Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- `இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

அக்கா - தங்கை அடிதடி... லஞ்சம் வாங்கிய காக்கியைவைத்தே கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க மகளிரணிப் பொறுப்பில் இருக்கும் அக்காவுக்கும், சமீபத்தில் தி.மு.க-வுக்குச் சென்ற அவரின் உடன்பிறந்த தங்கைக்கும் இடையே ஏற்படும் தொடர் மோதல்கள் மக்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றன. இது தொடர்பாக ஏற்கெனவே சில வழக்குகளும் இருக்கின்றன. இந்த நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு இரு தரப்பினரும் அடியாட்கள் சகிதம் சாலையில் கடுமையாக மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில், இரு தரப்பினர்மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்த அக்கா தரப்பு, தங்களைப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதையறிந்து கடுப்பான முதல் நிலை அதிகாரி, பணம் வாங்கிய அதிகாரியைவைத்தே அந்த அக்காவின் கணவரைக் கைதுசெய்ய வைத்திருக்கிறார். இதனால், “இதென்ன புது ரூட்டா இருக்கே!” என்று ஜெர்க் ஆகியிருக்கிறார்கள் லஞ்சத்தில் புரளும் காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ரெளடிக்கு கேக் ஊட்டிய காக்கிகள்! - தூக்கியடித்த மாவட்ட எஸ்.பி...

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி வைகுண்டம், சில நாள்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணியன் ஆகியோர் அந்த ரெளடிக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு ரெளடிக்கு சால்வை போர்த்தி, கேக் ஊட்டிவிட்டு விழாவைச் சிறப்பித்திருக்கிறார்கள். இரண்டு காக்கிகளும் கேக் ஊட்டிவிடும் போட்டோ மற்றும் வீடியோவை மற்றொரு காக்கி தரப்பு மாவட்ட எஸ்.பி-க்கு அனுப்ப... கடுப்பான எஸ்.பி., இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ரெளடிகளுடன் நெருக்கம் காட்டிவரும் காக்கிகள் கலக்கத்தில் உள்ளனர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“ஆட்டுக்கு 500 ரூபாய் மாமூல்!” - எஸ்.எஸ்.ஐ மீது விவசாயிகள் காட்டம்...

தஞ்சாவூர் மாவட்டம், பழைமையான அணை அருகிலிருக்கும் காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ ஒருவர் ஆடு திருடும் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மயில்கள் ‘தோகை’ விரித்தாடும் அந்தப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 50-க்கும் அதிகமான ஆடுகள் திருட்டுப்போயுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.எஸ்.ஐ-யிடம் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அதற்கு அவரோ, “ஆடுகளுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்கத்தான் நாங்க இருக்கோமா?” என்று புகாரை வாங்காமல் திட்டி, அனுப்பிவிட்டார். இதையடுத்து, “ஆடு திருடும் கும்பலிடம் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரு ஆட்டுக்கு 500 ரூபாய் வீதம் மாமூல் வாங்கிவிடுகிறார். அதனால்தான், ஆடு திருட்டுப் புகாரை வாங்குவதில்லை” என்று புலம்புகிறார்கள் உள்ளூர்வாசிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

பூனைக்குக் குளியல்... தந்தைக்கு வாக்கிங்! - அரியலூரில் புலம்பும் காக்கிகள்...

அரியலூர் டவுன் இன்ஸ்பெக்டராக இருக்கும் அலாவுதீன், தனது வீட்டில் உயர்ரக பூனை ஒன்றை வளர்த்துவருகிறார். தினமும் பூனையைக் குளிப்பாட்டுவது தொடங்கி உணவு கொடுப்பது வரை பராமரிக்கும் வேலைகளை தனக்குக் கீழ் வேலை பார்க்கும் காவலர்கள்தான் செய்ய வேண்டும் என்று அவர் வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறாராம். தவிர, அவரது வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கிவரச் சொல்வது, அவரின் தந்தையை வாக்கிங் அழைத்துச் செல்லச் சொல்வது என்று அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் புலம்புகிறார்கள் அந்த ஸ்டேஷனின் காவலர்கள். சமீபத்தில் பெண் எஸ்.ஐ ஒருவர் அளித்த புகாரில் நீண்ட நாள் மருத்துவ விடுப்பில் சென்றார் இன்ஸ்பெக்டர். எப்படியும் அவரை வேறு ஸ்டேஷனுக்கு மாற்றிவிடுவார்கள் என்று அந்த ஸ்டேஷனின் காக்கிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் அவர் அதே ஸ்டேஷனுக்கு வரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, “ஒன்று, அவரை இடமாற்றம் செய்யுங்கள்... இல்லை, எங்களை வேறு ஸ்டேஷனுக்கு மாற்றிவிடுங்கள்” என்று உயரதிகாரிகளிடம் மன்றாடிவருகிறார்கள் காவலர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

மதுரை பாலியல் ஆசிரியர் வழக்கு... காசு பார்க்கத் திட்டமிட்ட காக்கிகள் ஏமாற்றம்!

சமீபத்தில் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பள்ளி மாணவர்களை, பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியை விவகாரத்தில் முதலில் கரிமேடு காவல் நிலையத்துக்குத்தான் புகார் வந்திருக்கிறது. ஆனால், புகாரை வாங்கிய போலீஸார் சிலர் கமுக்கமாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி, சில லட்சங்களைக் கறக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த நேர்மையான காக்கிகள் சிலர், இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனருக்குத் தகவல் கொடுக்கவே... வழக்கு உடனடியாக மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தகவலைக் கசியவிட்ட காக்கிகள் யார் என்று ஆத்திரத்துடன் விசாரித்துவருகிறதாம் லஞ்சக் காக்கிகள் டீம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism