Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

வேலுமணியை டச் செய்ய தயக்கம்... தூக்கியடிக்கப்பட்ட உதவி கமிஷனர்!

கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனராக இருந்த சுகுமார் சமீபத்தில் சத்தியமங்கலம் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜனவரி 30 காந்தி நினைவுநாள் அன்று சி.பி.எம் மற்றும் சில அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில், ‘காந்தியைக் கொன்றது கோட்சே’ என்று சிலர் பேசியபோது அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் சுகுமார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்காகதான் அவர் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், இதுபற்றிப் பேசும் போலீஸ் அதிகாரிகள் சிலர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய தினம் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி கைதுசெய்ய உத்தரவு வந்தநிலையில், உதவி கமிஷனர் சுகுமார் தயக்கம் காட்டவே... இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் மேலிடத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்துதான் இப்போது அவரை அதிரடிப் படைக்கு தூக்கியடித்துவிட்டார்கள்” என்றார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கைவிட்ட மன்மத காக்கி... மூடப்பட்ட தற்கொலை வழக்கு!

வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், பிப்ரவரி 25-ம் தேதி இரவு காவலர் குடியிருப்பிலேயே தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் வெளியூரில் வேலைசெய்கிறார். பெண் காவலரின் தற்கொலைக்குக் காரணம், ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் காவலர் ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது. பெண்கள் சகவாசம் அதிகமுள்ள அந்தக் காவலர், இந்தப் பெண் காவலரையும் தனது வலையில் வீழ்த்தியிருக்கிறார். இதில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த பெண் காவலர், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் ஆண் காவலருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, தூக்கில் தொங்கியிருக்கிறார். இந்த விவகாரம் வெளியில் கசிந்தால் காவல்துறையின் மானம் போய்விடும் என்று கருதிய உயரதிகாரிகள், எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு, குடும்பத் தகராறு என்று தற்கொலை வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள்!

அதிக மாமூல் கொடுத்தால் சிறப்புச் சலுகை! - இன்ஸ்பெக்டரின் அடடே திட்டம்

அரியலூர் மாவட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘சுருட்டும்’ விஷயத்தில் சுறாமீன் வேகத்தைக் காட்டுகிறார். இவரது எல்லைக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் மாதம் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை மாமூல் வசூலிப்பவர், அதுவும் போதவில்லை என்று செய்த காரியம்தான் பக்கத்து ஏரியா போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி பேசும் காவலர்கள் சிலர், “ஏற்கெனவே கஞ்சா, கள்ளச்சாராயம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டு, விலகியவர்களை மீண்டும் தொழிலுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்துகிறார். மாமூலை அதிகமாகக் கொடுக்கும் நபர்கள் சட்டவிரோத தொழிலில் சந்திக்கும் பிரச்னைகளை, தானே முன்னின்று தீர்த்துவைப்பதாகவும் சிறப்புச் சலுகைகளை அளித்துள்ளார்” என்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘என் நேர்மை மீதே சந்தேகமா?’’ - டீல் பேசிய எஸ்.ஐ அந்தர்பல்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் சில கும்பல்கள் கிராமங்களுக்கு காரில் சென்று ஆடு திருடிவந்தன. இதில், சிவகங்கையைச் சேர்ந்த ஒரு கும்பல் பிடிபட்ட நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற மூன்று லட்சம் ரூபாய் டீல் பேசியுள்ளார் விளாத்திகுளம் எஸ்.ஐ கங்கைநாதப் பாண்டியன். அவர் டீல் பேசிய ஆடியோ லீக் ஆனதை அடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், ‘‘டீல் பேசுவதுபோல பேசி மொத்த கும்பலையும் பிடிக்கத் திட்டமிட்டிருந்தேன். என் நேர்மை மீதே சந்தேகப்பட்டதால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று கடிதம் எழுதி நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமாருக்கு அந்த எஸ்.ஐ அனுப்பியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல், எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்ததுடன், அவர்மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார் டி.ஐ.ஜி. இதற்கிடையே அந்த ஆடியோவில், ‘உயரதிகாரிகிட்ட மூணு லட்சம் தர்றதா சொல்லியிருக்கேன்’ என்று எஸ்.ஐ பேசியது பற்றியும் தீவிர விசாரணை நடந்துவருகிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

சிறுமியைச் சீரழித்த காவலர்... மூடி மறைத்த அதிகாரிகள்!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் மைனர் சிறுமி ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறி, தன் காதலனை தேடிப் போயிருக்கிறார். அந்தச் சிறுமியைக் காதலன் ஏற்றுக்கொள்ள மறுக்கவே... ஏமாற்றத்துடன் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். இந்தத் தகவல் அந்த ஊரின் காவல் நிலையத்தை எட்ட, காவலராக இருக்கும் தன் மாப்பிள்ளையையும், சிறுமியின் உறவுக்கார இளைஞர் ஒருவரையும் சிறுமியை மீட்டு வர அனுப்பியுள்ளார் உதவி ஆய்வாளர். அழைத்து வரும் வழியில் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைச் சீரழித்திருக் கிறார்கள். ஊருக்கு வந்ததும் இது குறித்து, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சிறுமியின் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கிருந்த போலீஸார் புகாரை பதிவுசெய்யாமல், விஷயத்தை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ்.ஐ-யிடம் சொல்ல... சிறுமியின் குடும்பத்தினரிடம், ‘காசு தர்றோம்... போலீஸ் கேஸுன்னு போகக்கூடாது’ என்று மிரட்டிய எஸ்.ஐ, இந்த விவகாரத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினரை மட்டும் சிறைக்கு அனுப்பியிருக்கிறார். விவகாரம் எஸ்.பி அலுவலகம் வரை செல்ல... சிறுமியைச் சீரழித்த அந்தக் காவலரை வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்து பிரச்னையை மறைத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism