Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

10 போலீஸ் கஸ்டமர்களும்... தப்பிச் சென்ற 9 பெண்களும்!

டெல்டா நகரம் ஒன்றில் பாலியல் தொழில் படு பிஸியாக நடப்பதாகப் புகார்கள் வரிசைகட்டவே... நகரின் சில லாட்ஜுகளில் திடீர் ரெய்டு நடத்த மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக அந்த நகரத்தின் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 10 பேர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, ‘விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது; ரகசியம் காக்கப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிடப்பட்டது. திட்டமிட்டதுபோல ரெய்டுக்குக் கிளம்பியது தனிப்படை... அப்போதுதான் கடைசி நேரத்தில் வந்த ஒரு போன் காலில், “ஐயா... ரெய்டு விஷயம் லீக் ஆகி, மூணு லாட்ஜுல இருந்த ஒன்பது பாலியல் தொழில் செய்யுற பெண்கள் பின்னாடி வாசல் வழியா தப்பிச்சு போயிட்டாங்க!” என்று லாட்ஜுகளை வாட்ச் செய்துகொண்டிருந்த போலீஸ் ஒருவர் தகவல் கொடுத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சில புரோக்கர்களிடம் விசாரித்ததில், “இந்த ஊருல உங்க டிபார்மென்ட்டுலயே பத்து பேர் எங்க கஸ்டமர். அப்புறம் எப்படித் தகவல் கசியாம இருக்கும்?” என்று சொல்லி கிறுகிறுக்கவைத்திருக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“இன்ஸ்பெக்டரை மாற்றுகிறேன் பார்!” - மணல் அள்ளும் ஏட்டு சவால்...

தஞ்சாவூர் - திருச்சி சாலையிலிருக்கும் காவல் நிலையத்தில் எஸ்.பி ஏட்டாகப் பணிபுரிபவர் சட்டவிரோதமாக மணல் அள்ளும் தொழில் சுத்தத்தைப் பார்த்து மணல் கடத்தல்காரர்களே வாய்பிளக்கிறார்கள். தனது தொழில் பார்ட்னருடன் சேர்ந்து ஏழு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பவர், அய்யானபுரம் காவிரி புது ஆற்றில் மணல் அள்ளி தனது நிலத்தில் வைத்து பகிரங்கமாக விற்பனை செய்துவருகிறார். இதுநாள் வரை தனது ஸ்டேஷனில் அத்தனை பேருக்கும் தவறாமல் மாமூல் கொடுத்துவந்ததால், யாரும் இவரது மணல் விற்பனையைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் இவரது ஸ்டேஷனுக்குப் புதிதாக பணிக்குச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கறாராக இருப்பதால், இவரது பிசினஸ் எடுபடவில்லை. இதையடுத்து, “எப்படியாவது இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்ஃபர் செய்யவைக்கிறேன் பார்...” என்று சக போலீஸாரிடம் சவால்விட்டிருக்கிறாராம் ஏட்டு!

ஜூனியர் வாக்கி டாக்கி

3 கிலோ கஞ்சா 50 கிராம் ஆனது எப்படி?

கரூர் மாநகரத்தையொட்டி இருக்கும் ஸ்டேஷனில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் ‘மாவீரர்’ பெயர்கொண்டவர். ஏற்கெனவே இதே மாவட்டத்தில் வேறொரு ஸ்டேஷனில் இவர் பணிபுரிந்தபோது லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வெளி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டிருந்தவர், ஆறு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் இங்கு வந்திருக்கிறார். வந்த சில மாதங்களிலேயே இவர்மீது புகார் கிளம்பியிருக்கிறது. கடந்த வாரம் தனது ஸ்டேஷன் எல்லைக்குள் கஞ்சா விற்ற ஒருவரைப் பிடித்து, மூன்று கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தவர், “மூணு கிலோ கஞ்சான்னா தண்டனை அதிகம்... பரவாயில்லையா?” என்று பேரம் பேசியவர், 70 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக்கொண்டு, 50 கிராம் கஞ்சா மட்டுமே அவர் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்திருக்கிறார். மீதமிருந்த கஞ்சாவையும் தனக்கு வேண்டியவர்கள் மூலம் விற்று, காசாக்கியிருக்கிறார் அந்த ஆய்வாளர். இது குறித்து உயரதிகாரிகளுக்கும் புகார் சென்ற நிலையில், நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காத்திருக்கிறார்கள் நேர்மையான காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

குட்கா ஆசாமிகளிடம் பணம் பறிப்பு! ஊட்டி எஸ்.எஸ்.ஐ மீது புகார்...

நீலகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனையைத் தடுக்க, மாவட்ட காவல்துறை அடிக்கடி ரெய்டுகளை நடத்திவருகிறது. அதன்படி ஊட்டி நகரிலுள்ள ஒரு குடோனில் சோதனை செய்த போலீஸார், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஏராளமான குட்காவைப் பறிமுதல் செய்து இருவரைக் கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ ஒருவர், குட்கா ஆசாமிகள் வைத்திருந்த கணிசமான தொகையைப் பறித்துக்கொண்டு, தொகையை வழக்கில் சேர்க்கவில்லையாம். இது பற்றி எஸ்.பி அலுவலகம்வரை புகார் சென்றிருக்கும் நிலையில், திருடனுக்குத் தேள் கொட்டியதுபோலத் தவித்துவருகிறார் அந்த எஸ்.எஸ்.ஐ!

ஜூனியர் வாக்கி டாக்கி

“உன்னை நம்பித்தான் கார் வாங்கியிருக்கேன்!” - இன்ஸ்பெக்டர் - ஏட்டு பலே டீல்...

வெயிலடிக்கும் கோட்டை மாநகரின் தெற்கு இன்ஸ்பெக்டர், தனது மாமூலை நம்பியே சமீபத்தில் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வங்கிக் கடனில் வாங்கியிருக்கிறார். விரைவில் தனக்கு டி.எஸ்.பி பதவி உயர்வு கிடைக்கவிருப்பதாகச் சொல்பவர், மணல் திருட்டு முதல் லாட்டரி பிசினஸ் செய்பவர்கள் வரை மாமூல் வசூலிக்க ஏட்டு ஒருவரை நியமித்து அவரிடம், “யோவ், உன்னை நம்பித்தான் கார் வாங்கியிருக்கேன். டியூ கட்டணும்... நல்லபடியா மாமூலை வசூல் பண்ணி கொடுய்யா” என்று சொல்லியிருக்கிறாராம். இதற்கிடையே மொத்த மாமூலும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் ஏட்டுவுக்குமே செல்வதால், பங்கு கிடைக்காத கடுப்பில் மேலிடத்தில் போட்டுக்கொடுத்திருக்கிறார்களாம் சக காக்கிகள்!