Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத், ஓவியங்கள்: சுதிர்

ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

‘நானும் கண்டுக்க மாட்டேன்... நீயும் கண்டுக்கக் கூடாது!’

முத்துக்குப் பெயர்பெற்ற மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஹோட்டல்கள், லாட்ஜுகளுடன் இணைந்த பார்களில், தனது கீழ்நிலை அதிகாரிகள் மூலம் மாதம்தோறும் ‘ஸ்வீட் பாக்ஸ்’கள் பெற்றுவருகிறாராம், அந்த மாவட்ட மதுவிலக்கு உயரதிகாரி. ஒவ்வொரு பாரின் விற்பனை, வாடிக்கையாளர்களின் வருகையைப் பொறுத்து ஸ்வீட் பாக்ஸ்களின் மதிப்பை ஃபிக்ஸ் செய்திருக்கிறாராம். ஆனால், உள்ளூர் அமைச்சருக்குச் சொந்தமான பார் பக்கம் மட்டும் இவர் போவதில்லை. ‘அந்த பாருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு?’ எனக் கேட்டுவிட்டால், உடனே மற்ற பார்கள் மீது ரெய்டில் இறங்கிவிடுகிறாராம். எனவே, மற்ற பார் உரிமையாளர்கள் இது குறித்து வாய் திறப்பதே இல்லை. இவரது அடாவடி குறித்துப் புகார் சொன்னால், உள்ளூர் அமைச்சரும் கண்டுகொள்வது இல்லை!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘பருத்தி மூட்டை, குடோனிலேயே இருந்திருக்கலாம்!’

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை எகிறிக்கொண்டிருக்க... சிலர் காரைக்காலிலிருந்து படகு வழியாக இலங்கைக்கு பெட்ரோல் கடத்தவிருப்பதாக முருகப்பெருமானின் நாமம் கொண்ட காவல் உதவி ஆய்வாளருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. கருமமே கண்ணாக விரைந்த அதிகாரி, கீழகாசாகுடிமேடு கடற்கரை குடோனிலிருந்து 1,005 லிட்டர் பெட்ரோலைக் கைப்பற்றி, முத்தீஸ் என்ற வாலிபரைக் கைதுசெய்தார். ஆனால், காவல் நிலையத்தில், ‘காந்தி’ சிரிக்கவே, பிடிபட்ட வாலிபருக்கு ராயல் சல்யூட் அடித்து விடுவித்திருக்கிறார். அத்துடன் கைப்பற்றப்பட்ட பெட்ரோல் கேன்களை குட்டி யானையில் ஏற்றி, மீண்டும் குடோனுக்குள் வைத்துவிட்டுத் திரும்பியுள்ளனர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா...!

கரூர் டு திருச்சி சாலையில் இருக்கும் ‘ஸ்வீட் கடை’ பெயர்கொண்ட ஊர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் பெண், வெளியில் நேர்மையானவராகக் காட்டிக்கொள்கிறார். ஆனால், ஸ்டேஷன் லிமிட்டிலுள்ள 30-க்கும் மேற்பட்டவர்களைச் சந்துக்கடைகளில் மதுபானங்களை விற்க வற்புறுத்துவதோடு, மாமூலையும் கறாராகக் கறந்துவிடுகிறாராம். இந்த நிலையில், அதே ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.பி ஏட்டு, எஸ்.பி சி.ஐ.டி போலீஸ் ஆகியோர் சந்துக்கடை பார்ட்டிகள் மீது ரெய்டு நடத்தி, எஸ்.ஐ மூலம் கேஸும் போட்டுவிடுகிறார்கள். ‘இந்தம்மாவை நம்பி இப்படி மோசம் போயிட்டோமே’ என்று நொந்துகிடக்கிறார்கள் சந்துக்கடை நடத்துபவர்கள்!

‘நான் போலீஸ் இல்லை...’

நெற்களஞ்சிய மாவட்டத்திலுள்ள ஓர் காவல் நிலையத்தில், போராளித் தலைவரின் பெயர்கொண்டவர் ஆய்வாளராக இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வாராம். ‘புகாருக்கான நியாயம் கிடைக்கலையே’ எனப் புகார் அளித்தவர் கேட்டால், ‘நீ என்ன செலவுக்குப் பணமா கொடுத்தே... நடவடிக்கை எடுக்க..?’ என வெளிப்படையாகவே கேட்டு வசூல் செய்துவிடுகிறாராம். இரவாகிவிட்டாலே சுதியோடுதான் ஸ்டேஷனில் இருப்பாராம். அப்போது ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம் கண்ணை மூடிக்கொண்டும், நாற்காலியில் சாய்ந்தபடியும் தியான நிலையில்தான் குறைகளைக் கேட்பாராம். ‘சினிமாவுல வர்ற வில்லன் இன்ஸ்பெக்டர்களை மிஞ்சும் அளவுக்கு அவர் நடந்துகொள்கிறார்’ எனப் புலம்புகின்றனர் ஏரியாவாசிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

விசுவாச காக்கிகள்... கசியும் ரகசியங்கள்!

கொடநாட்டை உள்ளடக்கிய காவல் மண்டலத்தின் காவல்துறை அதிகாரி ஒருவரை திடீரென இரவோடு இரவாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மேலிடம். கொடநாடு வழக்கின் கூடுதல் புலன்விசாரணை அப்டேட் குறித்து, தொடர்ந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜராகிவந்த காக்கியின் மனைவியும், அ.தி.மு.க மாஜி அமைச்சரின் மனைவியும் நெருங்கிய வகுப்புத் தோழிகளாம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட கூடுதல் புலன்விசாரணையின் ஒவ்வொரு அசைவையும், இந்த ரூட்டில்தான் தெரிந்துவந்திருக்கிறார் அ.தி.மு.க மாஜி அமைச்சர். தனிப்படையின் ரகசிய மூவ் அனைத்தும் எப்படிக் கசிகிறது என்ற குழப்பத்தில் இருந்தபோது, சக காக்கி ஒருவர் உயரதிகாரிகளிடம் இந்த விவகாரத்தைப் போட்டு உடைத்திருக்கிறார். இதை உறுதிசெய்த உயர்மட்ட காக்கிகள், இரவோடு இரவாக அவரைத் தென்மாவட்டம் பக்கம் மாற்றியிருக்கிறார்கள். இதையடுத்து, ‘எடப்பாடி விசுவாசிகள் யாரும் கொடநாடு தனிப்படையில் இருக்கிறார்களா’ என்றும் ரகசியமாக வேவு பார்த்துவருகின்றனர் ஆளுங்கட்சி ஆதரவு காக்கிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism