Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- 'இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- 'இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

“அனுசரிச்சுப் போகணும்!” - வீடியோவில் வந்த வில்லங்கம்...

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தின் எஸ்.ஐ சிங்காரவேல், ஏட்டு பிரான்சிஸ் இருவரும் பெண் சாராய வியாபாரி ஒருவரைப் பிடிப்பதற்காகச் சென்றிருக்கிறார்கள். அப்போது அந்தப் பெண் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால், பதறிப் போனவர்கள் மேலும் விபரீதம் ஏற்படாமல் தடுத்துவிட்டார்கள். அதன் பிறகு அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ ஒன்று, காவல்துறை வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது. அதில், ‘‘என்கிட்ட அந்த ஏட்டும் எஸ்.ஐ-யும் ‘அன்னைக்கே எங்களை அனுசரிச்சுப் போயிருந்தா, இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. இது தேவையா?’னு கேட்டாங்க. ‘அனுசரிச்சுப் போறதுன்னா என்னா?’னு நான் கேட்டதுக்கு... ‘அனுசரிச்சுப் போறதுன்னா, அதுதான்... அந்த மேட்டர்தான்?’னு சொன்னாங்க. போலீஸ்காரங்களே இப்படி நடந்துக்கலாமா?’’ என்று பேசியிருக்கிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காக்கிகளிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்க, ‘‘நாங்க அப்படியெல்லாம் பேசவே இல்லை. அந்த லேடி வில்லங்கமான ஆளு... பொய் சொல்லுது’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘யார் சொல்வது உண்மை?’ என்று ஏரியாவில் பெரும் விவாதமே நடக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

மணல் மாமூல்... டீக்கடையில் வசூல்!

தஞ்சாவூர் அருகே, ‘பேட்டை’ காவல் நிலையத்தின் அருகிலுள்ள டீக்கடை ஒன்றுதான் மணல் லாரிகளிடம் மாமூல் வசூலிக்கும் மையமாக மாறியிருக்கிறது. டீக்கடையிலேயே டேரா அடிக்கும் சுந்தரமான போலீஸ்காரர் ஒருவர், ஒன்றரை யூனிட் கொண்ட ஒரு மணல் லோடுக்கு 2,000 ரூபாய் வீதம் மாமூல் வசூலிக்கிறார். இப்படி ஒரு நாளைக்கு சுமார் 50 லாரிகளிடம் மாமூல் வசூலித்து பணத்தை ஸ்டேஷனிலுள்ள அனைவருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்துவிடுவதால் மொத்த ஸ்டேஷனும் ஹேப்பியாம்! இதையடுத்து, இந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி வர மாவட்டத்தில் கடும் போட்டியே நடக்கிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

அடாவடி பெண் காக்கி... கொதிப்பில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தின் ‘நியூ’ காவல் நிலையத்தில் பணியாற்றும் வீரமான பெண் அதிகாரியின் அடாவடியால் ஏரியா மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அந்நியக் களை மரங்களை (Invasive Trees) வெட்டுவதற்கான உரிமம் பெற்ற மர வியாபாரி ஒருவர், வருவாய்த்துறையினர் சிலர் மாமூல் கேட்டுத் தன்னை தொந்தரவு செய்கிறார்கள் என்று இந்தப் பெண் அதிகாரியிடம் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், பெண் அதிகாரி ‘கோட்’ செய்த மாமூலைக் கேட்ட மர வியாபாரி மிரண்டே போய்விட்டார். இதையடுத்து மாமூல் கொடுக்க மறுத்த அந்த வியாபாரி மீதே வழக்கு பதிவு செய்த பெண் அதிகாரி, இந்த விவகாரத்தில் தொடர்பே இல்லாத அவரின் மகன்மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார். இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி, ஸ்டேஷனுக்குப் புகார் அளிக்க வரும் பலரிடமும் இவர் கட்டப்பஞ்சாயத்து செய்துவருவதால், “ஸ்டேஷனில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ய வேண்டும்” என்று கொந்தளிக்கிறார்கள் உள்ளூர் மக்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘காக்கிச்சட்டை போட்டதே கல்லாகட்டத்தான்!’

கரூர் மாநகரின் ‘பசுமை’ காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் டயலாக் ஒன்று ஏரியா காக்கிகள் வட்டாரத்தில் ஃபேமஸ் ஆகிவிட்டது. சக காக்கிகளிடம் அவர், “காக்கிச்சட்டை போட்டதே கல்லாகட்டத்தான். நாம காக்கி உடுப்பைக் கழட்டுறதுக்குள்ள நாலு காசைச் சேர்த்துப்புடணும். அப்பதான், கடைசி காலத்துல நிம்மதியா கஞ்சி குடிக்க முடியும்” என்று பஞ்ச் டயலாக் பேசியே மாமூலைக் குவிக்கிறாராம். இதனால், இவரது லிமிட்டில் மட்டும் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் தங்கு தடையின்றி இயங்குகின்றன. ஸ்டேஷன் லிமிட்டில் ஓடும் ஆற்றிலும் இரவு பகலாக மணல் கொள்ளை தொடர்கிறது. இவரால் நேர்மையாகச் செயல்பட நினைக்கும் காக்கிகள் சிலரும் கரப்ஷன் ஆகிவிடுகிறார்கள் என்ற முணுமுணுப்பு காக்கிகள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஜூனியர் வாக்கி டாக்கி

போதைப்பொருள் கடத்தல் மாமூல்... கைகோத்த காக்கிகள்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ போதைப்பொருளை சமீபத்தில் க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, எட்டு பேரைக் கைதுசெய்தார்கள். இந்தக் கோட்டத்திலுள்ள இரண்டு காவல் நிலையங்களிலிருந்து மாவட்ட உயரதிகாரிக்குத் தகவல் சொல்ல வேண்டிய இருவர், கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்கிக்கொண்டு உயரதிகாரியின் கவனத்துக்குத் தகவலே சொல்வதில்லையாம். இடையே இருக்கும் மற்றோர் உயரதிகாரிக்கும் கவனிப்புகள் செல்வதால் அவரும் இதைக் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இப்படிக் கண்டுகொள்ளாததால்தான், ‘க்யூ பிரிவு’ போலீஸார் உள்ளே புகுந்து போதைப்பொருள் கும்பலைக் கைதுசெய்துள்ளனர். இதையடுத்து, இது போன்று லோக்கல் போலீஸார் தவறவிட்ட பல கடத்தல் சம்பவங்களைப் பட்டியலிட்டு, நேர்மையான காக்கிகள் சிலர் மாவட்ட காவல் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்!