Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘மாமூல் கொடுத்துட்டுதான் தொழில் பண்றோம்!’’ - மல்லுக்கு நின்ற கஞ்சா கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தான காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதிதான், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை கேந்திரமாக இருக்கிறதாம். இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் ‘மகிழ்ச்சியான’ காவலர், ‘எஸ்.ஐ-ல இருந்து எஸ்.பி வரைக்கும் காசு கொடுக்கணும்’ என்று கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களிடமிருந்து மாதம்தோறும் கணிசமான தொகையை வசூலித்து டைரியில் கணக்கு வைத்துக் கொள்வாராம். இந்நிலையில், தேனியைச் சேர்ந்த ஒரு கஞ்சா கும்பலை ஸ்பெஷல் டீம் போலீஸார் சமீபத்தில் வளைத்துப் பிடித்து விசாரிக்க, ‘எங்களை எப்படி நீங்க பிடிக்கலாம்... மாசா மாசம் பத்தாயிரம் ரூபாயை கான்ஸ்டபிள்கிட்ட கொடுத்துட்டுதான் தொழில் பண்றோம்’ என்று மல்லுக்கு நின்றிருக்கிறார்கள். கஞ்சா கும்பலைக் கைதுசெய்து உள்ளே தள்ளிய ஸ்பெஷல் டீம் போலீஸார், வசூல் காவலர் குறித்தும் உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வரையில் நடவடிக்கை பாயாததால், தெம்புடன் சுற்றிவருகிறார் அந்த மகிழ்ச்சியான காவலர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ரௌடிகளுடன் டீல்... தனிப்படை தனி ரூட்!

வேலூர் எஸ்.பி-யின் சிறப்புத் தனிப்படையில் பணிபுரியும் காவலர்கள் சிலர், குற்றவாளிகளுடன் டீலிங்கில் இருப்பது ஆடியோக்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய ‘பஞ்சர்’ மணி என்ற நபரிடம், எஸ்.பி ஸ்பெஷல் டீம் காவலர் ஒருவர் பேசும் ஆடியோ வெளிவந்த நிலையில், ‘பஞ்சர்’ மணி கைதானபோது அவரது டூ வீலரை ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த ‘மில்க்’ ஏட்டு, சாராய வியாபாரி ஒருவரிடம் ரூ.7,000-க்கு விற்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசிக்கடத்தல் விவகாரத்திலும், குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி எஸ்.பி-யின் பெயரைச் சொல்லி அந்த ஏட்டு வக்காலத்து வாங்கியிருக்கிறார். இது பற்றித் தகவலறிந்த எஸ்.பி ராஜேஸ்கண்ணன், ‘மில்க்’ ஏட்டின் செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்தபோது, சிறையிலிருக்கும் ரௌடிகள் முதற்கொண்டு குற்றவாளிகள் பலருடனும் நட்பு பாராட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, ஸ்பெஷல் டீமில் இருக்கும் ‘கிங்’ எஸ்.ஐ-யும் ‘ஏ’ ப்ளஸ் ரௌடிகள் முதற்கொண்டு கொலைக் குற்றவாளிகள் வரை டீல் பேசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், தனி ரூட்டில் செல்லும் தனிப்படையைக் களையெடுக்க எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மூடிமறைக்கப்பட்ட ஆபாச வீடியோ மிரட்டல்!

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரில் பணியாற்றிய அரசுப் பெண் ஊழியர் ஒருவர், சமீபத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆளுங்கட்சியைச்‌ சேர்ந்த இரண்டு நிர்வாகிகள், ஓர் உறுப்பினர் என மூவர் சேர்ந்து அப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி தொடர் தொந்தரவு செய்ததாலேயே, அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகத் தற்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘‘இந்தத் தற்கொலைச் சம்பவம் நடந்தபோது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லீவில் இருந்தார். அதைப் பயன்படுத்திக்கொண்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள் இருவர், தங்களுக்கு விசுவாசமான பக்கத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை அணுகியிருக்கிறார்கள். அன்றைய தினம் பொறுப்பு இன்ஸ்பெக்டராக இருந்த அவர், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் லீவை, லாங் லீவாகத் தொடரச் செய்திருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிவைத்த கடிதம், அவரின் செல்போன், ஆபாச வீடியோ அனைத்தையும் கைப்பற்றி அழித்துவிட்டார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரையும் மிரட்டி சைலன்ட் ஆக்கிவிட்டார்’’ என்று காவல்துறை வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள். ‘‘இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏரியா மக்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

எஸ்.எஸ்.ஐ - ஏட்டு வசூல் கூட்டணி!

மயிலாடுதுறை மாவட்டத்தில், பழைய வில்லன் நடிகர் பெயரைக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பணிபுரிகிறார். அங்குள்ள பல ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக மாறி மாறிப் பணியாற்றிவருபவர், எந்த ஸ்டேஷனுக்குச் சென்றாலும் ‘ரைட்டர்’ பதவியைக் கைப்பற்றிவிடுவாராம். ‘‘கனகச்சிதமாகப் பணம் வசூலிப்பதிலும், மேல்மட்டத்தை ‘எல்லா’ வகையிலும் கவனித்து விடுவதிலும் கில்லாடி என்பதால், இவருக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் நல்ல செல்லாக்கு. இதுமட்டுமல்லாமல், இந்த எஸ்.எஸ்.ஐ., தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தனது வலதுகரமான போராளித் தலைவர் பெயர்கொண்ட ஏட்டு ஒருவரையும் டிரான்ஸ்ஃபரில் வரவழைத்துவிடுவார். ஸ்டேஷனுக்கு வரும் வில்லங்கப் புகார்களை அந்த வலதுகரம்தான் விசாரிக்கச் செல்வார். ஸ்பாட்டிலேயே பேரம் பேசி கேஸை பைசல் செய்துவிடுவார். புகார் கொடுத்தவருக்கு ஒரு நிவாரணமும் கிடைக்காது. ஆனால், ரைட்டர்-ஏட்டு கூட்டணி பெரும் பணம் பார்த்துவிடும். கொடுக்க வேண்டியதை அனைவருக்கும் சரியாகப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவதால், சிக்கலில்லாமல் இந்தக் கூட்டணியின் வசூல் வேட்டை தொடர்கிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘ஒத்துழைச்சா பரிசு... இல்லைன்னா பனிஷ்மென்ட்!’’

டெல்டா மாவட்டக் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் பழைய குணச்சித்திர நடிகர் பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர், பெண் காவலர்களிடம் எல்லைமீறி நடந்துகொள்வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன. தனக்கு ஒத்துவராத பெண் காவலர்களைப் பணிரீதியாக டார்ச்சர் செய்துவருகிறாராம். அதேசமயம் தனக்கு ஒத்துழைக்கும் பெண் காவலர்களுக்குப் பரிசுகள் வாங்கிக் கொடுக்கவும் தவறுவதில்லையாம். சமீபத்தில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பெண் காவலர் ஒருவரை ஷோரூமுக்கு நேரடியாக அழைத்துச் சென்று புது டூ வீலர் ஒன்றைப் பரிசாக வாங்கிக்கொடுத்திருக்கிறாராம். ‘எனக்கு ஒத்துழைச்சா பரிசு... இல்லைன்னா பனிஷ்மென்ட்தான்!’ என்று வெளிப்படையாகவே அந்த இன்ஸ்பெக்டர் பேசிவருகிறாராம். அத்துடன், காவல்துறை உயரதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி, ‘அவரும் நானும் ஒண்ணா படிச்சவங்க. அவர் எனக்கு ஃப்ரெண்ட். அதனால, என்மேல என்ன புகார் போனாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்’ என்று தெனாவெட்டாகவும் பேசிவருகிறாராம். நாளுக்கு நாள் இன்ஸ்பெக்டரின் செயல் எல்லைமீறுவதால், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல முடியாமல் புலம்பிவருகிறார்கள்!