Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

குடிமகன்களை குஜால்படுத்தும் ‘பார் ஆட்டோ!’

கரூர் டு திருச்சி சாலையிலிருக்கும், முக்கிய ஊரிலுள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் மூவேந்தர் பெயர்கொண்ட ஆய்வாளர், பல்லாண்டுக் காலமாக அந்த ஊரைச் சுற்றியுள்ள ஸ்டேஷன்களிலேயே மாறி மாறி பணியாற்றிவருகிறாராம். காரணம், அங்கு அவருக்குக் கிடைக்கும் வளமான வருமானம்தான் என்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ‘மூவேந்தர்’ இன்ஸ்பெக்டரின் ஆசியுடன் ஆளுங்கட்சிப் புள்ளிகள் ‘பார் ஆட்டோ’ என்ற புது கான்செப்ட்டில் மது விற்பனையை அமல்படுத்தியிருக்கிறார்களாம். மூன்று ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து, அதை மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்களாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

அந்த ஆட்டோக்களில் மதுபாட்டில்கள், சைட் டிஷ், கப், தண்ணீர் பாட்டில் என்று சகலமும் இருக்குமாம். ஆட்டோவுக்கு இருபுறமும் படுதாவை இறக்கிவிட்டு, உள்ளே சரக்கு ஐட்டங்களை வைத்திருப்பவர்கள், 24 மணி நேரமும் சர்வீஸ் செய்வதால் விற்பனை ஜோராக இருக்கிறதாம். இது ஆய்வாளரின் ஆசியோடு நடக்கும் விஷயம் என்பதால், அந்த ஆட்டோக்களை போலீஸார் கண்டுகொள்வதில்லையாம். சம்பவத்தைக் கேள்விப்படும் பிற ஸ்டேஷன் போலீஸார், தலையில் அடித்துக்கொள்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

பைபாஸ் ரோடு... எஸ்.ஐ கணவரின் பலே வசூல்!

தஞ்சை காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் எஸ்.ஐ-யின் கணவர், ‘ஃபிராடு செய்வதில் ஒரு பல்கலைக்கழகம்’ என்கிறார்கள். ஏற்கெனவே மணல் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர், தற்போது மனைவி பணிபுரியும் காவல் நிலையத்தின் தலைமைக் காவலரை அழைத்துக்கொண்டு, பை பாஸ் சாலையில் வாகனச் சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருகிறாராம். சமீபத்தில் எம் சாண்ட் ஏற்றிவந்த லாரி டிரைவரிடம், மணல் ஏற்றி வந்ததாகக் கூறி வலுக்கட்டாயமாகப் பணத்தைப் பறித்து இருவரும் பங்குபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். கோபமடைந்த லாரி உரிமையாளர், இதை உயரதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்க... பதறிப்போன பெண் எஸ்.ஐ., தன் கணவரைக் காப்பாற்ற லாரி உரிமையாளரிடம் சமாதானம் பேசிவருகிறாராம். இருப்பினும், ‘‘இதை நான் சும்மாவிடப்போவதில்லை’’ என்று லாரி உரிமையாளர் விடாப்பிடியாக இருப்பதால், கணவரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் அந்தப் பெண் எஸ்.ஐ. இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட சக போலீஸார் ‘பயப்படுறியா குமாரு?’ என்று கிண்டலடிக்கிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘கலகக்குரல் கிளப்பியும் பயனில்லையே!’’

தென் மாவட்ட முக்கிய நகரின் பிரசித்திபெற்ற கோயில். அதன் பாதுகாப்புப் பணியில் நீண்டகாலமாக இருந்துவருகிறார் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர். கடந்த ஆட்சியில் வி.ஐ.பி-க்கள் கோயிலுக்கு வரும்போது, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்கள் மூலம் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டாராம். அதிலும் அந்த நகரில் பிசினஸ் செய்துவரும் ராஜஸ்தான் புள்ளி ஒருவர் மூலம் இலைக் கட்சியின் பணிவானவரிடம் அறிமுகமாகி, பல வேலைகளை முடித்து, பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டார் என்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலின்போது, காவல்துறையினரின் வாட்ஸ்அப் குரூப்பில் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுவந்திருக்கிறார். அதனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பந்தாடப்படுவார் என்று காக்கிகள் பலரும் காத்திருக்க... ராஜஸ்தான் புள்ளி மூலம் தி.மு.க முக்கியஸ்தர்களின் ஆதரவைப் பெற்று, அதே கோயில் டூட்டியில் தொடர்ந்திருக்கிறார். ‘அவரை அங்கிருந்து மாற்றியே ஆக வேண்டும்’ என்று காக்கிகளிடமிருந்து கலகக்குரல் கிளம்பிய பிறகே, அவரை மாறுதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அதிக டென்ஷன் இல்லாத பணியிடம் அவருக்கு ஒதுக்கப்பட, ‘‘கலகக்குரல் கிளப்பியும் பயனில்லையே!’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நெல்லை போலீஸார்!

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்கிறார்கள் நெல்லை மாநகரக் காவல்துறையினர். சமீபத்தில் பைக் திருடியதாக சுலைமான் என்பவரை, பொதுமக்களே பிடித்துவந்து நெல்லை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கைதுசெய்யப்பட்ட சுலைமான், நெஞ்சு வலிப்பதாகச் சொன்னதால், மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் சுலைமான் உயிரிழந்ததால், லாக்அப் மரணம் நடந்துவிட்டதாகத் தகவல் பரவியது. இதனால், பதறிப்போன இன்ஸ்பெக்டர் சாம்சன், ‘சம்பவம் நடந்தபோது நான் எலெக்‌ஷன் டூட்டியில் வெளியில் இருந்தேன்’ என்று பதறினார். அதற்குள், தாமிரபரணி ஆற்றில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் பரவியது. அது பற்றி போலீஸார் விசாரித்தபோதுதான், ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டு பைக் திருடியபோதுதான் சுலைமான் மாட்டிக்கொண்ட விவரம் தெரியவந்திருக்கிறது. இதனால், உயிரிழந்த சுலைமானுக்கு ஆதரவாக யாரும் பிரச்னை செய்யவில்லை. ‘நல்லவேளை..!’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள் நெல்லை ஹை கிரவுண்ட் காவல் நிலைய அதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

வழக்கறிஞரிடம் பேரம் பேசிய கட்டப்பஞ்சாயத்து மன்னன்!

திருச்சி மாநகரத்தில் சிறப்புப் பிரிவு ஒன்றில் பணியாற்றும் புராண நாயகனை, ‘கட்டப்பஞ்சாயத்து மன்னன்’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். பணம் வசூலிக்கத் தனி டீமே வைத்திருக்கிறாராம். சமீபத்தில், மோசடி நிதி நிறுவனம் ஒன்றின் வழக்கறிஞரிடம் இவர் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ‘இது மாதிரியான நிறுவனங்கள் இருக்கும் வரையில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தேவையானவற்றைச் சீக்கிரம் செஞ்சு கொடுத்துவிடு’ என்று வழக்கறிஞர் சொல்ல... ‘சரிங்க... சரிங்க...’ என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, தனது அலுவலகத்துக்குச் சில பொருள்களை வாங்கித் தரும்படி கேட்கிறார். ஆடியோ வெளியான பின்பும்கூட நடவடிக்கை எடுக்கப்படாததற்கு, மாநகரின் வி.ஐ.பி-க்கு இவர் சகலமுமாகச் செயல்படுவதுதான் காரணம் என்கிறார்கள் சக காவலர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism