பிரீமியம் ஸ்டோரி

“பொண்டாட்டி புள்ளைங்க செளக்கியமா?”

சேலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன் மாணிக்கவேல் எஸ்.பி-யாகப் பணியிலிருந்தார். அப்போது உத்தரவுகளைப் பெரும்பாலும் வாக்கி டாக்கியிலேயே பிறப்பிப்பார். அதுமட்டுமல்ல... தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகளை வாக்கி டாக்கியிலேயே கடும் சொற்களால் வெளுத்துவாங்குவார். சம்பந்தப்பட்டவரின் மானம், மரியாதை மாவட்டத்தின் அத்தனை ஸ்டேஷன்களிலும் கப்பலேறும் என்பதால், மாணிக்கவேலின் குரலைக் கேட்டாலே குலைநடுங்குவார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

இப்போது, அதே சேலம் மாநகரத்தில் துணை கமிஷனராக இருக்கும் சந்திரசேகரனின் குரலை வாக்கி டாக்கியில் கேட்டாலே காவலர்கள் அலறுகிறார்கள். சில சமயங்களில் வாக்கி டாக்கியிலேயே பலரது வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவதால், கடுப்பிலிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்னொரு பக்கம், செல்போனில் பேச வேண்டிய, ‘என்னப்பா நல்லா இருக்கியா... பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் செளக்கியமா, ஊர்ப்பக்கம் மழகிழ பெஞ்சுதா?’ரீதியிலான உரையாடல்களையும் வாக்கி டாக்கியிலேயே நிகழ்த்துவதால், இவருக்கு நெருக்கமான போலீஸாரும் இவரது குரலைக் கேட்டாலே நெளிகிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

லகரங்களில் டார்கெட்! - ‘லகலக’வென சிரிக்கும் அதிகாரி

தலைநகரத்தில் காய்கறி தொடங்கி பேருந்துகள் வரை குவியும் இடம் அது. அந்தக் காவல் சரகத்தின் உயரதிகாரி ஒருவர் கஞ்சா, பாலியல் தொழில், டிராவல்ஸ் மாமூல், மார்க்கெட் மாமூல் என ஒரு நாளைக்கே சிலபல லகரங்களில் டார்கெட் நிர்ணயித்து, வசூல் மழையில் நனைகிறாராம். இது குறித்து உளவுத்துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மேலிடத்துக்கு ‘நோட்’ போட்டு அனுப்பினால், அவர்களையே இடமாற்றம் செய்துவிட்டு, `லகலக’வென சிரிக்கிறாராம் அந்த உயரதிகாரி. சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் வாடகைப் பஞ்சாயத்து ஒன்று இவரிடம் வரவே... ஓனருக்குச் சாதகமாகச் செயல்பட்டு, 15 லகரங்களை லவட்டிவிட்டாராம் அதிகாரி. இவருக்குப் பின்னால் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் ‘பெஞ்சு’ போட்டு அமர்ந்திருப்பதால், இவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களாம் உயரதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“அஞ்சு சி வந்தா முடிச்சிடலாம்!”

மலைக்கோட்டை நகரத்தின் சைபர் அதிகாரி, முழு நேரமும் செல்போனிலேயே சொந்த பிசினஸ் விவகாரங்களைப் பேசிக்கொண்டிருப்பாராம். “அஞ்சு ‘சி’ வந்தா முடிச்சிடலாம். பத்திரச் செலவை அவங்கதான் பார்த்துக்கணும்... லேண்ட் வேல்யூ இறங்கிடுச்சு சகலை” என்கிறரீதியிலான இவரது செல்போன் பேச்சுகளை மேலிடத்துக்குச் சிலர் புகாராகத் தட்டிவிட்டார்கள். கடுப்பான மேலிடம், இவரை இடமாற்றம் செய்தது. ஆனால், குறுகிய காலத்திலேயே மீண்டும் அதே பணியிடத்துக்கு வந்துவிட்டார் சைபர் அதிகாரி. பின்னணியை விசாரித்தால், அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் ‘பெரிய’ இடத்து நபர் ஒருவர் இவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

பதாகையை வீசிய முதியவர்; கோட்டைவிட்ட அதிகாரிகள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, துரைராஜ் என்ற முதியவர் பதாகையை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தார். இவர், இதற்கு முன்பே பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதால், அமித் ஷா வருகையையொட்டி துரைராஜ் குறித்த ரிப்போர்ட்டை உளவுத்துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், முன்கூட்டியே தெரிவித்திருந்தனர். அதனால், இணை கமிஷனர் ஒருவரின் மேற்பார்வையில் துணை கமிஷனர் தலைமையில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி முதியவரான துரைராஜ் பதாகையை வீசியிருக்கிறார். கடுப்பான மத்திய உளவுத்துறையினர் மேலிடத்துக்கு ‘நோட்’ போடவே... விரைவில் இரண்டு அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறார்கள். ஏற்கெனவே, ஜெயலலிதா மறைவையொட்டி பிரதமர் மோடி சென்னை வந்தபோது பாதுகாப்புக் குளறுபடி ஏற்பட்டதால், கூடுதல் கமிஷனர் சாரங்கன் இடமாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் வாக்கி டாக்கி

தலையணைக்கடியில் கரன்ஸி! தனி ரூட்டில் ‘தனி டீம்’

கடலூர் மாவட்ட விடுதிகளில் சூதாட்டம் நடக்கும் தகவலையறிந்த காக்கி மேலிடத்தின் ஸ்பெஷல் டீம், அதிரடியாகச் சோதனை நடத்தியிருக்கிறது. அந்தச் சோதனையில் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே சிக்கியதாம். ஸ்பெஷம் டீம் ஆட்கள் இந்தத் தகவலை மேலிடத்துக்குத் தெரிவிக்கவே... தொகை குறைவாக இருப்பதை ஊகித்து, “சரி, வந்துடுங்க... சபாஷ்” என்று வரவழைத்த மேலிடம், பிறகு ரகசியமாக இன்னொரு தனி டீமை ஏற்கெனவே ரெய்டு நடத்திய இடங்களுக்கு அனுப்பியிருக்கிறது. அவர்கள் அங்கே சென்று சோதித்தபோது, அதே விடுதிகளின் தலையணை, கட்டிலுக்குக் கீழே பண்டல் பண்டலாகச் சிலபல லட்சங்கள் சிக்கியிருக்கின்றன. இப்போது தனி ரூட்டில் சென்ற தனிப்படை டீமை நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கிறது மேலிடம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு