Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி
ஜூனியர் வாக்கி டாக்கி

கள்ள மது விற்பனை... கூண்டோடு ஆக்‌ஷன்!

கள்ளச்சாராயம் மற்றும் வெளி மாநில கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காக, சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கென தனி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உட்பட 17 பேர் பணியாற்றிவந்தனர். இந்த நிலையில், ‘சீர்காழி மதுவிலக்கு போலீஸாரே கள்ள மது விற்பனைக்கு உடந்தையாக இருக்கிறார்கள்’ என்று தொடர் புகார்கள் வரவே... களத்தில் இறங்கி விசாரணை நடத்தினார் மாவட்ட எஸ்.பி நிஷா. இதில், கள்ள மது விற்பனையைத் தடுக்கவேண்டிய போலீஸாரே, பல்வேறு கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கள்ள மது விற்பனையில் கல்லாகட்டுவது தெரியவந்தது. இதனால், கடுப்பான தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் காவலர் ஹரிஹரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ததுடன், மீதமுள்ள 15 போலீஸாரையும் பல்வேறு இடங்களுக்குத் தூக்கியடித்துள்ளார். இதையடுத்து, தற்காலிகமாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கூடலூர் எஸ்.எஸ்.ஐ-க்கள் அடாவடி!

நீலகிரியில் கோடை சீஸன் களைகட்ட ஆரம்பித்திருக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து வசூல் வேட்டை நடத்திவருகிறார்கள் இரண்டு எஸ்.எஸ்.ஐ-க்கள். கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கூடலூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களைக் குறிவைக்கும் இவர்கள், கோழிக்கோடு மற்றும் மைசூரு சாலை எல்லைகளில் சோதனை என்ற பெயரில் சுற்றுலா வாகனங்களை மடக்கி, ஏதேதோ காரணங்களைச் சொல்லி கரன்சியைக் கறந்துவிடுகிறார்கள். இதில் எஸ்.பி அலுவலகம் டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் 50 வழக்குகளை மட்டுமே கணக்கில் காட்டுபவர்கள், இதர சுற்றுலா வாகனங்களிடமிருந்து வசூலிக்கும் தொகையை பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இவர்களின் அடாவடியைக் கண்டு கொதித்துப்போயிருக்கும் கூடலூர் ஓட்டுநர் அமைப்பினர், எஸ்.பி-யிடம் முறையிடத் தயாராகிவருகின்றனர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

மன்னர் - மலர் தம்பதியின் வசூல் வேட்டை!

மேற்கு மண்டல ஊர் ஒன்றில், காவல்துறையின் இரண்டு அதிகார மையங்களில் பணியாற்றும் கணவன் - மனைவி காக்கிகளின் லாபியைப் பார்த்து சக காக்கிகளே வாயடைத்துப் போயிருக்கிறார்கள். ‘மன்னர்’ பெயர்கொண்ட கணவர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும், ‘மலர்’ பெயர்கொண்ட மனைவி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பணியாற்றுகின்றனர். ஸ்டேஷன்களில் நடவடிக்கை எடுக்காத புகார்கள் தொடர்பாக எஸ்.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளிக்க வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தம்பதியர், அவர்களை மீண்டும் ஸ்டேஷனுக்கே அனுப்பிவிடுகிறார்கள். இதனால், மாவட்ட மற்றும் மாநகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் செல்வாக்குபெற்ற தம்பதியர், அதை வைத்தே பல்வேறு காரியங்களைச் சாதித்துக்கொள்வதுடன், ஸ்டேஷன்களிலிருந்தும் மாமூலைக் கறந்துவிடுகிறார்கள்!

உயரதிகாரிகளையே மிரட்டும் லேடி காக்கி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுனைச் சேர்ந்த அந்தப் பெண் அதிகாரி கள்ளச்சாராயம், சட்டவிரோத லாட்டரி விற்பனை, மணல் கடத்தல் என மொத்த மாமூலையும் தனியொருவராகச் சுருட்டிக்கொள்வதால், ஸ்டேஷனின் இதர காக்கிகள் கடுப்பில் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசும் சக காக்கிகள், “எதுக்கெடுத்தாலும் மந்திரி மகனுக்கு போனைப் போடவா... மாவட்டச் செயலாளருக்கு போனைப் போடவா?ன்னு உயரதிகாரிங்களையே அந்த லேடி மிரட்டுறாங்க. ரிட்டயர்டு ஐ.ஜி ஒருத்தரும் அந்தம்மாவுக்கு வக்காலத்து வாங்குறாரு. அதனால, அவங்களை ஒண்ணும் பண்ண முடியலை” என்று புலம்புகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’

திருச்சி ‘கோட்டை’க்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அதிகாரியைப் பார்த்து மாநகரத்தின் இதர அதிகாரிகளே மிரள்கிறார்கள். கோட்டையின் இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்த அந்த அதிகாரிக்கு 2020 இறுதியில் முதல் நிலை அதிகாரியாகப் பதவி உயர்வுடன், பணியிட மாற்றமும் கிடைத்தது. ஆனால், கோட்டையை விட மனமில்லாதவர், உயரதிகாரிகளைப் பிடித்து பழைய இடத்திலே அதிகாரியாகத் தொடர்ந்தார். கடந்த 2021 தீபாவளியில் வசூல் மழையில் நனைந்தவர், நகரத்தில் பிளாட்களை வாங்கிக் குவிக்க... தலைமைக்குப் புகார்கள் பறந்தன. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது மாவட்ட செக்யூரிட்டி பிரிவு அதிகாரியாக டம்மி போஸ்டிங்கில் தூக்கியடிக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட வி.ஐ.பி-யைப் பிடித்தவர், தற்போது மீண்டும் அதே கோட்டைக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார். இதையடுத்து, “உயரதிகாரிகளை கரன்சியால் கரெக்ட் செஞ்சு வெச்சுருக்கிறவர், கரைவேட்டி வி.ஐ.பி வரைக்கும் செல்வாக்கை வளர்த்து வெச்சுருக்காரே!” என்று வாயைப் பிளக்கிறார்கள் சக காக்கிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism