Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘கலெக்டரேட் டூட்டி வேண்டாம்!’’ - கலங்கும் நெல்லை காக்கிகள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2017-ம் ஆண்டு கந்துவட்டி கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பதியர் தங்கள் குழந்தைகள் இருவருடன் தீக்குளித்து உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்தது. அதன் பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லும் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வருபவர்களில் சிலர், மண்ணெண்ணெய் பாட்டில்களை மறைத்து எடுத்துவந்து போலீஸை அலறவிடுகிறார்கள். கடந்த வாரம், 85 வயது விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்து தீக்குளிக்க முயன்றார். ‘‘சோதனையைத் தாண்டி அவர் மண்ணெண்ணெய் எடுத்துச் சென்றது எப்படி?’’ என்று கேட்டு டூட்டி பார்த்த போலீஸாரை, உயரதிகாரிகள் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். கண்கொத்திப் பாம்பாகக் காவல் இருந்தாலும் இப்படி நடந்துவிடுவதால், ‘மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேர்கிறதே...’ என்று புலம்பும் போலீஸார், கலெக்டரேட் டூட்டி என்றாலே, தலைதெறிக்க ஓடுகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி... மூவர் கூட்டணியின் அட்ராசிட்டி!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே ‘திருமண’ பெயர்கொண்ட இன்ஸ்பெக்டர், ‘சிவன்’ பெயர்கொண்ட உதவி கமிஷனர் ஆகியோர் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டதாகவும், இன்னொரு பெண் அதிகாரி இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அந்தப் பணத்தை வாங்காதவர்களின் பெயரில் போலியாகக் கையெழுத்திட்டு இந்த மூவர் கூட்டணி மோசடி செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் இந்த விவகாரம் கமிஷனர் அலுவலகத்தில் பெரிதாக வெடிக்கலாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘கூகுள் பே-வில் பணம் அனுப்புங்க!’’ - கோவை அட்ராசிட்டி

கேரளாவில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாகச் சந்தேகமிருப்பதால், சமீபகாலமாக கோவை மாங்கரை சோதனைச்சாவடியில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதையே சாதகமாக்கிக்கொண்டு, சோதனைச்சாவடியில் பெரிய அளவில் கல்லாகட்டிவருகிறார்கள் சில காவலர்கள். சமீபத்தில் ஒரு தையல்காரர் எடுத்துச் சென்ற ரூ.1,500 மதிப்புள்ள இரண்டு பாய்களை ‘பில் இல்லை’ என்று வினோத காரணம் சொல்லி பாய்களையே லஞ்சமாகச் சுருட்டியிருக்கிறார்கள். தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது, ‘மாஸ்க் அணியவில்லை’ என்று சொல்லி ஒருவரிடம் இரண்டு கிலோ தக்காளியை அமுக்கியிருக்கிறார்கள். கையில் பொருள்களோ பணமோ இல்லையென்றாலும்கூட ‘‘கூகுள் பே-வில் அனுப்புங்க’’ என்று வசூலித்துவிடுகிறார்களாம். இவர்களின் அட்டூழியத்துக்கு முடிவே கிடையாதா என்று பொங்குகிறார்கள் உள்ளூர் மக்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

துரைமுருகன் வீட்டு வாட்ச்மேனா போலீஸ் அதிகாரி?

‘‘அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி வீட்டு வாட்ச்மேனாகவே மாறிவிட்டார்’’ என்று அப்பகுதியில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கிண்டலடிக்கிறார்கள் சக காக்கிகள். ‘‘அமைச்சரின் வீட்டிலேயே இருக்கும் அந்த அதிகாரி, துரைமுருகன் நிற்கச் சொன்னால் படுத்தேவிடும் அளவுக்கு விசுவாசம் காட்டுகிறார். அவரை ‘தம்பி’ என்று துரைமுருகன் அழைப்பதால், காட்பாடியைத் தாண்டி வேலூர் எஸ்.பி அலுவலகம் வரை அந்த அதிகாரியின் அதிகாரம் தூள்பறக்கிறது. இதைவைத்தே வாரிக்குவிக்கிறார். அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர்மீது சமீபகாலமாக ஏகப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டு, கரைவேட்டி கட்டாத காக்கியாகவே மாறிவிட்டார்’’ என்றும் பொங்குகிறார்கள் சக காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

முன்னாள் உயரதிகாரி வீட்டுப் பஞ்சாயத்து... சமரசம் பேசும் காக்கிகள்!

ஓய்வுபெற்ற காவல்துறை பெண் உயரதிகாரி ஒருவரின் குடும்பப் பஞ்சாயத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறது. டாக்டருக்குப் படித்திருக்கும் அந்த உயரதிகாரியின் மகன், சினிமாதுறையில் இருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டிலிருக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறி உயரதிகாரியின் மருமகள் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார் ‘ஷாப்பிங் ஏரியா’ பகுதி போலீஸுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், விஷயத்தை அமுக்கிவிட்டார்களாம் போலீஸார். உயரதிகாரியின் மருமகள் குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளியேறி, ஹோட்டலில் தங்கியிருக்கிறார். மருமகளைச் சமரசம் செய்ய உயரதிகாரிக்கு வேண்டப்பட்ட காக்கிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம். ‘‘பெண்ணியத்துக்காகக் குரல் கொடுக்கும் அதிகாரி வீட்டிலேயே பஞ்சாயத்தா?’’ என்பதுதான் காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாக்!