Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

சர்ச்சை இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் ஸ்டேஷன் பணி!

மதுரையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார் மணியானவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு நெற்களஞ்சிய ஊரில் பணியாற்றியபோது, கல்லூரி மாணவி ஒருவரின் மர்ம மரணத்தில் சிக்கி, தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு பெற்றவன் என்று தன்னைக் காட்டிக்கொண்ட அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு, உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து விடுதலை ஆனார். பெண் மர்ம மரணம் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையாகி வந்ததால், மதுரை மாநகர் காவல்துறையில் அவருக்கு ஸ்டேஷன் டூட்டி கொடுக்காமல் கட்டுப்பாட்டு அறையிலும், பின்பு நில மோசடிப் பிரிவிலும் பணி வழங்கப்பட்டது. தற்போது அவருக்குக் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சர்ச்சைக்குரிய இவர், வழக்கம்போல் ஆளுங்கட்சியினரின் செல்வாக்கைப் பெற்று காவல் நிலைய நேரடிப் பணிக்கு வந்துவிட்டார் என்று காவல்துறையினரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஆதங்கப்படுகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘கடை கடையா நானா வசூல்ல இறங்க முடியும்?’

கடலைமிட்டாய் நகரின் உயர் காவல் அதிகாரியாக இருக்கும் உதயமான நபர், பக்கத்து மாவட்டத்திலிருந்து பதவி உயர்வில் வந்து எட்டு மாதங்கள்கூட நிறைவடையவில்லை. அதற்குள், ‘நிர்வாகத்திறன் குறைபாடு... முடிவெடுப்பதில் தாமதம்’ என்று சொல்லி இவரைப் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்ததுடன், அதற்காக மூன்று மாதங்களாகக் கடுமையாக முயன்றாராம் மாவட்ட உயரதிகாரி. அந்த மாவட்ட உயரதிகாரிக்குக் கொடுக்கவேண்டிய ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுப்பதில் சுணக்கம் காட்டியதுடன், ‘கடை கடையா நானா வசூல்ல இறங்க முடியும்?’ என்று உதயமானவர், கொந்தளித்ததுதான் அதற்குக் காரணமாம். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி, இடமாற்றப் பட்டியலில் உதயமானவரின் பெயரையும் மாவட்ட உயரதிகாரி சேர்க்க, உதயமானவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் டிரான்ஸ்ஃபர் குறித்து உதயமானவர் புலம்ப, ஒரே நாளில் மீண்டும் அதே பணியிடத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதனால், உதயமானவருக்குக் குடைச்சல் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அமைதியாகிவிட்டாராம் மாவட்ட உயரதிகாரி!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘புல்லட் போயி... பொலீரோ வந்தது... டும் டும் டும்!’’

கரூரின் தெற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் ஊரிலுள்ள காவல் நிலையத்தில், எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவருகிறார் வேலானவர். இவர் ஸ்டேஷனுக்குப் புகார் கொடுத்தவர், புகாருக்கு உள்ளானவர் என்று இரண்டு தரப்பிலும் செமயாகக் கறந்துவிடுகிறாராம். ‘வெளியே வர முடியாத செக்‌ஷன்ல உன்மேல கேஸைப் போட்டு உள்ளே தள்ளிருவேன்’ என்று புகாருக்கு உள்ளானவரை தாம்தூம் என்று மிரட்டுவாராம். இதனால், நடுங்கிப்போகும் அவர்களிடம், புரோக்கரைவைத்துப் பேரம் பேசி லம்ப்பாக வசூலித்துவிடுவாராம். இன்னொரு பக்கம், புகார் கொடுத்தவர் மீதும் ஒரு புகாரைக் கொடுக்கவைத்து, அதைவைத்து அவரையும் மிரட்டிப் பணத்தைக் கறந்துவிடுவாராம். பிறகு, இரு தரப்பையும் மிரட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து, ‘ஒழுங்கா ரெண்டு பேரும் சமாதானமா போங்க... இல்லைன்னா, ரெண்டு பேரையும் உள்ளே தள்ளிருவேன்’ என்று மிரட்டி அனுப்பிவிடுவாராம். ஸ்டேஷனுக்கு புல்லட்டில் வந்துகொண்டிருந்தவர், வளமான வருமானம் வர வர, தற்போது பொலீரோ கார் ஒன்றில் வந்து இறங்குகிறாராம். எஸ்.பி அலுவலகம் வரை புகார் சென்றும் இதுவரையில் நடவடிக்கை இல்லாததால், செய்வதறியாது தவித்துவருகிறார்கள் மக்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘சப்ளை’ காவலரும் சங்கத் தலைவரும்!

புதுச்சேரியின் ஒரு முக்கிய காவல் நிலையத்துக்குப் புகாரளிக்கச் சென்ற இளம்பெண்ணை, மசாஜ் செய்ய அழைத்தார் முருகக்கடவுள் பெயர்கொண்ட தலைமைக் காவலர். இவர், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என சப்ளை தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். மசாஜ் செய்ய அழைத்த புகாரில் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட, சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த வழக்கை எப்படியாவது ‘புஸ்வாணம்’ ஆக்கிவிட வேண்டுமென்று நினைத்த அந்த ‘சப்ளை’ காவலர், போலீஸுக்காகச் சங்கம் நடத்தும் ஒருவரை அணுகியிருக்கிறார். சிலபல லட்டுகளுக்காகவும், கேரளா இறக்குமதிக்காகவும் ஆசைப்பட்ட விநாயகர் பெயர்கொண்ட அந்த சங்கப்புள்ளி, புகாரை வாபஸ் வாங்கும்படி அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார். தற்போது சங்கப்புள்ளியை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘சப்ளை’ காவலரால் இறக்குமதி செய்யப்பட்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் புழங்கிய சில காக்கிகளும், கதர்ச் சட்டைகளும் அவரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

குமார அதிகாரியின் பலே வசூல் வேட்டை!

கோட்டை மாநகரத்தில் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் குமார அதிகாரி, பதவிக்கு வந்ததிலிருந்தே கமிஷன், கட்டப்பஞ்சாயத்துகளைத் தயங்காமல் செய்வதாக சக போலீஸாரே புகார் வாசிக்கிறார்கள். சமீபத்தில் இவர் செய்த பலே வசூல் பற்றித்தான் மாநகரக் காக்கிகள் மத்தியில் பேச்சு. நீண்டநாளாக ஒரே இடத்தில் பணிபுரியும் எஸ்.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ-க்கள், தங்கள் விருப்பத்தின்பேரில் டிரான்ஸ்ஃபர் கேட்டிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு கமிஷனர் கையெழுத்து போட்டுவைத்திருந்த பேப்பரை, ஒருசில அதிகாரிகள் மூலம் எடுத்துவைத்துக்கொண்ட குமார அதிகாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து, பேரம் பேசி சிலபல லட்டுகளைப் பெற்றிருக்கிறாராம். ஆணையருக்குத் தெரியாமல் பல வேலைகளைச் செய்வதற்கென்றே மூன்று போலீஸாரைக் கையில்வைத்திருக்கிறாராம் குமார அதிகாரி. ‘‘எந்தெந்த விஷயத்தில் பணம் பார்க்க முடியும் என்று தகவல் சொல்வதே அந்த மூவர் அணிதான்’’ என்று சொல்பவர்கள், ‘‘இது குறித்து டி.ஜி.பி அலுவலகத்துக்கும் புகார் பறந்திருக்கிறது’’ என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism