ என உள்ளே நுழைந்திருக்கிறார். குடிக்கத் தொடங்கியதும் கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தடுத்து பீர் பாட்டில்களை வாங்கிக் குடித்திருக்கிறார். போதை உச்சத்துக்கு ஏறத் தடுமாறியவர், மெதுவாக எழுந்து வெளியே வந்திருக்கிறார். அப்போதும்கூட, ‘எதற்கும் இருக்கட்டுமே’ என மீண்டும் ஒரு பீர் பாட்டிலை வாங்கி கையில் வைத்திருக்கிறார். நிலைகொள்ளாமல் தடுமாறிய அவர், சாலையில் செல்வோரிடம் வம்பிழுத்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அதனால் கடுப்பான பொதுமக்கள், காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்ல... அவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றிருக்கிறது போலீஸ். காவலர் ராஜகுரு போதையில் அலம்பல் செய்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவுசெய்து வெளியிட, அது வைரலாகிவிட்டது. போதை தெளிந்து அந்த வீடியோவைப் பார்த்த காவலர் ராஜகுரு, ‘நானா இப்படியெல்லாம் செஞ்சேன்’ என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார். ‘நீங்க செய்யலை... உங்களுக்குள் இருந்த சரக்கு செஞ்சுது...’ என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறார்கள் கைதுசெய்த காவலர்கள்.

ஜூனியர் வாக்கிடாக்கி

‘‘வீடியோ எடுத்து அனுப்பினாத்தான் நம்புவேன்!’’

நாட்டையே உலுக்கிய குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து, அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே காவல்துறை அதிகாரி ஒருவருக்குத் தகவல் கிடைத்தும், அவர் அசட்டையாக இருந்தார் என்கிறது காக்கி வட்டாரம். விபத்து நடந்ததை நேரில் பார்த்த உள்ளூர் நபர் ஒருவர் மூலம் அந்தக் காவல்துறை அதிகாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை நம்பாத அந்த அதிகாரி, ‘‘கீழே விழுந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்து அனுப்பு. அப்போதான் நம்புவேன்’’ என்று சொல்லியிருக்கிறார். அந்த உள்ளூர் நபர், ‘‘என்னிடம் பட்டன் போன்தான் இருக்கு’’ என்று சொல்லியும், ‘‘வீடியோவை அனுப்பினாத்தான் போலீஸை அனுப்புவேன்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அதற்குப் பிறகு மேலிட உத்தரவு வந்தவுடன்தான் பதறியடித்து ஸ்பாட்டுக்குக் கிளம்பினாராம். தகவல் கிடைத்தவுடன் துரிதமாகப் பணிகளை மேற்கொள்ளாமல் அசட்டையாக இருந்த அந்த அதிகாரியை சக காக்கிகளே கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்!

‘‘மேல்மட்ட அதிகாரியே லம்ப்பா அடிச்சுடுறாரே!’’

கனிம வளங்களை எடுத்துச்செல்லும் ஓவர் லோடு கனரக வாகனங்களிடம், கோவை மாவட்டக் காவல்துறையினர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துவந்தார்களாம். ஆனால், தற்போது மேல்மட்ட அதிகாரி ஒருவரே முழு வசூலில் இறங்கிவிட்டாராம். நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே பேசி, காரியத்தை மொத்தமாக முடித்துவிடுகிறாராம். இதனால், ‘இதுவரைக்கும் சில்லறையா கொடுத்து காரியத்தைச் சாதிச்சுக்கிட்டு இருந்தோம். இவரு வந்து லம்ப் லம்ப்பா கேக்குறாரே’ என்று கனிமவளக் கடத்தல் புள்ளிகள் ஒரு பக்கம் கடுப்பாக, தங்கள் வசூல் பாதிக்கப்பட்டதில் கீழ்மட்டக் காவலர்களும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்!

சொந்த ஊர் காக்கிகள் கட்டுப்பாட்டில் காவல் நிலையம்!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், ‘சொந்த ஊர் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியவில்லை’ என்று காக்கி வட்டாரத்தில் குமுறல் எழுந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் இவர்கள், ஒயின் ஷாப், சாராயக்கடை, கள்ளுக்கடை என மாமூல் வரத்து அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களாம். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்குத் தேவையான அனைத்தையும் செய்து, வார மாமூல் கவரையும் கொடுத்துவிடுவதால் இவர்கள் கட்டுப்பாட்டிலேயே மொத்தக் காவல் நிலையமும் இயங்குகிறதாம். ‘‘குறைந்தபட்சம் இவர்களை இடமாற்றம் செய்யக்கூட உயரதிகாரிகள் முயலவில்லை’’ என்று குமுறுகிறார்கள்.