Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி!

ஜூனியர் வாக்கி டாக்கி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி!

இன்ஃபார்மர் பரத்

அன்பான அதிகாரியின் அசராத ஆட்டம்!

விழுப்புரம் மாவட்ட எல்லையில் இருக்கும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அன்பான அதிகாரி, யாராவது வணக்கம் வைத்தால்கூட வசூல் செய்துவிடுகிறார் என்கிறார்கள். சமீபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், இரவு நேரத்தில் தன் ரகசிய சிநேகிதியை காரில் அழைத்துக்கொண்டு ஈ.சி.ஆர் சாலையில் சென்றிருக்கிறார். அப்போது காரை வழிமறித்து கத்திமுனையில் தொழிலதிபரின் கழுத்திலிருந்த செயினைப் பறித்த மூன்று பேர், அந்தக் காரிலேயே சென்று அவரது ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டிருக்கிறது. ‘கார் போனாலும் பரவாயில்லை’ என்று தன் ரகசிய சிநேகிதியை விட்டுவிடும்படி அவர் கெஞ்ச... கள்ளச் சிரிப்பு சிரித்தது அந்தக் கும்பல். அப்போதுதான் இந்த பிளானே தன் ரகசிய சிநேகிதியுடையது என்று தெரிந்து அதிர்ந்திருக்கிறார். இதுகுறித்து எல்லைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர், ரகசிய சிநேகிதியுடனான தொடர்பு வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். லம்ப்பான தொகையை வாங்கிக் கொண்ட அன்பான அதிகாரி, அந்தப் பெண்ணை வழிப்பறி கும்பல் என்று கணக்கு காட்டிவிட்டாராம்!

‘‘இது என்னோட சொந்த வீடு மாதிரி!’’ - அடம்பிடிக்கும் அதிகாரி...

கும்பகோணம் நகரப் பகுதியில் இருக்கும் மூன்று காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்தவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று வேறு மாவட்டத்தின், வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார். ஊர்கள் சில மாறிய பிறகும், அவர் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்தபோது குடியிருந்த காவலர் குடியிருப்பு வீட்டை மட்டும் காலிசெய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். ‘வீட்டைக் காலி செய்யுங்கள்’ என்று மாவட்ட காவல்துறை சார்பில் கூறியும், ‘11 வருஷமா அந்த வீட்டுல இருந்துட்டேன். அது என்னோட சொந்த வீடு மாதிரி. என்னால காலி செய்ய முடியாது. யாருகிட்ட வேணும்னாலும் போய்ச் சொல்லுங்க’ என்கிறாராம் அதிகார தோரணையில். ‘‘ஸ்ட்ரெஸ் அதிகமாகுற நேரத்துல அப்பப்ப அந்த வீட்டுக்கு வந்து ‘ரிலாக்ஸ்’ பண்ணிட்டு போறார். அதனாலதான் அவருக்கு அந்த வீட்டைக் காலி செய்ய மனசு இல்ல’’ என்கிறார்கள் அவருடன் பணிபுரிந்த முன்னாள் சகாக்கள்!

அப்பார்ட்மென்ட்டில் இளைப்பாறும் பிளேபாய்!

கொங்கு மண்டலத்தின் முக்கிய ஊரில் இருக்கும் அந்த உயரதிகாரி, அரசியலில் உள்ளூர் உடன்பிறப்புகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தும், மாற்றப்படாமல் இருக்கும் அந்த அதிகாரி, பவரில் இருக்கும் தி.மு.க-வினருடன் இணக்கமாகச் செல்வது, கவனிக்கும் விதத்தில் கவனித்து உயரதிகாரிகளைக் குளிர வைப்பது, ஒவ்வொரு பகுதியிலும் தனக்கு ஆதரவான காக்கிளை உருவாக்கி லாபி செய்வது என அனைத்தையும் கனக் கச்சிதமாகச் செய்கிறார். இன்னொரு பக்கம் இரவானால் அய்யாவின் கார் நகரத்தின் முக்கியமான அப்பார்ட்மென்ட்களுக்குச் சென்று அடிக்கடி இளைப்பாறுகிறதாம். அதனாலேயே அவரை காக்கிகள் வட்டாரத்தில் பிளேபாய் என்றழைக்கத் தொடங்கிவிட்டார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி!

“ஒரு ஏட்டுக்கே இம்புட்டா!”

கரூர் - திருச்சி ரூட்டில் இருக்கும் ஒரு நகரின் க்ரைம் பிரிவின் ஏட்டு அவர். அவரது ஆடம்பர வாழ்க்கையைப் பார்ப்பவர்கள், “ஒரு ஏட்டுக்கே இம்புட்டா!” என்று வாயைப் பிளக்கிறார்கள். இவரின் இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு பிரமாண்டமான வீடுகளைக் கட்டிக்கொடுத்திருப்பவர், 35 ஏக்கர் நிலத்தை வாங்கி 25 ஏக்கரில் மாட்டுப்பண்ணை, குதிரைப்பண்ணை, மீதமுள்ள 10 ஏக்கரில் விவசாயம்... என ராஜ வாழ்க்கை வாழ்கிறார். இவரது கட்டுப்பாட்டில் மட்டுமே ஏழு காவல் நிலையங்கள் வருவதால் குற்றவாளிகளுடன் கைகோத்துக்கொண்டு வசூல் வேட்டையிலும் பட்டையைக் கிளப்புகிறார். “இவரது ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?” என்று புலம்புகிறார்கள் நேர்மையான காக்கிகள்!

மதுரை காக்கியில் கறுப்பு ஆடுகள்!

கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதால், புதுக்கோட்டையில் காவல்துறை அதிகாரிகள் மூவர் மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ‘மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம் ஆகிய சப் டிவிஷன்கள், நகரப்பகுதியில் அவனியாபுரம், தெப்பக்குளம், தல்லாக்குளம், அண்ணா நகர், திடீர் நகர், கரிமேடு காவல் நிலையங்கள் ஆகியவற்றில் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பெயர்களைப் பட்டியலிட்டு காவல்துறை தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம் ஸ்பெஷல் டீம். ‘‘மதுரையிலுள்ள காவல்துறையினர் சிலருக்கு ஆந்திராவில் கஞ்சா விளைவிக்கும் நபர்களுடன் தொடர்பு உள்ளது. அதனால்தான் மதுரையை மையமாக வைத்து கஞ்சா பிசினஸ் சக்கை போடுபோடுகிறது” என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்தில்!

கன்னியாகுமரி மசாஜ் சென்டர்கள்... மாமூல் வசூலிக்கும் ‘தொப்பி’!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் முன்பு, ஒன்றிரண்டு மசாஜ் சென்டர்கள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்குள் இங்கு 20-க்கும் அதிகமான மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் வந்துவிட்டன. மசாஜ் சென்டர்களிலிருந்து மாமூல் வசூலித்து, உள்ளூர் காவல் அதிகாரிகள் இருவருக்கு பங்கு பிரித்துக் கொடுக்க புரோக்கர் ஒருவரும் முளைத்துவிட்டார். காக்கி அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அவரை ‘தொப்பி’ என்றே மசாஜ் சென்டர்கள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள். அந்த புரோக்கருக்கு தெரியாமல் புதிய மசாஜ் சென்டர்கள் ஆரம்பித்தால், போலீஸார் உடனே ரெய்டு போய்விடுகிறார்கள். ‘தொப்பி’யைக் கவனித்தால், கன்னியாகுமரியில் பாதகம் இல்லாமல் மசாஜ் சென்டர் நடத்தலாம் என்கிறார்கள்!